Sunday, October 25, 2009

அங்கம் 1

அவல்.

சூரியனுக்கு அழைப்பு விடுத்து
சேவல்கள் கூவும்.
காலை மலர்ந்தது என்று
காகங்கள் கரையும்.

மண்டலியை விழிக்கச் சொல்லி
மயில்கள் அகவும்.
இத்தனையும் கேட்டபடி
மந்தமாருதம் உலவும்.

மெல்லிய புகையாய் பனியின் மூட்டம்.
புல்லினின் மீதே அதன் தனி நாட்டம்.
மெல்ல வளைந்தே நிலத்தினை நோக்கும் - புல்
நுனியினில் தொக்கிடும் பனிநீர்த் தேக்கம்.

பொன்னலரி மொட்டுகள்
மென்மையாக முடிச்சவிழ்க்கும்.
போதை கொள்ளும் வண்டு வரச்
செவ்விரத்தம் பூச்சிரிக்கும்.

கண் குளிர வெண்மை தரும்
கல்யாணி நிதம் பூக்க - தன்
கணுக்குகள் எங்கெங்கும்
கலகலப்பாய் முகை கட்டும்.

ரோசா மொட்டுகள் இதழ் விரிக்க,
கண்டு ரோசங் கொண்ட
நந்தியாவட்டைகளின் நகை வெடிக்கும்.

கஞ்ச மொட்டுகள் கட்டவிழ்க்கப் பார்த்து
தாழை முகைகள் தமைத் திறக்கும்.
கமுகுகள் உதிர்த்த ஆடையின் இடத்தில்
புதிதாய் பிறந்த பாளைகள் மிளிரும்.

பாரம் தாக்கிய கூந்தலில் விரிந்த
தென்னம் பூக்களை அணில்கள் மேயும்.
மாவில், பலாவில் குயில்கள் கூடி
கூவிக் கூவித் தம் துணை அழைக்கும்.









பூத்த மரத்தில் சிட்டுக் குருவிகள்
தாவித் தாவித் தேனினை உறிஞ்சும்.


பட்ட மரத்துப் பொந்தில் இருந்து - எழில்
பச்சைக் கிளிகள் கொஞ்சிக் குலவும்.
எட்ட இடத்தில் ஆழிச் செவிலி
ஏக்கக் கரையில் மோதி நுரைவாள்.









காலைப் பொழுது காசினி நோக்கப்
பொழில்களைத் தேடிப் பொன்னெழில் சிந்திக்
கீழைத் திசையில் கதிரினை விரித்துக்
காதல் கதிரவன் கண் திறந்தான்.

சோம்பல் முறித்துச் சுந்தரப் பைங்கிளி
சோபை நெளிப்புடன் வெளி வந்தாள்.
ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ
அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்.

கற்றைக் குழலது காற்றிடை நெளிய
காவியப் பூங்கொடி கலகலக்க - அவள்
இற்றைத் தோழர்கள் இறக்கைகள் சிலுப்பி
இவளின் வரவை நாடின.

விடியலின் முகப்பில் வீரியம் பிறக்க
கூவலும், குதிப்பும் கூட்டுப் பரபரப்பும்
உலோக வலையை உலுக்கிப் பார்க்கும்
செந்நிறம் ஏறிய செல்ல அலகுகளும்
குறுகுறுவென சிறு குண்டுமணிகளாய்
பெருநகை காட்டும் பண்ணிசைக் கூட்டமாய்
கூட்டைப் பிரிக்கும் பேராரவாரம்.

உவகை பொங்க உள்ளகம் சிரித்தவள்
உலோக வலையைத் திறந்திட
மகிழ்முகம் ஏந்திய மண்நிறப் பஞ்சுகள்
செட்டைகள் விரித்துச் சிலிர்த்தன.
அவை
கூட்டுத்தாவல், குழுமச்சூழ்வென
கொக்கரிப்புக்களை நிறைத்தபடி
ஊட்டம் சேர்க்கும் உணவிற்காக
அவளைச் சுற்றிச் சூழ்ந்தன.










அவள்... .
இக்காவியத்தின் அவல்
கொறித்துப் பார்க்கவும், கொள்கை ஏற்றவும்,
இரசித்து நோக்கவும், இராச்சியம் காக்கவும்
மேதினி எழுந்த மேதை!

அவள் .
எழில் கொஞ்சும் குஞ்சுகளை - தன்
மொழி கொண்டு கொஞ்சுவாள்.
நல்பொழில் நோக்கில்
புலன் மயங்கித் தன்
மொழி மறந்து போவாள்.

செழிப்பான அவள் நாமம்
“செல்வி” எனச் செப்பிடுவோம்.
சலிக்காமல் அவள் கதைக்கு
சிந்தைகளைத் திறந்து வைப்போம்.

பருவகால இடப்பெயர்வால்
பட்டாம் பூச்சிப்படைகள்
பாவையிவளின் மனதை ஈர்த்து
பரபரத்துப் பறந்தன.

விழிகள் விரித்த இளைய குமரி
கைகள் உயர்த்திக் குதித்தாள்.
எட்டவில்லை என்று மீண்டும்
எம்பி எம்பிக் குதித்தாள்.

'அம்மா"
ஈனசுரத்தில் இளமங்கை
வலியகுரல் தளர்ந்தாள்.
மேனி நடுங்க, மெல்ல ஒடுங்கி
மேதினியில் பணிந்தாள்.

மொட்டொன்று சட்டென்று
முகை அவிழ்த்துக் கொண்டது.
கண்களில் மருட்சி வர
காந்த விழிகள் நிறைந்தன.
உணர்வுகளில் மாற்றம்
உதடுகள் துடித்தன.

நிமிர்ந்த தலை நிலம் நோக்க
சின்னவளின் ஆடையிலே
செம்பூக்கள் பூத்தன.
அவை மெல்ல மெல்ல
அடர்ந்து சித்திரங்கள் தீட்டின.

அடுக்களையால் வெளியே வந்த
அன்னையவள் பூரணத்தின்
அருமை மகள் நிலை உணர்ந்து
அகத்தில் களிப்பு சூழ்ந்தது.

“பூப்படைந்தாள் புதுப் பெண்ணாய்
பூரணியின் மகளாம்” என
நாப்பரப்பல் - ஊரின் நடப்பாகி நகர்ந்தது.

நண்பிகள் பட்டாளம் நகைப்பிற்கு - சில
வம்பிகள் அலைந்தார்கள்
வம்பிற்கு! - இவள்
பண்பியல் முன்னே அவையெல்லாம்
பலனற்றுப் போகுமென்று யார் நினைத்தார்?

சீர் செய்தார் தாய்மாமன்
எழில் சித்திரமாய் செல்வி.
ஊர் முழுக்க வைக்காத கண் இல்லை - தனி
உவகையே கொள்ளாத யுவன் இல்லை.

ஓவியப் பெண்ணாய் காவிய நாயகி
கருத்தில் நிறைத்த கணங்களை ஏந்தி
இரசித்தது போதும்.

மனதினைக் கவர்ந்த வனக்கிளி அவளின்
கனவினை வசைக்கும் காவலன் நாடி
காவியத் திசையில் கால்களை செலுத்தி

வாருங்கள்!.....

இன்னொரு பக்கம் இதிலுளது!
அங்குதான் இவளின் விதியுளது.

அங்கம் 2

இடர் காடு

கவனமாக வாருங்கள்!
குண்டுகளும், எறிகணையும்
உயிர் உரசி உலவும் காவலரன் மத்திக்கே
இக்காவியத்தால் நுழைய வேண்டும்!
உயிர் காப்புப் பயிற்சி உங்களுக்கு அவசியம்.

கல்வியில் சிறந்தோன் - இவன்
கலைகளால் உயர்ந்தோன்
சிந்தை நிறை பண்பினன்.
வெள்ளிச் சிலுவையைத் தாங்கியோன்!
தமிழ் அன்னைக்கு ஒரு பிள்ளை
தன் தாயிற்கு தனிப்பிள்ளை
மண்மீட்புப் பணியிலே பாலமிடும் அணிற்பிள்ளை.

ஈழ மீட்புப் போரிலே வேங்கைகள் தனிரகம்
தாய்மண் விடிவிற்காய் ஆகிடுவர் கற்பூரம்
வீரத்தில் உயர்தரம் வீம்பின்றி
செய்யும் செயல்களில் கம்பீரம்
இவர்களுடன் இணைந்த இவனும் ஒரு ரகம்.

போராடப் பிறந்தவன்
எம்மண்ணில் வேரோடிய எதிரிகளை
வேரறுக்க நிமிர்ந்தவன்.
தலைவன் சிந்தையிலே தன்னை நிறைத்தவன்
சொல்லெடுத்துப் பாடிட ஈடில்லா ஆண்மகன்.

இவனுக்கு அன்னை இட்ட பெயர்
"அன்ரனி"
எம் அண்ணன் இட்ட பெயர்
"சேது"
முன்னை எங்கள் சந்ததியர் முடியாட்சி செய்த நாடு
பின் நாளில் சிங்களத்தின் சூழ்ச்சியினால் இடர்காடு
இஃதே
இன்னவன் இதயமதில் மண்தாயை மீட்கும்
விடியல் நெருப்பேற்ற, - அதில்
இலக்கெடுத்து தனை தொடுக்க,
அதன் வழியே
இன்று இந்த காவலரன்
இவனுடைய நிலை பகரும்.

செந்நீரில் குளிக்கும் அன்னை நிலங்காக்க
விழித்த.... இவன் கண்மணிகள்
ஓய்வெடுத்துக் கனகாலம்.

வெட்ட வெளி வானத்தில் வெய்யவன் கொதித்திருப்பான்.
எட்டும் கைத் தூரத்தில் எதிரிப்படை நின்றிருக்கும்
வெட்டப்பட்ட குழிகளுக்குள் இவனும், இவன் தோழர்களும்
வெந்தணலில் வாட்டி விட்ட சுட்ட பழம் போலிருப்பர்.










திட்டமிட்டு எதிரிப்படை திக்கெட்டும் முட்டி, முட்டி
தட்டுப்பட்ட இடமெல்லாம் தாக்குதலை முன்னெடுக்கும்.
எட்டும் ஓர் அடியினிலும் எதிரி வீசும் எறிகணைகள்
பட்டுப் பட்டு வெடிக்கையிலே பல தோழர் துடித்திறப்பர்.

இத்தனையும் கண்முன்னே இமயமாய் விரிந்திருக்கும்
இவன் விழிகளில் நீர் சிறிதேனும் கசியாது
இறுகிய அகத்தினுள் சிறு தீப்பொறிகள் பூக்கும்
அவை
விழிமூடித் திறப்பதற்குள் விசுபரூபம் எடுக்கும்
விரலிடுக்கில் விசை அழுத்த துப்பாக்கி கனலும்
சடசடென்று வேட்டுகள் செருக்களத்தில் சீறும்.

எடுத்து அடி வைக்கின்ற படைகள் நோக்கிப் பாயும்
குண்டுகளால்......
அடுத்த அடி வைக்கும் எதிரி களத்தில் சாவான்.

இத்தனையும் முடிந்த பின்னால் தோழர் உடல் அணைப்பான்
தேம்பி அழும் நெஞ்சோடு தோளில் மெல்லச் சுமப்பான்.
உயிர் ஈந்த வீரர்களின் உறைவிடத்தே சென்று
தோழர் வித்துடலை விதைத்த பின்
கண்சோர்ந்து காயமது களைத்தாடும் போதே
இவன்
மெய் தாங்கும் விழுபுண்ணை மெய்யென்று உணர்வான்.

விருந்திட்டு இவனைத் தேற்ற வீரத்தாய்கள் காத்திருப்பர்
இவனோ....... மருந்திட்ட காயம் ஆற
மணித்துளிகள் போதுமென்பான்.
குறைந்த நேரம் ஓய்வெடுப்பான்
மீண்டும் விரைந்து காவலரன் நிறைத்திருப்பான்.










தோற்றோடிப் போன படை காற்றோடு கதை சொல்லும்
ஆட்காட்டிக் குருவிபோல ஆர்ப்பரித்துக் கெலிகள் வரும்
எம்மினத்தைச்....... சாக்காட்டி தொலைப்பதற்காய்
சரம், சரமாய் செல்லடிக்கும்.

மேற்கொண்டு..... "வானத்தில் பொம்மர்" என்று
வாய் சொல்லி முடிக்குமுன்னே
வாரணத்தில் வந்த படை வரிசையாகக் குண்டெறியும்.
"ம்" என்றால் எழுநூறும், எண்ணூறும்
"அம்" என்றால் ஆயிரம் ஆகாதோ?"
என்றான் கவி படைக்கும் காளமேகம் அன்று,

"ம்" என்றால் ஏழாயிரம், எண்ணாயிரம்
"அம்" என்றால் ஆயிர பதினாயிரம்
குண்டுகள் குதறும் போர்க்கால மேகமிது!
என்கிறாள் ஈழவள் இன்று

இதுவொன்றே
இயல்பென்ற வாழ்வான நிலையில்
இக்காவியக் கதை நகரும் - நிகழ்
காலங்களின் உயிர்ப்பாய். அவ்வழியில்....

நாட்காட்டி தன்னிதழைப் பொலபொலென்று உதிர்க்கும்.
நடக்கின்ற அனர்த்தங்களோ சிறிதேனும் குறையாது.

அங்கம் 3

பிரியசகி

முகாம்களின் ஓரங்களில் முற்றுகைகள் நீடிக்கும்.
மூன்று நான்கு நாட்களில் ஊருக்கு இது பழகிவிடும்.

பள்ளிகள் திறக்கும் பல்சரக்குக் கடைகளில்
வணிகம் சிறக்கும். சந்தைகள் கூடும்
சந்திகளில் புதிய சங்கதிகள் ஒலிக்கும்.

"கோ" உறையும் "இல்"களில் கொடிகள் உயரும்.
கொட்டுமேளம் கொட்டிக் கொண்டாட்டம் நிறையும்.
உடுக்கடிப்பில் கரகாட்டம் உச்சம் நோக்க,
ஊர்மனைத் திரைகளிலே நிதர்சனம் விழித்திருக்கும்.
வடமறவர் ஆட்சிக்கு வழமையான வாழ்வு இது.
-------------

காளை மாட்டின் கழுத்துமணி கிண்கிணிக்க
கிடுகும், பொச்சும் சுமக்கும் அச்சாணி வண்டிகள்,
நிலம் உழுது களை களைந்து
உற்பத்தி பெருக்கி உழைக்கும் உழவர்குலம்,

கயல் துள்ளும் கடல் நடுவே
கரையாத திடத்தோடு வலை வீசும் கடல்மைந்தர்,
பசு சுரக்கும் பால் கறந்து பக்குவமாய் சுமந்து
படலை தட்டும் பால்க்காரர்,

தேவதைகள் உலவுமுன்றல் கூட்டித்
தண்ணீர் தெளித்து தரணியிலே
கோலமிடும் தமிழ்ப்பாவையர்,
இதற்கு மேல்
அதிகாலை என்பதற்கு ஆதாரம் வேண்டுமா?

போர்க்காலச் சூழல்தான் இருப்பினும்,
ஊருக்கு இது பழகியதால்
இத்தனையும் இயல்பாய் நிகழும்.

இரட்டைப் பின்னலிட்டு
கட்டைக் கறுப்புக் குஞ்சம் கட்டி
பள்ளிச் சீருடையில்
கல்வி கற்கச் செல்வாள் செல்வி
குறுக்கொழுங்கை தாண்டிட
ஓர் எழிற்குமரி சேர்ந்திடுவாள்.

இவள் விருப்புடனே
நட்பியற்றும் பிரியசகியே இப்பூங்குழலி!

இவள் வனப்பு தாமரை அவள் அழகு அல்லி
இவள் விழிகள் கயல்கள் அவள் கண்கள் மான்கள்
உதடுகள் ரோசா இதழ்கள் என்றால்
அடுத்தவளதோ கொவ்வைக் கனிகள்.

இவளோ பிள்ளைத் தமிழ் அவளோ கிள்ளைத் தமிழ்
இருவரும் இரண்டு எழில்கள்
இணைந்தே சுற்றும் பொழில்கள்

இவளின் சித்தம் எதுவோ?
அவளின் வாயில் முத்து!
பள்ளித் தோழிகள் மட்டுமல்ல
மனதைப் பகிரும் நட்பில் இணைகள்.

சிங்களப் படைகள் என்றதும் ஏங்கிச்
சிறகை ஒடுக்கிச் சிறு புள்ளாகும்
தங்களின் வகுப்புத் தோழியர் கண்டு
தாங்கொணாக் கோபம் கொள்ளும் பூக்கள்.

எதிரியை எதிர்க்கத் துணியனும் என்பர்.
எழுச்சியில் பெண்கள் இணையனும் என்பர்.
குறைவிலா பலத்தை அடையனும் என்பர்.
இந்தக்.. .
குவலயம் மெச்சவே நிமிரனும் என்பர்.

பள்ளியில் சுட்டிப் பெண்களாய் இருந்தர்.
தலைமை மாணவக் குழுவிலும் திகழ்ந்தர்.
எள்ளென எடுத்த பொருளினை எல்லாம்
எண்ணெயாய் வடித்து ஏற்றம் பெற்றனர்.

அப்பப்போ தலைமைக் குழுவினர் கூடுவர்
அதனிலே செயற்படு திட்டங்கள் தீட்டுவர்.
இப்போதும் இங்கு இணைந்தனர் அனைவரும்
இதற்குக் காரணம் இனிவரும் சங்கதி!

இன ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து
ஈழமண் மீட்க இரும்பூத்த இன்றைய போராட்டம்!
இதனை அடக்கி ஒடுக்க இனவெறியர்
மண்ணோடு மக்களையும், வாழ்வியலையும் சிதைப்பர்
அரசியல் சூத்திரம் அறிந்தவர் அறிவர்.

மக்கள் இணைப்பே போராளிக் குழுக்கள்
மனிதத்தைக் காப்பதே தலையாய கடமை
ஊருராய் இந்நிலை எடுத்து இயம்பியே
இன்னுயிர் காக்க விழைந்தனர் புலியணி

முட்டிய வயிறுகள் ஒட்டியே ஒறுத்திட
பட்டினி நிலை வரும்
உடல் பட்டிடும் இரணத்தை ஆற்றிடும்
மருந்திற்கு அதர்மமாய் தடைகள் வரும்.

'உடனடித் தேவையும், உரிய சிகிச்சையும்
ஒருமித்து இல்லாவிடின் இதயங்கள் கதற,
உயிர் வலி மிகுந்து உடல் நிலம் சாய்ந்துவிடும்.'

விடுதலைப் புலிகளின் வீரத் தளபதி
வீரியத்துடன் உரைக்க
கூடிய மாணவமணிகள்
ஓர்கணம் மருண்டு அரண்டிருந்தர்.

உடனடிச் சிகிச்சையே உயிர் காக்கும் ஆயுதம்
அவசர வைத்தியம் அனைவரும் கற்கலாம்.
அண்டை அயலிலே குண்டினால், செல்லினால்
காயம் பட்ட உயிர்களைக் காக்கலாம்.

பள்ளிகள் தோறும் முதலுதவிப் பயிற்சிகள்
பயின்றிடல் வேண்டும் மாணவக் குழுக்கள்
ஊரே......... கொள்ளிடம் ஆகிடும்
நிலையினைத் தவிர்க்க இணையும்
நங்கையர் கரங்களும் நலிவினை வெல்லலாம்.

நற்பணி ஆற்ற வேங்கையர் செப்பினர்.
மறவர் இயம்பிடும் சேதியைக் கேட்டதும்
மங்கையர் தமக்குள் உறுதியும் பூண்டனர்.

எம் மக்களின் இன்னலை மாற்றி எழுதிட
இம்மண்ணின் மீது மறப்போர் வளரும்.

இன்னலைக் களைந்திடும் - இவ்
இலட்சியப் போரிலே
இரத்தம் வீணே இகத்தில் ஓடியே
இங்கெச் சாவும் இனிமேல் இராதென - தமிழ்
ஈழத்தின் மீது சத்தியம் செய்தனர்.

அன்றே தொடங்கிற்று அவசர பயிற்சிகள்
கவனமாகக் கற்றனர் கன்னியரும், காளையரும்
நன்றே அமைந்தது
நாளாக அவ்வூரில் நாலு திக்கிலும்
முதலுதவி வழங்கிட நலன்பேண் நிலையங்கள்.

தொடர்ந்த நாட்களில்
தோழியர் இருவரும் தொண்டர்கள் ஆனார்கள்
ஊழிப் போரிலே ஊர்படும் ரணத்திற்கு
உடனடிச் சிகிச்சைகள் உவந்து வழங்கினர்.
உயிர்களைக் காத்திடும் உன்னத பணியிலே
இச் சாவித்திரிகள் இயமனை செயித்தனர்.

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை
இவர்கள்
சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

அங்கம் 4

கூற்றுவன் கேட்டால்...

காலதேவன் கட்டளையால் காலடியை விரைவாக்க
தாளடியில் தணல் கக்கல் தணலவனின் புதுயுக்தி.


கொப்புளிக்கும் கொப்பளத்தின் கொடிய வாதை கண்டு,
வேப்ப மரச் சாமரங்கள் வெம்மையோடு தர்க்கிக்கும்.

அவ்வேளை
ஊர்க்கோழி விற்க வந்த ஊரி வீட்டுப் பொன்னம்மா
மோர்க்காரக் கந்தனுடன் முறைத்தபடி நடக்கின்றாள்.

வில்வமர ஆச்சி வைத்த நெய்சோற்றின் வாசனையும்,
முல்லைவன மலர்கை மணங்கமழும் மீன்கறியும்,

காற்றில் ஏறிக் கதைபேசி பல நாசிகளை உரசிவிட
நாவூறி நீர் வடிதல் நளினமாக நிகழ்கிறது.

முட்டி நிறைத்த கள் அருந்தி
போதை முற்றிப்போன குப்பன்
அர்த்தமுள்ள இந்துமத தத்துவத்தைப் பாடிவர
பெருஞ்சத்தமுடன் வெடித்த வெடி - அவனைச்
சச்சரவுக்கு இழுத்தது;

வந்த வழி தள்ளாட,
சிந்தும் சொற்கள் தடம்புரள,
தூசனைகள் துள்ளாட,
பேரினவாதியரைப் பெருஞ் சண்டைக்கிழுத்தான்.

ஆற்றுவார் இன்றி அவனியல் தொடரவே
தோற்றமா காளியராய் தோன்றிய நங்கையர்கள்
அங்கமைந்த........
முதலுதவி நிலையத்தின் முக்கிய தொண்டர்கள்.

கள்போதை கொண்ட குப்பன்
விழி விரித்து, உடல் நெளித்து,
உள்ளுக்குப் போனவரால் உன்மத்தன் போலானான்.

சுயம் இழந்த அவனுக்கு சுந்தரியர் சினம் பெரிதா?
உறுமினான், செருமினான் - தன்நிலையின்
காரணத்தைப் பொருமினான்.

அதே நேரம்,
உதிரத்தில் குளித்து, ஈரமுற்ற மேனியனாய்,
சுயமிழக்கும் தோழனைச் சுமந்து முதலுதவி நாடிய
ஓர் செயல்கள வீரன்
குப்பனின் போதையை குலைத்தெறிந்து வென்றான்.

செருக்களச் செம்புண் ஏற்ற செம்மலினைக் காக்க சேது,
விரைந்தோடி வந்தநிலை விளக்கி சொல்வதென்றால்
வளி ஒன்றால்தான் முடியும்.

ஊற்றெடுத்த உதிர ஆற்றில், உருக்குலையும் இச்சகாவை
கூற்றுவன் கேட்பதற்காய் காற்றாக விடுவானா?

எத்தனையோ தோழரினை
எமன் பிடுங்கத் தோற்றவன்தான்......
இன்னவனை மட்டுமென்ன எளிதாகக் கொடுப்பானா?

கண்மணிகள் பூஞ்சையிட களைத்தயர்வு ஏற்றிருக்கும்
இன்னவன் நாமம் செப்பில் இனிக்கின்ற 'இனியவன்".

சின்னவன் சேது இங்கே தன்நிலை இழக்கின்றான்.
இன்தமிழ் தோழனுக்காய் செந்தணலில் துடிக்கின்றான்.

சயனத்தைத் தெளிவிக்கும் சிகிச்சையினை அளித்தபடி - ஓர
நயனத்தில் சேதவன் நிலை கண்ட மங்கையரின்
மனதிற்குள் பயம் மெல்ல பல்லிளிக்கத் தொடங்கியது.

நாழிகைகள் ஆக, ஆக மெலிந்த நண்பன் நலம் சூம்ப
சேயிழைகள் மீது சேது, - பெருஞ் சினத்தோடு சீறி நின்றான்.

ஏந்திழைகள் மெல்லமெல்ல ஆமையாகும் வேளையிலும்
எளிமையான மருத்துவத்தை ஏற்றுப் பணியாற்றினர்.

நிமிடங்களின் நகர்வுகள் நீள்கதையாய் ஆகுமுன்னர்
காற்றைக் கிழித்து ஒரு கருநீல வேன் வந்து
ஏற்றமிகு மறவனேந்தி, எமனுக்குச் சவால் விட்டு
வீதிவழி புழுதி பொங்க, விரைந்தோடி மறைந்தது.
ஆசுவாசமாக சேது....
சிந்தை தணியச்சினம் துறந்தான்.

கண்முன்னே கலக்கமுற்று இருபெண்மை தவித்திருக்க,
இன்னவனின் ஈர்விழிகள் இருவரிலும் தொக்கியது.

படபடப்புக் கொண்டிருந்த பருவப் பூங்குழலி - இவன்
நேரிட்ட விழியை ஏறெடுத்துப் பார்த்தாள்.
பதைப்புடனே நின்றிருந்த பைந்தமிழ் செல்வி
தன்கயலை நிலம்நோக்கி மெல்லச் சாய்த்தாள்.

பூங்குழலி மான்விழியில் பூக்கள் மலர்ந்தன.
ஈர்க்கும் பார்வையுடன் இங்கெதிரே நின்றிருக்கும்
ஈழம் மீட்கும் இளந்தமிழ் வீரனிவன்
இவள் நோக்கில் புதிய சொந்தம் ஆனான்.

விபத்தொன்றில் பறிகொடுத்த தாய்மடி உறவு
இகத்தினில் இன்று காட்சி தரக் கண்டாள்.

அகன்ற நெற்றியும், நேரிய புருவமும்,
எவரையும் ஊடுருவும் ஆளுமை விழிகளும்,
கூரிய நாசியும், குவிந்த புன்னகையும்,
ஆண்மைக்கே உரித்தான அழுத்த உதடுகளும்,
அடர்த்தி நிறைந்த எடுப்பான மீசையும்,
புடைத்த தோள்களும், நிமிர்ந்த மார்பும்,
உரமது ஏறி உயர்ந்த கால்களும்,
திடத்தை நிறைத்து திரண்ட கரங்களும்
தன்னகம் கொண்ட- அந்த கம்பீரன் முகத்தை
ஓர விழியாலும் ஏறெடுக்க இயலாது
தோற்று இடறினாள் தோகையவள் செல்வி.

இதயத்து ஓசை ஓங்கி ஒலித்தது.
கைகளும், கால்களும் சில்லிட்டுச் சிலிர்த்தன.
புருவங்கள் துடித்தன- ஏதோ
புதுவித உணர்வொன்று புதிர்க்கோலம் போட்டது.
சுவாசச் சுவரெங்கும் காற்று சுமையானது.
நுதலில் நீர் துளிர்க்க,
நா உலர்ந்து ஒட்டியது.

அங்கம் 5

மனப்புதிர்

வேலாடும் விழிகளிலே வீரம் விளையாடும் - அது
வெட்கித்து நிலம் நோக்கில் நாணம் அரசாளும்.

கோலமிடும் தோகையவள் குறுநகையில் சிவக்க
காலமது மனங்கனிய காளையவன் நெகிழ்ந்தான்.

ஏறெடுத்துப் பார்த்தமகள் பாசக்கொடி ஆனாள்.
ஓரவிழி தாழ்த்தியவள் கேள்விக் குறியானாள்.

இவன்
தேர்வெழுதும் மாணவனாய்
திகைக்கின்ற வேளை- பெரும்
மாயமது மனப்புதிரில் மேயுமான் ஆச்சு.

'நா" என்ப திருப்பதிங்கே நகைப்பிற்கிடங் காட்டி
மும்முனை உணர்வினுள்ளே மாபெரும் போட்டி!

பூங்குழலி தேன்குரலால் புவியீர்ப்புக் காட்ட
வானூர்தி தரைதட்ட வரிப்புலி விழித்தான்.

தீந்தமிழில் உரையாடி, தேன்பெயர்கள் பரிமாறி,
காந்தமகள் ஈர்க்குமுன்னே கடமை வீரன் விடுபட்டான்.

மூன்றெழுத்துப் புத்தகத்தில் மூழ்க இருந்தவனை
மூன்றெழுத்துச் சத்தியம் முன்னிழுத்து நிறுத்தியது.

ஆவல் கொண்ட துடிப்போடு அகம் இங்கு அல்லாட
தாவலுடன் தேகம் அங்கே ‘நகர்" என்று பணித்தது.

காவலரன் சேதுவை கடுகதியில் அழைத்தது.
களம்நோக்கி அவன் கால்கள் காற்றாகி விரைந்தன.

தீரப்புலி வீரன் சென்ற திக்குதனை நோக்கி
சோர்வுற்றுப் பார்த்திருந்தாள் சுந்தரப் பாவை செல்வி.

பூங்குழலி சகி முகத்தில் புதினத்தாள் படித்தாள்
பொல்லாத பருவமடி என்று மனம் துடித்தாள்.

கண்சிமிட்டி கார்குழலி கதைபேசிச் சிரித்தாள்
கையிரண்டால் முகம்மூடி, கனிமயிலோ சிவந்தாள்.

மணித்துளிகள் ஆக ஆக மங்கையரின் களிப்பு
மத்தாப்பைப் பார்த்த மழலையெனச் சிரித்தது.

இவ்வங்கனைகள் ஆனந்தம் அரைநாளாய் பார்த்து
ஆதித்தன் அயர்வுடனே ஓய்வெடுக்கப் போனான்.
-------------

கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,
எட்டிப் பிடிக்கும் ஆமி, புலியும்,
முற்ற வெளியில் எட்டுக் கோடும்,
முகப்புத் திட்டில் பாண்டிக் குண்டும்,

கபடி ஆட்டமும், கொக்கான் வெட்டியும்,
சோகிகள் வீசி தாயவீடும்,
ஒளித்துப் பிடித்துக் கல்லுக் குத்தியும்
அகவைகேற்ற அவரவர் ஆட்டம்.

உடல்வலு சேர்க்கும் உதைபந்தும்,
தோள்திடம் ஊட்டும் கரப்பந்தும்,
மனமகிழ் பெண்களின் பூப்பந்தும்
மாலையில் ஊரவர் மகிழ் விளையாட்டு.

ஒட்டுக் குந்தி ஊர்ப்புதினமும்,
திண்ணையில் கூடி திரண்ட சுற்றமும்,
தட்டிக் கடையின் தனிச்சலசலப்பும்
தழுவத் தழுவ மணித்துளி நகர்ந்தது.

அந்திவானம் செம்மை சிந்திட
அழகு முகில்கள் ஏந்தியது - அந்தி
மந்தாரை குங்குமப் போர்வையை
மாதுளம்பூக்கள் பழித்தன.

மெல்லிசைதந்த புள்ளினம் - புதுப்புது
மெட்டுகள் கட்டி இசைத்திட,
மேய்ச்சல் முடித்த ஆடும், மாடும்
வீடுகள் நோக்கி நடந்தன.

சேவை மாற்றம் சேயிழை இருவரும்
மனை சேரும் வழிகூட்ட - செழும்
பாவை மனஇழை மோனம் பூண்டது.
பாதை நீண்டது.

கூடவந்தவள் குறுநகை புரிய,
விடைதர மறந்து விட்டாள்.
வாயிலா மடந்தை வண்ணப் பூங்கொடி
வன்மொழி தொலைத்து விட்டாள்.

மாயை தன்னை மணந்தது அறியாக்
காதல் கவிந்தமகள். - பெரு நோயை
அணைத்ததில் துளிர்ப்பைக் கண்டாள்.
புதுத் துடிப்பை பெற்றெடுத்தாள்.
------------------

காசினி மெல்ல கங்குலை உடுத்த
அந்திச்சந்திரன் வான் சந்திக்கு வந்தான்.

மெல்லிய கருக்கலில்
மனக்கள்வனைக் கண்டபின்
முல்லையும்,மல்லியும் முக்காடா போடும்?

கன்னிமை துறந்து விரிந்து சிரித்தன.
காமனை உசுப்பிக் கள்வெறி ஊட்டின.

மொட்டுகள் கட்டவிழ்ந்தால் வண்டுகட்குக் கசக்குமா?
மட்டு அருந்திக் கிடந்தன. மதி மயங்கிப் பறந்தன.

மாருதம் முல்லைமணத் தேரிழுத்துக் கொண்டிருக்க,
சேயிழை செல்விக்கு ஊண் பிடிக்கவில்லை
உயிரெனும் வலைக்குள்ளே காதல் மீன் துடித்தது.

விழிமூடும் இமைக்குள்ளே வேங்கையின் சீற்றம்.
அது அர்த்தமேயின்றி வரைந்தது,
அவள் அதரங்களில் புன்னகையோவியம்.

இமைக்குள்ளே சீற்றத்தைச் சிறைப் பிடித்தவள்
சினத்தை இரசிக்கும் கலை எங்கு கற்றாள்?

விடிய மறுக்கும் இரவுப் பொழுது
கடக்கும் கணங்களை மா யுகங்கள் ஆக்கின.

தலைசாய்த்துக் கண்ணயர்தல் கனவாகிப் போக,
பாயும், தலையணையும் பகை பொருட்கள் ஆகின.

அங்கம் 6

அண்டத்தைக் கடந்தவள்

அல்லும், பகலும் நாட்களைக் கடத்தின.
வாரத்தின் நகர்வு திங்களாய் மலர்ந்தது.
திங்கள்கள் அசைந்து, காலாண்டை கடந்து
அரையாண்டை நெருங்கி ஆறாக விழைந்தன.

ஊர் அழிக்கக் கிளம்பும் சீர்கெட்ட படையடக்கி
கூர் ஆயுத முனைக்குள்ளே.....
ஈர்விழிகள் அயராது நிலங்காக்கும் களவீரரின்
யாழ் அணித் தலைவன்,....
முற்றுகையிட்டு எதிரிமுகாம் அழிக்கும்
கெட்டிய பணி பற்றி அண்ணன் இட்ட கட்டளையாய்
பற்பல செயற்பாட்டை எடுத்துரைத்தான்.

அதன் முன்
செருக்கள வீரரிற்கு சில நாட்கள் ஓய்வு தந்து
சுற்றத்தை கண்டு சீராடி வரப் பணித்தான்.

இச்செருக்களத்தில், செங்குருதிக் குளத்தில்,
ஓர்மம் மிகுந்து,......
உயிர் பிரியும் கணத்தை எதிர் நோக்கும்
இந்த இளைய புலி வீரர்கள்!
ஆண்டு, அநுபவித்து உறவுக்குள் முகிழ்த்து
போதுமடா சாமி என பற்றறுத்த துறவிகளா?

இல்லையே! .
ஆளுமையும், அநுபவிப்பும் உறவுகள் சங்கமிப்பும்
உணர்வாலே அறியாத - இருந்தும்
பற்றுகள் நிறைந்த பாசத் துறவிகள்

தாயகப் பற்றினால்
அனைத்தையும் ஒதுக்கிய இளைய ஞானிகள்

யாழ் அணித் தளபதி செப்பிய கூற்றினால் - வீரர்களின்
உள்ளத்து மூலையில் ஒதுங்கிய உறவுகள்
உருப்பெற்று கண்முன்னே உலவத் தொடங்கினர்.

உயிர் கசிய..........
அம்மாவும், அப்பாவும் அன்புடைய சோதரரும்,
அண்டை, அயலோடு, அகம் நிறைத்த நண்பர்களும்
சிந்தைக்குள் மறைந்திருக்கும் சொல்லாத உறவுகளும்,
எத்தனையோ, எத்தனையோ......
வீரர்களின் எண்ணத்தில் விழா எடுக்கத் தொடங்கினர்.

சேது மட்டும் இந்நிலைக்கு விதி விலக்கா?
அவனுக்கு என்ற உலகம்.....
அன்னை எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கம்.

அன்னையைக் கண்டு...
அவள் மடியில் தலைசாய்க்கும் ஆவல் வளர
சேது எனும் ஆண்மகன் செல்லக் குழவியானான்.

அம்மா!... அன்புக்குச் சொர்க்கம்.
அம்மா!.... பண்பெல்லாம் அவள் பக்கம்.
அம்மா!..... அகிலத்தை அடக்கும் தாய்மை.
அம்மா!.... வார்த்தைக்குள் அடங்காப் பாசத்தீ

எண்ணக் கோலங்கள் கொழுந்து விட்டன.
உள்ளத்துள்..... அண்டத்தைக் கடந்து அம்மா கடவுளானாள்.
-----------------




வெள்ளி மீன்கள் ஓய்வெடுக்கும் விடிகாலைப் பொழுது
துள்ளியோடி தாய்மடியிடித்து பால் குடிக்கும் கன்று
கண்கள் உள்ளிட்ட கனவுடனே சேது அன்னை விழித்தாள்.

உறவுகளின் வரவு கூறும் காக்கைச் சத்தம் கேட்டு
உச்சுக் கொட்டி உச்சிமேலே பல்லிகளின் சிரிப்பு!

கூச்சமின்றி விரிந்த மலர்கள்- அதன் சுற்றமெல்லாம் மறைக்க
காய்த்த வாழை மரத்தின் குலையில் கனிகள் மஞ்சள் பூச....



நேற்றிருந்த வனப்பை காட்டில் இன்று சோபை துலங்க,
மாற்றமதை உணர்ந்த பெற்றமனது சிலிர்த்துக் களித்தது.

கண்ணுக்குள் பொத்திக் காத்த கண்மணி
சேது எனும் பெயர் பூண்ட அன்ரனி!

கையிடுக்கில் தூக்கி, கதகதப்பாய் அணைத்து,
சின்ன அதரங்களில் - தாய்மை
பூரித்த கிண்ணத்துப் பாலூட்டி இவள் வளர்த்த பிள்ளை!

உடலில் எண்ணெய் பூசி, உருவி ஊறவிட்டு,
உல்லாசக் களிப்புடனே, உந்தியவன் நீந்தி வர
உளம் களித்து இரசித்தபிள்ளை!

காசினியில் நடைபயில, காலில் கற்கள் குத்துமென்றே
காரிகை தன் இடையிற்சுமந்து கட்டிக் காத்து வளர்த்தபிள்ளை!

நோவு, காய்ச்சல் அவனுக்கெனில் நோயுற்று நலிந்ததிவள்
எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிச் சுழன்று கொண்டிருக்க.....

கைக்குள்ளே இருந்த கறுப்பன் தாவலுடன் வாலாட்டி,
உற்சாகக் குரல் கொடுக்க,
வாசற் கதவோரம் வருபவனை உணர்ந்து விட்டாள்.

அவன்......
வாஞ்சையோடு ஓடிவர, வாரியணைத்து முத்தமிட்டாள்.
கூசக் கூசக் கண்கள் அகற்றி குலமகனைப் பார்த்த தாயின்
விழிமீன்கள் உடைப்பெடுத்த அருவியிலே நீந்தின.

'அம்மா" மட்டுமே வாய்மொழி ஆனாள்.
அன்புக்கு உண்டோ அடைக்குந்தாள்?
அன்னைக்கும் பிள்ளைக்கும் இடையென்ன கேள்வி?
அன்னையின் சீராட்டில் 'அன்ரனி"
இவனைப் பிரிந்த இன்னலினை இயம்பின
அவள் இயக்கம்.

வாய்மூடும் மௌனம் தாய்மைக்குப் பூட்டிடுமா?
அன்னை உள்ளத்தை அறியாத பிள்ளையா?
தாயிற்கு இவனென்ன புரியாத தனயனா?
வாயும், வயிறும் வேறு வேறானாலும்
வலியும், வேதனையும் ஒன்றுதானே!

மௌனத்தின் வலிமை மாபெரும் புத்தகம்
வாசிக்க வாசிக்க நீண்டு வளரும்!

அணைப்பும், விருந்தும் அன்னையின் வருடலும்
இகத்தில் எதுவுமே இதனை மிஞ்சாது.

தலைமுடி கோதி, தன்மடியில் தலைசாய்த்த
சேய்முகம் பார்த்தாள் அன்னை.
பார்வையில் நிம்மதி பரவசத்தின் சன்னதி
வீரத்தில் வாகை சூடி வெற்றிகளை ஆள்பவன்
தாய்மையெனும் களத்தினுள் சரணடைந்து நின்றான்.

தாய்மை..........
உலகை மேவும் தத்துவம்
இவன் அடங்குதல் இயல்புதானே!

அன்னையின் கைகளுக்குள் அன்பு வருடலிற்குள்
இன்னவன் இருப்பது இயற்கைக்கு வியர்த்ததா?
சாளர ஓரத்தில் சடுதியில் இவன் நோக்கை
முல்லை கொடி கொண்டு முழுதாக ஈர்த்தது.

மண்நோக்கும் கொடி காண மறவன் உளம் சிலிர்த்தான்
அந்நேரம் மங்கையொருத்தி மனமறைப்பிலிருந்து வெளித்தாள்.

இன்முறுவல் இதழ் தவழ, இவன் இமைகள் மேவின.
கடிவாளம் இன்றி உள்ளம் காற்றிலேறிப் பறந்தது.

காலடியில் வாலாட்டி கண்ணயர்ந்த கறுப்பன்
தெருவோரச் சரசரப்பில் விறுக்கென்று குரைத்தெழுந்தான்.


நாய் குரைத்த நனவுலகு... கனவதனைக் கலைக்க,
கடமை உயிர்த்து புலிமனதில் கர்ச்சித்து அமர்ந்தது.

கண்மூடித் திறப்பதற்குள், முறுவல் உதட்டில் மறைந்தது
அழுத்தம் உறவு கொண்டது.

விழிமூடி மடியிருந்த மகன் முகத்தில் அழுத்தம்
நொடி தோன்றி மறைந்த எழில் பூத்த முறுவல்
நுண்ணிய மாற்றம்தான்!......
அன்னைக்கு அவனைப் புது அதிசயமாய் காட்டியது.

தன்னை யாரோ உற்றதாய் உணர்ந்தவன்
அன்னையின் நோக்கிலே உண்மையை உணர்ந்தான்.

வெட்கித்த மணித்துளியில்,
கரிய முகம் சிவக்க கண்களை மூடினான்.
இன்னவன் சங்கடம் ஈன்றவளுக்குப் புரியாதா?

அம்மா....
அடுக்களை செல்வதாய் அங்கிருந்து அகன்றாள்.
அன்னைதான் அகன்றாள் நெஞ்சத்துள் புகுந்த
பெண் அஞ்சுகம் அகலவில்லை.

எண்ணத்தை அடக்கினான் மறுபடி எழுந்தது
அடக்க அடக்க வலிமை பெற்றுச் சிலிர்த்தது.

அந்தச் சுந்தரப் பைங்கிளியை சந்தித்தால் என்ன?
கேள்வி வண்டாகி மனதைக் குடைந்தது.

அங்கம் 7

மௌன வலிகள்

விடுமுறை நாட்கள் விரைந்து மறைந்தன.
வீதியில் வெயிலின் கடுமையும் தணிந்தது.

உண்ட களையில் உறங்கி விழிக்கும்
மதியமும் மாலையும் கலந்த மத்திமம்.

பிரிவுப் புயல் மையமிட
மௌனம் வலிகளைச் சுமந்தது.

கண்களின் ஓரத்தில் கனிவை மீறி
கண்ணீர் வரவா? என்றது

தாய்க்கும், சேய்க்கும் இடையினில் பிரிவு
சீனச் சுவராய் எழுந்தது.

மோதிரம் தந்தவன் மேதினி நீத்த பின்
சொந்தம் என்பது அவள் சிந்தைக்கிவனே!
அப்பிள்ளையைத் தவிர எவர் உணர்வார்?

ஊண் ஊட்டினாள்,
உப்பரிகை தேடும் உல்லாசன் அல்லாது
தன் மானத் தேன் ஊட்டி- தமிழ்
மானம் காக்க வளர்த்தாள்.
-------

ஈருந்தி எடுத்து, இயல்பு நிலை சோதித்து
ஈன்றவள் விடைக்காய் இளையவன் நிமிர்ந்தான்.

தாய்மை... .
நெஞ்சுக்குள் தவிப்பு
நஞ்சணிந்த நெஞ்சம்!
காணக் காண கருவறை கலங்கியது.

ஏக்கத்துடன் தாயும்,
நாடு மீட்கும் நோக்கத்துடன் சேயும்!

இனி..

ஈன்றவளைக் காண்பது எப்போது?
தாய் அணைத்து முத்தமிட்டாள்.
தனயன் மெல்ல விடை பெற்றான்.

ஈருருளி மிதியடியை இவன் கால்கள் உந்த
பார் விரித்த பாதை பயணத்திற்கு அழைத்தது.

சீராட்டி வளர்த்தவள் சிறிதாகிச் சிறிதாகி
ஓர் பொட்டாகி ஒழுங்கை முனையில் மறைந்தாள்.

காலுந்தக் காலுந்த காற்றைக் கிழித்து
ஈருருளி அவன் கனத்தை ஏற்றுப் பறந்தது.

அதனையும் விஞ்சி- அந்த
கார்காலத் தென்றல் முகம்
இளையவனை ஈர்த்தது.

கொள்ளை எழில் கொஞ்சும்
கோதை முகம் காண,
எல்லை இல்லாமல் ஏக்கங்கள் நிறைய,
நலன்புரி நிலையருகே
வந்த நிலை புரியவில்லை.

ஆவல் பொங்கி, அகம் ஆள
தேவதையைத் தெரிகிறதா? எனும்
தேடல் விரிந்து, விழி ஆள
தெரு மறந்து போனது.
---------------------------------------------------------

எறிகணைகள் குறிப்பெடுத்து சீரழித்த பாதை
ஆங்காங்கே புண்ணாகிப் புதரானது.

வில்வண்டி பயணிக்கும்,
வீதியோரப் பயணிகளின் ஈருருளி ஏறி இறங்கி
எளிதாகப் பறக்கும் கரணம் அடிக்கும்.
பள்ளமும், மேடும் பழகிய பாதையில்
உழவு இயந்திரங்கள் உறுமி வெடிக்கும்.

அவ்விடருற்ற சாலையில் ஈருருளி தடுமாறி,
இயல்பிழந்து, மேற்கிளம்பிச் சின்னக் கரணமிட,
தன்னை நிலைப்படுத்த, தரணியில் கால் ஊன்ற,
நெஞ்சத்தில் அணியான நஞ்சுக் குப்பியது
கண்டத்தைச் சுற்றி அவன் கவனத்தை ஆண்டது.

சின்னஞ் சிறுபொழுது மின்னலிட்ட சிந்தனை
அன்னவன் அகம் ஒடுக்க அக்கணமே
அவ்விடம் விட்டு அகன்றுவிட நினைத்தான்.

ஈருரளி, இடருற்று சாய்வேற்ற நிலை
திருத்தி, அதை நிறுத்தி,
நெற்றி வேர்வை ஒற்றி நிமிர்ந்தான்
கல்லாகச் சமைந்தான்.

தவிர்த்துவிடத் துணிந்தது,
அகன்று போக நினைத்தது,
இயலாத செயலாக இவன் உறைத்து நின்றான்.

விதி எழுதும் தேவனுக்கு இருகூர் விளையாட்டு!
விடுகதைகள் போட்டாலும் வெளிக்காது அவன் குட்டு!