Sunday, October 25, 2009

அங்கம் 16

உறுமல் புலிக்கு அழகு

நாடிப் பகுதியில்
துளைத்த குண்டு - உயிர்
நாடியை நாடி நிலைத்தது.
தேடித் தோண்டில் ஆவி பறக்கும்.
மருத்துவர் மரத்து மறுத்தார்.

குண்டோடு இணைத்து கொண்டொரு பத்து
காயம் ஆற்ற இட்டு,
வலியைக் குறைக்கும் வலிமையைப் பெருக்கும்
பதநீர் உடலில் ஏற்றினார்.

ஊசி முனையில் இறங்கும் திரவம்
உயிரைப் பிடித்து நிறுத்த,
நாசி வழியே மூச்சுக் காற்று
நலிவை வென்று நிலைத்தது.

காயக் களைப்பு கண்களை மேவ
இமைகள் கவிந்த வேளை,
விம்மி வெடித்த சின்ன விசும்பல்
விழிக்கச் சொல்லித் தொழுதது.

கண்கள் காண்பது மெய்யா? - இல்லை
மனக் கண்ணில் ஒளிரும் பொய்யா?

உள்ளத்தை அள்ளி எடுத்தவள், -அவன்
உயிர்ப்பூமாலை தொடுத்தவள்,
எண்ணக் கருவில் நிலைத்தவள்,
கண்களில் கனிவைத் தேக்கினாள்.

உற்றது தாமதம்
சட்டென சேது எழுந்திட, - அவன்
சரீரம் சரிந்து தோற்றது.

களத்தில் காயம் பலருக்கு - அவரைக்
கண்டிடவே என் உளவிருப்பு.- அங்கு
பிரியசகியைப் பிரிய சகி
செப்பிய காரணம் செம்மையுறும்.

இங்கிதம் அறிந்த நண்பர்கள்
இணைந்தே அவ்விடம் விட்டகன்றர்.
அங்கொரு தனிமையின் உற்பத்தி
அந்தக் கணங்களை ஆண்டது.

இவளினை இங்கு காண்பதற்கு - இவன்
இதயம் கனவுகள் கண்டதில்லை
இதுவரை பேசிப் பழகவில்லை
இருப்பினும் எங்ஙனம் இவள் வந்தாள்?

சிந்தனைப் புள்ளிகள் கோலமிட
கேள்விகள் எழுந்து குதித்தன.

மூடிக் கட்டிய முகத்திடையே
வேதனைச் சுருக்கம் ரேகையிட
சின்ன விழிகள் இமைக்காத
செல்விப் பெண்ணவள் துடித்தெழுந்தாள்.

கண்மணி இரண்டும் பரபரக்க - அவன்
கரத்தினைப் பற்றி வலி அணைத்தாள்.

துணிவு பிறந்தது எவ்விதமோ?
துயரே திகைக்க விழி விரித்தான்.
உயிரியல் பாடத்தில் புதுப்பக்கம் - இவன்
இதயத்தின் மத்தியில் எழுதியது.
உள்ளத்தில் களிப்பு கொண்டாலும்
உறுமல் புலிக்கு அழகல்லவா?

சினத்தை முகத்தில் பூசிக் கொண்டான்.
செல்வியை அந்நியம் ஆக்கிக் கொண்டான்.
வெறுப்பை விழிகளில் தேக்கிக் கொண்டான்.
விரும்பாப் பார்வையை வீசி வைத்தான்.

பார்வையை உணர்ந்தவள் பதறி விட்டாள்.
பண்பினை நினைத்தவள் கரத்தை விட்டாள்.
வேங்கையின் விழியால் வெந்து விட்டாள்.
வேதனைச் சுவட்டால் நொந்து விட்டாள்.

அன்பே இல்லா அவன் இயல்பா?
அவனை வரித்தது இவள் பிழையா?
ஆயிரம் ஊசிகள் அகம் ஏற
ஏந்திழை இதயக் காயம் பட்டாள்.

களத்தில் ஏற்பட்ட பின்னடைவு
களப்புலி இவனை மாய்த்திடினும்
உளத்தில் ஏற்பட்ட மென்னடைவு - அவன்
உணர்வை மெலிதாய் மேய்ந்தது.

பார்வையில் அந்நியப்படுத்தியவன்
எண்ணக் கோர்வையில்
உறவைப் பகிர்ந்திருந்தான்.

ஏந்திழைக் கெதுவும் புரியவில்லை - அவள்
எழில் முகம் சூம்பிக் கருகியது.

இருமனம் கூடி நேசித்தால்
இதயத்தில் வலிகள் தோன்றாது - இதில்
ஒரு மனம் மட்டும் யாசித்தால்
துயரம் வாழ்வை வாசிக்கும்.

பேசிப் பார்த்தால் என்ன நிலை?
பேதை நெஞ்சம் ஏங்கியது.
கூசிக் குறுகி உணர்வெல்லாம்
கோழைத்தனமாய் ஒடுங்கியது.

வாயைத் திறக்க முடியாத
வரிப்புலி பதில்தான் பகர்வானா?
தூய மனதின் மையல் இதை
மாயத் தோற்றம் என்பானா?

மூளைக்குள்ளே கூச்சலிட்டு
காலக்கிழவி கடந்து சென்றாள்.

மௌனத் தேவதை கோலோச்ச
மாருதப் புரவி பேசியது.
விதிக்கு இந்த மோனநிலை.....
வாடிக்கையா? வேடிக்கையா?

No comments:

Post a Comment