Sunday, October 25, 2009

அங்கம் 4

கூற்றுவன் கேட்டால்...

காலதேவன் கட்டளையால் காலடியை விரைவாக்க
தாளடியில் தணல் கக்கல் தணலவனின் புதுயுக்தி.


கொப்புளிக்கும் கொப்பளத்தின் கொடிய வாதை கண்டு,
வேப்ப மரச் சாமரங்கள் வெம்மையோடு தர்க்கிக்கும்.

அவ்வேளை
ஊர்க்கோழி விற்க வந்த ஊரி வீட்டுப் பொன்னம்மா
மோர்க்காரக் கந்தனுடன் முறைத்தபடி நடக்கின்றாள்.

வில்வமர ஆச்சி வைத்த நெய்சோற்றின் வாசனையும்,
முல்லைவன மலர்கை மணங்கமழும் மீன்கறியும்,

காற்றில் ஏறிக் கதைபேசி பல நாசிகளை உரசிவிட
நாவூறி நீர் வடிதல் நளினமாக நிகழ்கிறது.

முட்டி நிறைத்த கள் அருந்தி
போதை முற்றிப்போன குப்பன்
அர்த்தமுள்ள இந்துமத தத்துவத்தைப் பாடிவர
பெருஞ்சத்தமுடன் வெடித்த வெடி - அவனைச்
சச்சரவுக்கு இழுத்தது;

வந்த வழி தள்ளாட,
சிந்தும் சொற்கள் தடம்புரள,
தூசனைகள் துள்ளாட,
பேரினவாதியரைப் பெருஞ் சண்டைக்கிழுத்தான்.

ஆற்றுவார் இன்றி அவனியல் தொடரவே
தோற்றமா காளியராய் தோன்றிய நங்கையர்கள்
அங்கமைந்த........
முதலுதவி நிலையத்தின் முக்கிய தொண்டர்கள்.

கள்போதை கொண்ட குப்பன்
விழி விரித்து, உடல் நெளித்து,
உள்ளுக்குப் போனவரால் உன்மத்தன் போலானான்.

சுயம் இழந்த அவனுக்கு சுந்தரியர் சினம் பெரிதா?
உறுமினான், செருமினான் - தன்நிலையின்
காரணத்தைப் பொருமினான்.

அதே நேரம்,
உதிரத்தில் குளித்து, ஈரமுற்ற மேனியனாய்,
சுயமிழக்கும் தோழனைச் சுமந்து முதலுதவி நாடிய
ஓர் செயல்கள வீரன்
குப்பனின் போதையை குலைத்தெறிந்து வென்றான்.

செருக்களச் செம்புண் ஏற்ற செம்மலினைக் காக்க சேது,
விரைந்தோடி வந்தநிலை விளக்கி சொல்வதென்றால்
வளி ஒன்றால்தான் முடியும்.

ஊற்றெடுத்த உதிர ஆற்றில், உருக்குலையும் இச்சகாவை
கூற்றுவன் கேட்பதற்காய் காற்றாக விடுவானா?

எத்தனையோ தோழரினை
எமன் பிடுங்கத் தோற்றவன்தான்......
இன்னவனை மட்டுமென்ன எளிதாகக் கொடுப்பானா?

கண்மணிகள் பூஞ்சையிட களைத்தயர்வு ஏற்றிருக்கும்
இன்னவன் நாமம் செப்பில் இனிக்கின்ற 'இனியவன்".

சின்னவன் சேது இங்கே தன்நிலை இழக்கின்றான்.
இன்தமிழ் தோழனுக்காய் செந்தணலில் துடிக்கின்றான்.

சயனத்தைத் தெளிவிக்கும் சிகிச்சையினை அளித்தபடி - ஓர
நயனத்தில் சேதவன் நிலை கண்ட மங்கையரின்
மனதிற்குள் பயம் மெல்ல பல்லிளிக்கத் தொடங்கியது.

நாழிகைகள் ஆக, ஆக மெலிந்த நண்பன் நலம் சூம்ப
சேயிழைகள் மீது சேது, - பெருஞ் சினத்தோடு சீறி நின்றான்.

ஏந்திழைகள் மெல்லமெல்ல ஆமையாகும் வேளையிலும்
எளிமையான மருத்துவத்தை ஏற்றுப் பணியாற்றினர்.

நிமிடங்களின் நகர்வுகள் நீள்கதையாய் ஆகுமுன்னர்
காற்றைக் கிழித்து ஒரு கருநீல வேன் வந்து
ஏற்றமிகு மறவனேந்தி, எமனுக்குச் சவால் விட்டு
வீதிவழி புழுதி பொங்க, விரைந்தோடி மறைந்தது.
ஆசுவாசமாக சேது....
சிந்தை தணியச்சினம் துறந்தான்.

கண்முன்னே கலக்கமுற்று இருபெண்மை தவித்திருக்க,
இன்னவனின் ஈர்விழிகள் இருவரிலும் தொக்கியது.

படபடப்புக் கொண்டிருந்த பருவப் பூங்குழலி - இவன்
நேரிட்ட விழியை ஏறெடுத்துப் பார்த்தாள்.
பதைப்புடனே நின்றிருந்த பைந்தமிழ் செல்வி
தன்கயலை நிலம்நோக்கி மெல்லச் சாய்த்தாள்.

பூங்குழலி மான்விழியில் பூக்கள் மலர்ந்தன.
ஈர்க்கும் பார்வையுடன் இங்கெதிரே நின்றிருக்கும்
ஈழம் மீட்கும் இளந்தமிழ் வீரனிவன்
இவள் நோக்கில் புதிய சொந்தம் ஆனான்.

விபத்தொன்றில் பறிகொடுத்த தாய்மடி உறவு
இகத்தினில் இன்று காட்சி தரக் கண்டாள்.

அகன்ற நெற்றியும், நேரிய புருவமும்,
எவரையும் ஊடுருவும் ஆளுமை விழிகளும்,
கூரிய நாசியும், குவிந்த புன்னகையும்,
ஆண்மைக்கே உரித்தான அழுத்த உதடுகளும்,
அடர்த்தி நிறைந்த எடுப்பான மீசையும்,
புடைத்த தோள்களும், நிமிர்ந்த மார்பும்,
உரமது ஏறி உயர்ந்த கால்களும்,
திடத்தை நிறைத்து திரண்ட கரங்களும்
தன்னகம் கொண்ட- அந்த கம்பீரன் முகத்தை
ஓர விழியாலும் ஏறெடுக்க இயலாது
தோற்று இடறினாள் தோகையவள் செல்வி.

இதயத்து ஓசை ஓங்கி ஒலித்தது.
கைகளும், கால்களும் சில்லிட்டுச் சிலிர்த்தன.
புருவங்கள் துடித்தன- ஏதோ
புதுவித உணர்வொன்று புதிர்க்கோலம் போட்டது.
சுவாசச் சுவரெங்கும் காற்று சுமையானது.
நுதலில் நீர் துளிர்க்க,
நா உலர்ந்து ஒட்டியது.

No comments:

Post a Comment