Sunday, October 25, 2009

அங்கம் 5

மனப்புதிர்

வேலாடும் விழிகளிலே வீரம் விளையாடும் - அது
வெட்கித்து நிலம் நோக்கில் நாணம் அரசாளும்.

கோலமிடும் தோகையவள் குறுநகையில் சிவக்க
காலமது மனங்கனிய காளையவன் நெகிழ்ந்தான்.

ஏறெடுத்துப் பார்த்தமகள் பாசக்கொடி ஆனாள்.
ஓரவிழி தாழ்த்தியவள் கேள்விக் குறியானாள்.

இவன்
தேர்வெழுதும் மாணவனாய்
திகைக்கின்ற வேளை- பெரும்
மாயமது மனப்புதிரில் மேயுமான் ஆச்சு.

'நா" என்ப திருப்பதிங்கே நகைப்பிற்கிடங் காட்டி
மும்முனை உணர்வினுள்ளே மாபெரும் போட்டி!

பூங்குழலி தேன்குரலால் புவியீர்ப்புக் காட்ட
வானூர்தி தரைதட்ட வரிப்புலி விழித்தான்.

தீந்தமிழில் உரையாடி, தேன்பெயர்கள் பரிமாறி,
காந்தமகள் ஈர்க்குமுன்னே கடமை வீரன் விடுபட்டான்.

மூன்றெழுத்துப் புத்தகத்தில் மூழ்க இருந்தவனை
மூன்றெழுத்துச் சத்தியம் முன்னிழுத்து நிறுத்தியது.

ஆவல் கொண்ட துடிப்போடு அகம் இங்கு அல்லாட
தாவலுடன் தேகம் அங்கே ‘நகர்" என்று பணித்தது.

காவலரன் சேதுவை கடுகதியில் அழைத்தது.
களம்நோக்கி அவன் கால்கள் காற்றாகி விரைந்தன.

தீரப்புலி வீரன் சென்ற திக்குதனை நோக்கி
சோர்வுற்றுப் பார்த்திருந்தாள் சுந்தரப் பாவை செல்வி.

பூங்குழலி சகி முகத்தில் புதினத்தாள் படித்தாள்
பொல்லாத பருவமடி என்று மனம் துடித்தாள்.

கண்சிமிட்டி கார்குழலி கதைபேசிச் சிரித்தாள்
கையிரண்டால் முகம்மூடி, கனிமயிலோ சிவந்தாள்.

மணித்துளிகள் ஆக ஆக மங்கையரின் களிப்பு
மத்தாப்பைப் பார்த்த மழலையெனச் சிரித்தது.

இவ்வங்கனைகள் ஆனந்தம் அரைநாளாய் பார்த்து
ஆதித்தன் அயர்வுடனே ஓய்வெடுக்கப் போனான்.
-------------

கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,
எட்டிப் பிடிக்கும் ஆமி, புலியும்,
முற்ற வெளியில் எட்டுக் கோடும்,
முகப்புத் திட்டில் பாண்டிக் குண்டும்,

கபடி ஆட்டமும், கொக்கான் வெட்டியும்,
சோகிகள் வீசி தாயவீடும்,
ஒளித்துப் பிடித்துக் கல்லுக் குத்தியும்
அகவைகேற்ற அவரவர் ஆட்டம்.

உடல்வலு சேர்க்கும் உதைபந்தும்,
தோள்திடம் ஊட்டும் கரப்பந்தும்,
மனமகிழ் பெண்களின் பூப்பந்தும்
மாலையில் ஊரவர் மகிழ் விளையாட்டு.

ஒட்டுக் குந்தி ஊர்ப்புதினமும்,
திண்ணையில் கூடி திரண்ட சுற்றமும்,
தட்டிக் கடையின் தனிச்சலசலப்பும்
தழுவத் தழுவ மணித்துளி நகர்ந்தது.

அந்திவானம் செம்மை சிந்திட
அழகு முகில்கள் ஏந்தியது - அந்தி
மந்தாரை குங்குமப் போர்வையை
மாதுளம்பூக்கள் பழித்தன.

மெல்லிசைதந்த புள்ளினம் - புதுப்புது
மெட்டுகள் கட்டி இசைத்திட,
மேய்ச்சல் முடித்த ஆடும், மாடும்
வீடுகள் நோக்கி நடந்தன.

சேவை மாற்றம் சேயிழை இருவரும்
மனை சேரும் வழிகூட்ட - செழும்
பாவை மனஇழை மோனம் பூண்டது.
பாதை நீண்டது.

கூடவந்தவள் குறுநகை புரிய,
விடைதர மறந்து விட்டாள்.
வாயிலா மடந்தை வண்ணப் பூங்கொடி
வன்மொழி தொலைத்து விட்டாள்.

மாயை தன்னை மணந்தது அறியாக்
காதல் கவிந்தமகள். - பெரு நோயை
அணைத்ததில் துளிர்ப்பைக் கண்டாள்.
புதுத் துடிப்பை பெற்றெடுத்தாள்.
------------------

காசினி மெல்ல கங்குலை உடுத்த
அந்திச்சந்திரன் வான் சந்திக்கு வந்தான்.

மெல்லிய கருக்கலில்
மனக்கள்வனைக் கண்டபின்
முல்லையும்,மல்லியும் முக்காடா போடும்?

கன்னிமை துறந்து விரிந்து சிரித்தன.
காமனை உசுப்பிக் கள்வெறி ஊட்டின.

மொட்டுகள் கட்டவிழ்ந்தால் வண்டுகட்குக் கசக்குமா?
மட்டு அருந்திக் கிடந்தன. மதி மயங்கிப் பறந்தன.

மாருதம் முல்லைமணத் தேரிழுத்துக் கொண்டிருக்க,
சேயிழை செல்விக்கு ஊண் பிடிக்கவில்லை
உயிரெனும் வலைக்குள்ளே காதல் மீன் துடித்தது.

விழிமூடும் இமைக்குள்ளே வேங்கையின் சீற்றம்.
அது அர்த்தமேயின்றி வரைந்தது,
அவள் அதரங்களில் புன்னகையோவியம்.

இமைக்குள்ளே சீற்றத்தைச் சிறைப் பிடித்தவள்
சினத்தை இரசிக்கும் கலை எங்கு கற்றாள்?

விடிய மறுக்கும் இரவுப் பொழுது
கடக்கும் கணங்களை மா யுகங்கள் ஆக்கின.

தலைசாய்த்துக் கண்ணயர்தல் கனவாகிப் போக,
பாயும், தலையணையும் பகை பொருட்கள் ஆகின.

No comments:

Post a Comment