Sunday, October 25, 2009

அங்கம் 6

அண்டத்தைக் கடந்தவள்

அல்லும், பகலும் நாட்களைக் கடத்தின.
வாரத்தின் நகர்வு திங்களாய் மலர்ந்தது.
திங்கள்கள் அசைந்து, காலாண்டை கடந்து
அரையாண்டை நெருங்கி ஆறாக விழைந்தன.

ஊர் அழிக்கக் கிளம்பும் சீர்கெட்ட படையடக்கி
கூர் ஆயுத முனைக்குள்ளே.....
ஈர்விழிகள் அயராது நிலங்காக்கும் களவீரரின்
யாழ் அணித் தலைவன்,....
முற்றுகையிட்டு எதிரிமுகாம் அழிக்கும்
கெட்டிய பணி பற்றி அண்ணன் இட்ட கட்டளையாய்
பற்பல செயற்பாட்டை எடுத்துரைத்தான்.

அதன் முன்
செருக்கள வீரரிற்கு சில நாட்கள் ஓய்வு தந்து
சுற்றத்தை கண்டு சீராடி வரப் பணித்தான்.

இச்செருக்களத்தில், செங்குருதிக் குளத்தில்,
ஓர்மம் மிகுந்து,......
உயிர் பிரியும் கணத்தை எதிர் நோக்கும்
இந்த இளைய புலி வீரர்கள்!
ஆண்டு, அநுபவித்து உறவுக்குள் முகிழ்த்து
போதுமடா சாமி என பற்றறுத்த துறவிகளா?

இல்லையே! .
ஆளுமையும், அநுபவிப்பும் உறவுகள் சங்கமிப்பும்
உணர்வாலே அறியாத - இருந்தும்
பற்றுகள் நிறைந்த பாசத் துறவிகள்

தாயகப் பற்றினால்
அனைத்தையும் ஒதுக்கிய இளைய ஞானிகள்

யாழ் அணித் தளபதி செப்பிய கூற்றினால் - வீரர்களின்
உள்ளத்து மூலையில் ஒதுங்கிய உறவுகள்
உருப்பெற்று கண்முன்னே உலவத் தொடங்கினர்.

உயிர் கசிய..........
அம்மாவும், அப்பாவும் அன்புடைய சோதரரும்,
அண்டை, அயலோடு, அகம் நிறைத்த நண்பர்களும்
சிந்தைக்குள் மறைந்திருக்கும் சொல்லாத உறவுகளும்,
எத்தனையோ, எத்தனையோ......
வீரர்களின் எண்ணத்தில் விழா எடுக்கத் தொடங்கினர்.

சேது மட்டும் இந்நிலைக்கு விதி விலக்கா?
அவனுக்கு என்ற உலகம்.....
அன்னை எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கம்.

அன்னையைக் கண்டு...
அவள் மடியில் தலைசாய்க்கும் ஆவல் வளர
சேது எனும் ஆண்மகன் செல்லக் குழவியானான்.

அம்மா!... அன்புக்குச் சொர்க்கம்.
அம்மா!.... பண்பெல்லாம் அவள் பக்கம்.
அம்மா!..... அகிலத்தை அடக்கும் தாய்மை.
அம்மா!.... வார்த்தைக்குள் அடங்காப் பாசத்தீ

எண்ணக் கோலங்கள் கொழுந்து விட்டன.
உள்ளத்துள்..... அண்டத்தைக் கடந்து அம்மா கடவுளானாள்.
-----------------




வெள்ளி மீன்கள் ஓய்வெடுக்கும் விடிகாலைப் பொழுது
துள்ளியோடி தாய்மடியிடித்து பால் குடிக்கும் கன்று
கண்கள் உள்ளிட்ட கனவுடனே சேது அன்னை விழித்தாள்.

உறவுகளின் வரவு கூறும் காக்கைச் சத்தம் கேட்டு
உச்சுக் கொட்டி உச்சிமேலே பல்லிகளின் சிரிப்பு!

கூச்சமின்றி விரிந்த மலர்கள்- அதன் சுற்றமெல்லாம் மறைக்க
காய்த்த வாழை மரத்தின் குலையில் கனிகள் மஞ்சள் பூச....



நேற்றிருந்த வனப்பை காட்டில் இன்று சோபை துலங்க,
மாற்றமதை உணர்ந்த பெற்றமனது சிலிர்த்துக் களித்தது.

கண்ணுக்குள் பொத்திக் காத்த கண்மணி
சேது எனும் பெயர் பூண்ட அன்ரனி!

கையிடுக்கில் தூக்கி, கதகதப்பாய் அணைத்து,
சின்ன அதரங்களில் - தாய்மை
பூரித்த கிண்ணத்துப் பாலூட்டி இவள் வளர்த்த பிள்ளை!

உடலில் எண்ணெய் பூசி, உருவி ஊறவிட்டு,
உல்லாசக் களிப்புடனே, உந்தியவன் நீந்தி வர
உளம் களித்து இரசித்தபிள்ளை!

காசினியில் நடைபயில, காலில் கற்கள் குத்துமென்றே
காரிகை தன் இடையிற்சுமந்து கட்டிக் காத்து வளர்த்தபிள்ளை!

நோவு, காய்ச்சல் அவனுக்கெனில் நோயுற்று நலிந்ததிவள்
எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிச் சுழன்று கொண்டிருக்க.....

கைக்குள்ளே இருந்த கறுப்பன் தாவலுடன் வாலாட்டி,
உற்சாகக் குரல் கொடுக்க,
வாசற் கதவோரம் வருபவனை உணர்ந்து விட்டாள்.

அவன்......
வாஞ்சையோடு ஓடிவர, வாரியணைத்து முத்தமிட்டாள்.
கூசக் கூசக் கண்கள் அகற்றி குலமகனைப் பார்த்த தாயின்
விழிமீன்கள் உடைப்பெடுத்த அருவியிலே நீந்தின.

'அம்மா" மட்டுமே வாய்மொழி ஆனாள்.
அன்புக்கு உண்டோ அடைக்குந்தாள்?
அன்னைக்கும் பிள்ளைக்கும் இடையென்ன கேள்வி?
அன்னையின் சீராட்டில் 'அன்ரனி"
இவனைப் பிரிந்த இன்னலினை இயம்பின
அவள் இயக்கம்.

வாய்மூடும் மௌனம் தாய்மைக்குப் பூட்டிடுமா?
அன்னை உள்ளத்தை அறியாத பிள்ளையா?
தாயிற்கு இவனென்ன புரியாத தனயனா?
வாயும், வயிறும் வேறு வேறானாலும்
வலியும், வேதனையும் ஒன்றுதானே!

மௌனத்தின் வலிமை மாபெரும் புத்தகம்
வாசிக்க வாசிக்க நீண்டு வளரும்!

அணைப்பும், விருந்தும் அன்னையின் வருடலும்
இகத்தில் எதுவுமே இதனை மிஞ்சாது.

தலைமுடி கோதி, தன்மடியில் தலைசாய்த்த
சேய்முகம் பார்த்தாள் அன்னை.
பார்வையில் நிம்மதி பரவசத்தின் சன்னதி
வீரத்தில் வாகை சூடி வெற்றிகளை ஆள்பவன்
தாய்மையெனும் களத்தினுள் சரணடைந்து நின்றான்.

தாய்மை..........
உலகை மேவும் தத்துவம்
இவன் அடங்குதல் இயல்புதானே!

அன்னையின் கைகளுக்குள் அன்பு வருடலிற்குள்
இன்னவன் இருப்பது இயற்கைக்கு வியர்த்ததா?
சாளர ஓரத்தில் சடுதியில் இவன் நோக்கை
முல்லை கொடி கொண்டு முழுதாக ஈர்த்தது.

மண்நோக்கும் கொடி காண மறவன் உளம் சிலிர்த்தான்
அந்நேரம் மங்கையொருத்தி மனமறைப்பிலிருந்து வெளித்தாள்.

இன்முறுவல் இதழ் தவழ, இவன் இமைகள் மேவின.
கடிவாளம் இன்றி உள்ளம் காற்றிலேறிப் பறந்தது.

காலடியில் வாலாட்டி கண்ணயர்ந்த கறுப்பன்
தெருவோரச் சரசரப்பில் விறுக்கென்று குரைத்தெழுந்தான்.


நாய் குரைத்த நனவுலகு... கனவதனைக் கலைக்க,
கடமை உயிர்த்து புலிமனதில் கர்ச்சித்து அமர்ந்தது.

கண்மூடித் திறப்பதற்குள், முறுவல் உதட்டில் மறைந்தது
அழுத்தம் உறவு கொண்டது.

விழிமூடி மடியிருந்த மகன் முகத்தில் அழுத்தம்
நொடி தோன்றி மறைந்த எழில் பூத்த முறுவல்
நுண்ணிய மாற்றம்தான்!......
அன்னைக்கு அவனைப் புது அதிசயமாய் காட்டியது.

தன்னை யாரோ உற்றதாய் உணர்ந்தவன்
அன்னையின் நோக்கிலே உண்மையை உணர்ந்தான்.

வெட்கித்த மணித்துளியில்,
கரிய முகம் சிவக்க கண்களை மூடினான்.
இன்னவன் சங்கடம் ஈன்றவளுக்குப் புரியாதா?

அம்மா....
அடுக்களை செல்வதாய் அங்கிருந்து அகன்றாள்.
அன்னைதான் அகன்றாள் நெஞ்சத்துள் புகுந்த
பெண் அஞ்சுகம் அகலவில்லை.

எண்ணத்தை அடக்கினான் மறுபடி எழுந்தது
அடக்க அடக்க வலிமை பெற்றுச் சிலிர்த்தது.

அந்தச் சுந்தரப் பைங்கிளியை சந்தித்தால் என்ன?
கேள்வி வண்டாகி மனதைக் குடைந்தது.

No comments:

Post a Comment