Sunday, October 25, 2009

அங்கம் 14

கள்ளம் புகுந்தது

இரவு படர்ந்தது
அவரவர் உறவுகள் தேடியும் கூடியும்
ஊரதன் காரியம் நடந்தது.
கந்தக நெடியின் மையப் பகுதிக்குள்
வாழ்வியல்..... இன்னும் தொடர்ந்தது.

அறையினில் முடங்கி வெளிவரா மகளினை
அழைத்து பூரணம் நெருங்கினாள்
அருகினில் அம்மா காலடி கேட்டு
பெண்மகள் கண்களைத் துடைத்தாள்,
பஞ்சணைக்குள் முகம் புதைத்தாள்.

தலையை வருடிய தாயவள் சேயிடம்
நலமா? என்றே கேட்க
கண்மணி அவளும் தலையைப் பிடித்து
வலிக்குதென்று இயம்பினாள்.

நேற்றைய இரவின் தூக்கக் கெடுதியும்,
வெடிகள் வீசிய கந்தக நெடியும்,
நீண்ட நேர பங்கர் இருப்பும்
தலைவலி கொடுக்கும் அறிந்தது தானே!

'தூங்கி எழுந்தால் தெளியும்" என்றே
பூரணம் தேநீர் தந்து தைலமிட்டாள்.

பிரிவின் பிடியில் உறவுகள்
இரவிற்கிதுதான் பிடித்ததா?
ஊடல் கூடல் அறியாவிடினும்
உயிரின் தேடல் வதைத்தது.

கண்கள் இரண்டும் இணைந்து நனைந்து
செம்மை ஏறிச் சிவந்தன.

இமைகள் பொங்கி வழிந்து நலிந்து
விழிகளை மேவிட விழைந்தன.

நாசி நீர்மை கோர்த்து நிறைத்து
இவள் இன்னல் நிலையைச் செப்பியது.

அழகுப் பூமுகம் உலர்ந்து தளர்ந்து
துளிர்ப்பை எங்கோ தொலைத்தது.

கண்ணெடுத்து ஒருகால்- அவன்
திருமுகத்தைக் கண்டால் போதும்
இப் பெண்மனம் இன்னல் விட்டிங்கு ஆறும்.

உரிமையோடு காண உறவென்று இல்லை
நலம் கேட்க என்றால் நண்பனும் அல்ல,
பாழும் மனம் கிடந்து பைத்தியமாய் அலைந்தது.

'நாளை சென்றவரைக் காணாது போயின்
நஞ்சேனும் உண்டென்னை மாய்ப்பேன்"
உள்ளுக்குள் எண்ணங்கள் பொல்லாச் சிறகெடுக்க
இரவு நீண்டது நீண்டது நீண்டேயிருந்தது.
இவளின் எண்ணமும்
ஓங்கி ஓங்கி ஓங்கி வளர்ந்தது.

கங்குல் கரைந்தது.
பனிப்புகை அகலாக் கிழக்கு வெளிப்பு
பற்கள் துலக்கப் பொடியும், துவைத்த உடையும்,
கிணற்றடி உறவும் விடயம் உறுத்த
பூரணம்.....வியந்த கண்களால் மகளை அளந்தாள்.

இழுத்துப் போர்த்தி இதமாய் உறங்கும்
பிடித்த காலைப் பொழுது- அதை
விடுத்து எழுந்து விரையும் குளியல்
வியப்பைத் தானே வழங்கும்.

நேற்றைய பொழுதின் தலைவலி!
நேரத்தோடு தூக்கம்!
புலருமுன் விழித்த நிலைக்கு
புதிய காரணங்கள் கூறின.

காதல் என்றொரு காவியம் நுழைந்திட
கன்னி மனதில் கள்ளம் புகுந்தது.
பூமகள் போன்ற பெண் மனம் இங்கே
பொய்மையை ஏற்று மணந்தது.

சோதனை, வேதனை வென்று
மாசாதனை படைக்கும் மனதிடம் எழுந்தது.
போதனை இன்றியே புதியபாடம்
பூரணமாக இவளை ஆண்டது.

உற்றவனைப் பார்க்க உயிர் தவித்தது.
உறையுள் விட்டுச் செல்வது எப்படி?
கற்ற வித்தையைக் கை கொடுக்கும்
காரணமாகக் காட்ட விழைந்தாள்.

'ஊர்முழுக்க சீரழிந்ததால்
தொண்டர் சேவைக்கு ஆட்கள் வேண்டுமாம்."

ஈன்றவள் தன் குரல் கேட்கின்றாளா?
கூர்ந்து பார்த்தாள் பைந்தமிழ்ப் பாவை.
அன்னை விழியில் ஆயிரம் கேள்விகள்.
போரதன் இயல்பு மாறிடா வேளை.....
மகளை அனுப்ப மனம் ஒப்பவில்லை.

அடிமேல் அடித்தால் அம்மி நகராதா?
பொய் மேற் பொய்யும் கற்பனைக் கதையுமாய்
பள்ளித் தோழியைப் பரிதாபம் ஆக்கினாள்
கள்ளம் புகுந்த அருமைப் புதல்வி.

அன்புதானே அன்னை என்பது
அவள் உயிரைப்படைக்கும் உலகமல்லவா!
மனம் கசிந்தது.
மகளுக்கு செல்ல அனுமதி மிகுந்தது.

'யாருடன் செல்வாய்?" என்றொரு வினா
அன்னை வாயிடை பகர
சொல்லக் காத்திருந்தவள் போல்
'குழலியோடு" என்று குரல் கொடுத்தாள்
அவசரம் நிறைந்த அவ்வெழில்க் குமரி.

அரைகுரையான அம்மாவின் தலையாட்டல்
அவளை வரையரை கடந்த வான்மயிலாய் ஆக்கியது.
அடுத்த கணம் அம்மா மறைந்தாள்
வீதியில் ஈருருளி விசைப்படகு ஆனது.

No comments:

Post a Comment