Sunday, October 25, 2009

அங்கம் 1

அவல்.

சூரியனுக்கு அழைப்பு விடுத்து
சேவல்கள் கூவும்.
காலை மலர்ந்தது என்று
காகங்கள் கரையும்.

மண்டலியை விழிக்கச் சொல்லி
மயில்கள் அகவும்.
இத்தனையும் கேட்டபடி
மந்தமாருதம் உலவும்.

மெல்லிய புகையாய் பனியின் மூட்டம்.
புல்லினின் மீதே அதன் தனி நாட்டம்.
மெல்ல வளைந்தே நிலத்தினை நோக்கும் - புல்
நுனியினில் தொக்கிடும் பனிநீர்த் தேக்கம்.

பொன்னலரி மொட்டுகள்
மென்மையாக முடிச்சவிழ்க்கும்.
போதை கொள்ளும் வண்டு வரச்
செவ்விரத்தம் பூச்சிரிக்கும்.

கண் குளிர வெண்மை தரும்
கல்யாணி நிதம் பூக்க - தன்
கணுக்குகள் எங்கெங்கும்
கலகலப்பாய் முகை கட்டும்.

ரோசா மொட்டுகள் இதழ் விரிக்க,
கண்டு ரோசங் கொண்ட
நந்தியாவட்டைகளின் நகை வெடிக்கும்.

கஞ்ச மொட்டுகள் கட்டவிழ்க்கப் பார்த்து
தாழை முகைகள் தமைத் திறக்கும்.
கமுகுகள் உதிர்த்த ஆடையின் இடத்தில்
புதிதாய் பிறந்த பாளைகள் மிளிரும்.

பாரம் தாக்கிய கூந்தலில் விரிந்த
தென்னம் பூக்களை அணில்கள் மேயும்.
மாவில், பலாவில் குயில்கள் கூடி
கூவிக் கூவித் தம் துணை அழைக்கும்.









பூத்த மரத்தில் சிட்டுக் குருவிகள்
தாவித் தாவித் தேனினை உறிஞ்சும்.


பட்ட மரத்துப் பொந்தில் இருந்து - எழில்
பச்சைக் கிளிகள் கொஞ்சிக் குலவும்.
எட்ட இடத்தில் ஆழிச் செவிலி
ஏக்கக் கரையில் மோதி நுரைவாள்.









காலைப் பொழுது காசினி நோக்கப்
பொழில்களைத் தேடிப் பொன்னெழில் சிந்திக்
கீழைத் திசையில் கதிரினை விரித்துக்
காதல் கதிரவன் கண் திறந்தான்.

சோம்பல் முறித்துச் சுந்தரப் பைங்கிளி
சோபை நெளிப்புடன் வெளி வந்தாள்.
ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ
அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்.

கற்றைக் குழலது காற்றிடை நெளிய
காவியப் பூங்கொடி கலகலக்க - அவள்
இற்றைத் தோழர்கள் இறக்கைகள் சிலுப்பி
இவளின் வரவை நாடின.

விடியலின் முகப்பில் வீரியம் பிறக்க
கூவலும், குதிப்பும் கூட்டுப் பரபரப்பும்
உலோக வலையை உலுக்கிப் பார்க்கும்
செந்நிறம் ஏறிய செல்ல அலகுகளும்
குறுகுறுவென சிறு குண்டுமணிகளாய்
பெருநகை காட்டும் பண்ணிசைக் கூட்டமாய்
கூட்டைப் பிரிக்கும் பேராரவாரம்.

உவகை பொங்க உள்ளகம் சிரித்தவள்
உலோக வலையைத் திறந்திட
மகிழ்முகம் ஏந்திய மண்நிறப் பஞ்சுகள்
செட்டைகள் விரித்துச் சிலிர்த்தன.
அவை
கூட்டுத்தாவல், குழுமச்சூழ்வென
கொக்கரிப்புக்களை நிறைத்தபடி
ஊட்டம் சேர்க்கும் உணவிற்காக
அவளைச் சுற்றிச் சூழ்ந்தன.










அவள்... .
இக்காவியத்தின் அவல்
கொறித்துப் பார்க்கவும், கொள்கை ஏற்றவும்,
இரசித்து நோக்கவும், இராச்சியம் காக்கவும்
மேதினி எழுந்த மேதை!

அவள் .
எழில் கொஞ்சும் குஞ்சுகளை - தன்
மொழி கொண்டு கொஞ்சுவாள்.
நல்பொழில் நோக்கில்
புலன் மயங்கித் தன்
மொழி மறந்து போவாள்.

செழிப்பான அவள் நாமம்
“செல்வி” எனச் செப்பிடுவோம்.
சலிக்காமல் அவள் கதைக்கு
சிந்தைகளைத் திறந்து வைப்போம்.

பருவகால இடப்பெயர்வால்
பட்டாம் பூச்சிப்படைகள்
பாவையிவளின் மனதை ஈர்த்து
பரபரத்துப் பறந்தன.

விழிகள் விரித்த இளைய குமரி
கைகள் உயர்த்திக் குதித்தாள்.
எட்டவில்லை என்று மீண்டும்
எம்பி எம்பிக் குதித்தாள்.

'அம்மா"
ஈனசுரத்தில் இளமங்கை
வலியகுரல் தளர்ந்தாள்.
மேனி நடுங்க, மெல்ல ஒடுங்கி
மேதினியில் பணிந்தாள்.

மொட்டொன்று சட்டென்று
முகை அவிழ்த்துக் கொண்டது.
கண்களில் மருட்சி வர
காந்த விழிகள் நிறைந்தன.
உணர்வுகளில் மாற்றம்
உதடுகள் துடித்தன.

நிமிர்ந்த தலை நிலம் நோக்க
சின்னவளின் ஆடையிலே
செம்பூக்கள் பூத்தன.
அவை மெல்ல மெல்ல
அடர்ந்து சித்திரங்கள் தீட்டின.

அடுக்களையால் வெளியே வந்த
அன்னையவள் பூரணத்தின்
அருமை மகள் நிலை உணர்ந்து
அகத்தில் களிப்பு சூழ்ந்தது.

“பூப்படைந்தாள் புதுப் பெண்ணாய்
பூரணியின் மகளாம்” என
நாப்பரப்பல் - ஊரின் நடப்பாகி நகர்ந்தது.

நண்பிகள் பட்டாளம் நகைப்பிற்கு - சில
வம்பிகள் அலைந்தார்கள்
வம்பிற்கு! - இவள்
பண்பியல் முன்னே அவையெல்லாம்
பலனற்றுப் போகுமென்று யார் நினைத்தார்?

சீர் செய்தார் தாய்மாமன்
எழில் சித்திரமாய் செல்வி.
ஊர் முழுக்க வைக்காத கண் இல்லை - தனி
உவகையே கொள்ளாத யுவன் இல்லை.

ஓவியப் பெண்ணாய் காவிய நாயகி
கருத்தில் நிறைத்த கணங்களை ஏந்தி
இரசித்தது போதும்.

மனதினைக் கவர்ந்த வனக்கிளி அவளின்
கனவினை வசைக்கும் காவலன் நாடி
காவியத் திசையில் கால்களை செலுத்தி

வாருங்கள்!.....

இன்னொரு பக்கம் இதிலுளது!
அங்குதான் இவளின் விதியுளது.

அங்கம் 2

இடர் காடு

கவனமாக வாருங்கள்!
குண்டுகளும், எறிகணையும்
உயிர் உரசி உலவும் காவலரன் மத்திக்கே
இக்காவியத்தால் நுழைய வேண்டும்!
உயிர் காப்புப் பயிற்சி உங்களுக்கு அவசியம்.

கல்வியில் சிறந்தோன் - இவன்
கலைகளால் உயர்ந்தோன்
சிந்தை நிறை பண்பினன்.
வெள்ளிச் சிலுவையைத் தாங்கியோன்!
தமிழ் அன்னைக்கு ஒரு பிள்ளை
தன் தாயிற்கு தனிப்பிள்ளை
மண்மீட்புப் பணியிலே பாலமிடும் அணிற்பிள்ளை.

ஈழ மீட்புப் போரிலே வேங்கைகள் தனிரகம்
தாய்மண் விடிவிற்காய் ஆகிடுவர் கற்பூரம்
வீரத்தில் உயர்தரம் வீம்பின்றி
செய்யும் செயல்களில் கம்பீரம்
இவர்களுடன் இணைந்த இவனும் ஒரு ரகம்.

போராடப் பிறந்தவன்
எம்மண்ணில் வேரோடிய எதிரிகளை
வேரறுக்க நிமிர்ந்தவன்.
தலைவன் சிந்தையிலே தன்னை நிறைத்தவன்
சொல்லெடுத்துப் பாடிட ஈடில்லா ஆண்மகன்.

இவனுக்கு அன்னை இட்ட பெயர்
"அன்ரனி"
எம் அண்ணன் இட்ட பெயர்
"சேது"
முன்னை எங்கள் சந்ததியர் முடியாட்சி செய்த நாடு
பின் நாளில் சிங்களத்தின் சூழ்ச்சியினால் இடர்காடு
இஃதே
இன்னவன் இதயமதில் மண்தாயை மீட்கும்
விடியல் நெருப்பேற்ற, - அதில்
இலக்கெடுத்து தனை தொடுக்க,
அதன் வழியே
இன்று இந்த காவலரன்
இவனுடைய நிலை பகரும்.

செந்நீரில் குளிக்கும் அன்னை நிலங்காக்க
விழித்த.... இவன் கண்மணிகள்
ஓய்வெடுத்துக் கனகாலம்.

வெட்ட வெளி வானத்தில் வெய்யவன் கொதித்திருப்பான்.
எட்டும் கைத் தூரத்தில் எதிரிப்படை நின்றிருக்கும்
வெட்டப்பட்ட குழிகளுக்குள் இவனும், இவன் தோழர்களும்
வெந்தணலில் வாட்டி விட்ட சுட்ட பழம் போலிருப்பர்.










திட்டமிட்டு எதிரிப்படை திக்கெட்டும் முட்டி, முட்டி
தட்டுப்பட்ட இடமெல்லாம் தாக்குதலை முன்னெடுக்கும்.
எட்டும் ஓர் அடியினிலும் எதிரி வீசும் எறிகணைகள்
பட்டுப் பட்டு வெடிக்கையிலே பல தோழர் துடித்திறப்பர்.

இத்தனையும் கண்முன்னே இமயமாய் விரிந்திருக்கும்
இவன் விழிகளில் நீர் சிறிதேனும் கசியாது
இறுகிய அகத்தினுள் சிறு தீப்பொறிகள் பூக்கும்
அவை
விழிமூடித் திறப்பதற்குள் விசுபரூபம் எடுக்கும்
விரலிடுக்கில் விசை அழுத்த துப்பாக்கி கனலும்
சடசடென்று வேட்டுகள் செருக்களத்தில் சீறும்.

எடுத்து அடி வைக்கின்ற படைகள் நோக்கிப் பாயும்
குண்டுகளால்......
அடுத்த அடி வைக்கும் எதிரி களத்தில் சாவான்.

இத்தனையும் முடிந்த பின்னால் தோழர் உடல் அணைப்பான்
தேம்பி அழும் நெஞ்சோடு தோளில் மெல்லச் சுமப்பான்.
உயிர் ஈந்த வீரர்களின் உறைவிடத்தே சென்று
தோழர் வித்துடலை விதைத்த பின்
கண்சோர்ந்து காயமது களைத்தாடும் போதே
இவன்
மெய் தாங்கும் விழுபுண்ணை மெய்யென்று உணர்வான்.

விருந்திட்டு இவனைத் தேற்ற வீரத்தாய்கள் காத்திருப்பர்
இவனோ....... மருந்திட்ட காயம் ஆற
மணித்துளிகள் போதுமென்பான்.
குறைந்த நேரம் ஓய்வெடுப்பான்
மீண்டும் விரைந்து காவலரன் நிறைத்திருப்பான்.










தோற்றோடிப் போன படை காற்றோடு கதை சொல்லும்
ஆட்காட்டிக் குருவிபோல ஆர்ப்பரித்துக் கெலிகள் வரும்
எம்மினத்தைச்....... சாக்காட்டி தொலைப்பதற்காய்
சரம், சரமாய் செல்லடிக்கும்.

மேற்கொண்டு..... "வானத்தில் பொம்மர்" என்று
வாய் சொல்லி முடிக்குமுன்னே
வாரணத்தில் வந்த படை வரிசையாகக் குண்டெறியும்.
"ம்" என்றால் எழுநூறும், எண்ணூறும்
"அம்" என்றால் ஆயிரம் ஆகாதோ?"
என்றான் கவி படைக்கும் காளமேகம் அன்று,

"ம்" என்றால் ஏழாயிரம், எண்ணாயிரம்
"அம்" என்றால் ஆயிர பதினாயிரம்
குண்டுகள் குதறும் போர்க்கால மேகமிது!
என்கிறாள் ஈழவள் இன்று

இதுவொன்றே
இயல்பென்ற வாழ்வான நிலையில்
இக்காவியக் கதை நகரும் - நிகழ்
காலங்களின் உயிர்ப்பாய். அவ்வழியில்....

நாட்காட்டி தன்னிதழைப் பொலபொலென்று உதிர்க்கும்.
நடக்கின்ற அனர்த்தங்களோ சிறிதேனும் குறையாது.

அங்கம் 3

பிரியசகி

முகாம்களின் ஓரங்களில் முற்றுகைகள் நீடிக்கும்.
மூன்று நான்கு நாட்களில் ஊருக்கு இது பழகிவிடும்.

பள்ளிகள் திறக்கும் பல்சரக்குக் கடைகளில்
வணிகம் சிறக்கும். சந்தைகள் கூடும்
சந்திகளில் புதிய சங்கதிகள் ஒலிக்கும்.

"கோ" உறையும் "இல்"களில் கொடிகள் உயரும்.
கொட்டுமேளம் கொட்டிக் கொண்டாட்டம் நிறையும்.
உடுக்கடிப்பில் கரகாட்டம் உச்சம் நோக்க,
ஊர்மனைத் திரைகளிலே நிதர்சனம் விழித்திருக்கும்.
வடமறவர் ஆட்சிக்கு வழமையான வாழ்வு இது.
-------------

காளை மாட்டின் கழுத்துமணி கிண்கிணிக்க
கிடுகும், பொச்சும் சுமக்கும் அச்சாணி வண்டிகள்,
நிலம் உழுது களை களைந்து
உற்பத்தி பெருக்கி உழைக்கும் உழவர்குலம்,

கயல் துள்ளும் கடல் நடுவே
கரையாத திடத்தோடு வலை வீசும் கடல்மைந்தர்,
பசு சுரக்கும் பால் கறந்து பக்குவமாய் சுமந்து
படலை தட்டும் பால்க்காரர்,

தேவதைகள் உலவுமுன்றல் கூட்டித்
தண்ணீர் தெளித்து தரணியிலே
கோலமிடும் தமிழ்ப்பாவையர்,
இதற்கு மேல்
அதிகாலை என்பதற்கு ஆதாரம் வேண்டுமா?

போர்க்காலச் சூழல்தான் இருப்பினும்,
ஊருக்கு இது பழகியதால்
இத்தனையும் இயல்பாய் நிகழும்.

இரட்டைப் பின்னலிட்டு
கட்டைக் கறுப்புக் குஞ்சம் கட்டி
பள்ளிச் சீருடையில்
கல்வி கற்கச் செல்வாள் செல்வி
குறுக்கொழுங்கை தாண்டிட
ஓர் எழிற்குமரி சேர்ந்திடுவாள்.

இவள் விருப்புடனே
நட்பியற்றும் பிரியசகியே இப்பூங்குழலி!

இவள் வனப்பு தாமரை அவள் அழகு அல்லி
இவள் விழிகள் கயல்கள் அவள் கண்கள் மான்கள்
உதடுகள் ரோசா இதழ்கள் என்றால்
அடுத்தவளதோ கொவ்வைக் கனிகள்.

இவளோ பிள்ளைத் தமிழ் அவளோ கிள்ளைத் தமிழ்
இருவரும் இரண்டு எழில்கள்
இணைந்தே சுற்றும் பொழில்கள்

இவளின் சித்தம் எதுவோ?
அவளின் வாயில் முத்து!
பள்ளித் தோழிகள் மட்டுமல்ல
மனதைப் பகிரும் நட்பில் இணைகள்.

சிங்களப் படைகள் என்றதும் ஏங்கிச்
சிறகை ஒடுக்கிச் சிறு புள்ளாகும்
தங்களின் வகுப்புத் தோழியர் கண்டு
தாங்கொணாக் கோபம் கொள்ளும் பூக்கள்.

எதிரியை எதிர்க்கத் துணியனும் என்பர்.
எழுச்சியில் பெண்கள் இணையனும் என்பர்.
குறைவிலா பலத்தை அடையனும் என்பர்.
இந்தக்.. .
குவலயம் மெச்சவே நிமிரனும் என்பர்.

பள்ளியில் சுட்டிப் பெண்களாய் இருந்தர்.
தலைமை மாணவக் குழுவிலும் திகழ்ந்தர்.
எள்ளென எடுத்த பொருளினை எல்லாம்
எண்ணெயாய் வடித்து ஏற்றம் பெற்றனர்.

அப்பப்போ தலைமைக் குழுவினர் கூடுவர்
அதனிலே செயற்படு திட்டங்கள் தீட்டுவர்.
இப்போதும் இங்கு இணைந்தனர் அனைவரும்
இதற்குக் காரணம் இனிவரும் சங்கதி!

இன ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து
ஈழமண் மீட்க இரும்பூத்த இன்றைய போராட்டம்!
இதனை அடக்கி ஒடுக்க இனவெறியர்
மண்ணோடு மக்களையும், வாழ்வியலையும் சிதைப்பர்
அரசியல் சூத்திரம் அறிந்தவர் அறிவர்.

மக்கள் இணைப்பே போராளிக் குழுக்கள்
மனிதத்தைக் காப்பதே தலையாய கடமை
ஊருராய் இந்நிலை எடுத்து இயம்பியே
இன்னுயிர் காக்க விழைந்தனர் புலியணி

முட்டிய வயிறுகள் ஒட்டியே ஒறுத்திட
பட்டினி நிலை வரும்
உடல் பட்டிடும் இரணத்தை ஆற்றிடும்
மருந்திற்கு அதர்மமாய் தடைகள் வரும்.

'உடனடித் தேவையும், உரிய சிகிச்சையும்
ஒருமித்து இல்லாவிடின் இதயங்கள் கதற,
உயிர் வலி மிகுந்து உடல் நிலம் சாய்ந்துவிடும்.'

விடுதலைப் புலிகளின் வீரத் தளபதி
வீரியத்துடன் உரைக்க
கூடிய மாணவமணிகள்
ஓர்கணம் மருண்டு அரண்டிருந்தர்.

உடனடிச் சிகிச்சையே உயிர் காக்கும் ஆயுதம்
அவசர வைத்தியம் அனைவரும் கற்கலாம்.
அண்டை அயலிலே குண்டினால், செல்லினால்
காயம் பட்ட உயிர்களைக் காக்கலாம்.

பள்ளிகள் தோறும் முதலுதவிப் பயிற்சிகள்
பயின்றிடல் வேண்டும் மாணவக் குழுக்கள்
ஊரே......... கொள்ளிடம் ஆகிடும்
நிலையினைத் தவிர்க்க இணையும்
நங்கையர் கரங்களும் நலிவினை வெல்லலாம்.

நற்பணி ஆற்ற வேங்கையர் செப்பினர்.
மறவர் இயம்பிடும் சேதியைக் கேட்டதும்
மங்கையர் தமக்குள் உறுதியும் பூண்டனர்.

எம் மக்களின் இன்னலை மாற்றி எழுதிட
இம்மண்ணின் மீது மறப்போர் வளரும்.

இன்னலைக் களைந்திடும் - இவ்
இலட்சியப் போரிலே
இரத்தம் வீணே இகத்தில் ஓடியே
இங்கெச் சாவும் இனிமேல் இராதென - தமிழ்
ஈழத்தின் மீது சத்தியம் செய்தனர்.

அன்றே தொடங்கிற்று அவசர பயிற்சிகள்
கவனமாகக் கற்றனர் கன்னியரும், காளையரும்
நன்றே அமைந்தது
நாளாக அவ்வூரில் நாலு திக்கிலும்
முதலுதவி வழங்கிட நலன்பேண் நிலையங்கள்.

தொடர்ந்த நாட்களில்
தோழியர் இருவரும் தொண்டர்கள் ஆனார்கள்
ஊழிப் போரிலே ஊர்படும் ரணத்திற்கு
உடனடிச் சிகிச்சைகள் உவந்து வழங்கினர்.
உயிர்களைக் காத்திடும் உன்னத பணியிலே
இச் சாவித்திரிகள் இயமனை செயித்தனர்.

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை
இவர்கள்
சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

அங்கம் 4

கூற்றுவன் கேட்டால்...

காலதேவன் கட்டளையால் காலடியை விரைவாக்க
தாளடியில் தணல் கக்கல் தணலவனின் புதுயுக்தி.


கொப்புளிக்கும் கொப்பளத்தின் கொடிய வாதை கண்டு,
வேப்ப மரச் சாமரங்கள் வெம்மையோடு தர்க்கிக்கும்.

அவ்வேளை
ஊர்க்கோழி விற்க வந்த ஊரி வீட்டுப் பொன்னம்மா
மோர்க்காரக் கந்தனுடன் முறைத்தபடி நடக்கின்றாள்.

வில்வமர ஆச்சி வைத்த நெய்சோற்றின் வாசனையும்,
முல்லைவன மலர்கை மணங்கமழும் மீன்கறியும்,

காற்றில் ஏறிக் கதைபேசி பல நாசிகளை உரசிவிட
நாவூறி நீர் வடிதல் நளினமாக நிகழ்கிறது.

முட்டி நிறைத்த கள் அருந்தி
போதை முற்றிப்போன குப்பன்
அர்த்தமுள்ள இந்துமத தத்துவத்தைப் பாடிவர
பெருஞ்சத்தமுடன் வெடித்த வெடி - அவனைச்
சச்சரவுக்கு இழுத்தது;

வந்த வழி தள்ளாட,
சிந்தும் சொற்கள் தடம்புரள,
தூசனைகள் துள்ளாட,
பேரினவாதியரைப் பெருஞ் சண்டைக்கிழுத்தான்.

ஆற்றுவார் இன்றி அவனியல் தொடரவே
தோற்றமா காளியராய் தோன்றிய நங்கையர்கள்
அங்கமைந்த........
முதலுதவி நிலையத்தின் முக்கிய தொண்டர்கள்.

கள்போதை கொண்ட குப்பன்
விழி விரித்து, உடல் நெளித்து,
உள்ளுக்குப் போனவரால் உன்மத்தன் போலானான்.

சுயம் இழந்த அவனுக்கு சுந்தரியர் சினம் பெரிதா?
உறுமினான், செருமினான் - தன்நிலையின்
காரணத்தைப் பொருமினான்.

அதே நேரம்,
உதிரத்தில் குளித்து, ஈரமுற்ற மேனியனாய்,
சுயமிழக்கும் தோழனைச் சுமந்து முதலுதவி நாடிய
ஓர் செயல்கள வீரன்
குப்பனின் போதையை குலைத்தெறிந்து வென்றான்.

செருக்களச் செம்புண் ஏற்ற செம்மலினைக் காக்க சேது,
விரைந்தோடி வந்தநிலை விளக்கி சொல்வதென்றால்
வளி ஒன்றால்தான் முடியும்.

ஊற்றெடுத்த உதிர ஆற்றில், உருக்குலையும் இச்சகாவை
கூற்றுவன் கேட்பதற்காய் காற்றாக விடுவானா?

எத்தனையோ தோழரினை
எமன் பிடுங்கத் தோற்றவன்தான்......
இன்னவனை மட்டுமென்ன எளிதாகக் கொடுப்பானா?

கண்மணிகள் பூஞ்சையிட களைத்தயர்வு ஏற்றிருக்கும்
இன்னவன் நாமம் செப்பில் இனிக்கின்ற 'இனியவன்".

சின்னவன் சேது இங்கே தன்நிலை இழக்கின்றான்.
இன்தமிழ் தோழனுக்காய் செந்தணலில் துடிக்கின்றான்.

சயனத்தைத் தெளிவிக்கும் சிகிச்சையினை அளித்தபடி - ஓர
நயனத்தில் சேதவன் நிலை கண்ட மங்கையரின்
மனதிற்குள் பயம் மெல்ல பல்லிளிக்கத் தொடங்கியது.

நாழிகைகள் ஆக, ஆக மெலிந்த நண்பன் நலம் சூம்ப
சேயிழைகள் மீது சேது, - பெருஞ் சினத்தோடு சீறி நின்றான்.

ஏந்திழைகள் மெல்லமெல்ல ஆமையாகும் வேளையிலும்
எளிமையான மருத்துவத்தை ஏற்றுப் பணியாற்றினர்.

நிமிடங்களின் நகர்வுகள் நீள்கதையாய் ஆகுமுன்னர்
காற்றைக் கிழித்து ஒரு கருநீல வேன் வந்து
ஏற்றமிகு மறவனேந்தி, எமனுக்குச் சவால் விட்டு
வீதிவழி புழுதி பொங்க, விரைந்தோடி மறைந்தது.
ஆசுவாசமாக சேது....
சிந்தை தணியச்சினம் துறந்தான்.

கண்முன்னே கலக்கமுற்று இருபெண்மை தவித்திருக்க,
இன்னவனின் ஈர்விழிகள் இருவரிலும் தொக்கியது.

படபடப்புக் கொண்டிருந்த பருவப் பூங்குழலி - இவன்
நேரிட்ட விழியை ஏறெடுத்துப் பார்த்தாள்.
பதைப்புடனே நின்றிருந்த பைந்தமிழ் செல்வி
தன்கயலை நிலம்நோக்கி மெல்லச் சாய்த்தாள்.

பூங்குழலி மான்விழியில் பூக்கள் மலர்ந்தன.
ஈர்க்கும் பார்வையுடன் இங்கெதிரே நின்றிருக்கும்
ஈழம் மீட்கும் இளந்தமிழ் வீரனிவன்
இவள் நோக்கில் புதிய சொந்தம் ஆனான்.

விபத்தொன்றில் பறிகொடுத்த தாய்மடி உறவு
இகத்தினில் இன்று காட்சி தரக் கண்டாள்.

அகன்ற நெற்றியும், நேரிய புருவமும்,
எவரையும் ஊடுருவும் ஆளுமை விழிகளும்,
கூரிய நாசியும், குவிந்த புன்னகையும்,
ஆண்மைக்கே உரித்தான அழுத்த உதடுகளும்,
அடர்த்தி நிறைந்த எடுப்பான மீசையும்,
புடைத்த தோள்களும், நிமிர்ந்த மார்பும்,
உரமது ஏறி உயர்ந்த கால்களும்,
திடத்தை நிறைத்து திரண்ட கரங்களும்
தன்னகம் கொண்ட- அந்த கம்பீரன் முகத்தை
ஓர விழியாலும் ஏறெடுக்க இயலாது
தோற்று இடறினாள் தோகையவள் செல்வி.

இதயத்து ஓசை ஓங்கி ஒலித்தது.
கைகளும், கால்களும் சில்லிட்டுச் சிலிர்த்தன.
புருவங்கள் துடித்தன- ஏதோ
புதுவித உணர்வொன்று புதிர்க்கோலம் போட்டது.
சுவாசச் சுவரெங்கும் காற்று சுமையானது.
நுதலில் நீர் துளிர்க்க,
நா உலர்ந்து ஒட்டியது.

அங்கம் 5

மனப்புதிர்

வேலாடும் விழிகளிலே வீரம் விளையாடும் - அது
வெட்கித்து நிலம் நோக்கில் நாணம் அரசாளும்.

கோலமிடும் தோகையவள் குறுநகையில் சிவக்க
காலமது மனங்கனிய காளையவன் நெகிழ்ந்தான்.

ஏறெடுத்துப் பார்த்தமகள் பாசக்கொடி ஆனாள்.
ஓரவிழி தாழ்த்தியவள் கேள்விக் குறியானாள்.

இவன்
தேர்வெழுதும் மாணவனாய்
திகைக்கின்ற வேளை- பெரும்
மாயமது மனப்புதிரில் மேயுமான் ஆச்சு.

'நா" என்ப திருப்பதிங்கே நகைப்பிற்கிடங் காட்டி
மும்முனை உணர்வினுள்ளே மாபெரும் போட்டி!

பூங்குழலி தேன்குரலால் புவியீர்ப்புக் காட்ட
வானூர்தி தரைதட்ட வரிப்புலி விழித்தான்.

தீந்தமிழில் உரையாடி, தேன்பெயர்கள் பரிமாறி,
காந்தமகள் ஈர்க்குமுன்னே கடமை வீரன் விடுபட்டான்.

மூன்றெழுத்துப் புத்தகத்தில் மூழ்க இருந்தவனை
மூன்றெழுத்துச் சத்தியம் முன்னிழுத்து நிறுத்தியது.

ஆவல் கொண்ட துடிப்போடு அகம் இங்கு அல்லாட
தாவலுடன் தேகம் அங்கே ‘நகர்" என்று பணித்தது.

காவலரன் சேதுவை கடுகதியில் அழைத்தது.
களம்நோக்கி அவன் கால்கள் காற்றாகி விரைந்தன.

தீரப்புலி வீரன் சென்ற திக்குதனை நோக்கி
சோர்வுற்றுப் பார்த்திருந்தாள் சுந்தரப் பாவை செல்வி.

பூங்குழலி சகி முகத்தில் புதினத்தாள் படித்தாள்
பொல்லாத பருவமடி என்று மனம் துடித்தாள்.

கண்சிமிட்டி கார்குழலி கதைபேசிச் சிரித்தாள்
கையிரண்டால் முகம்மூடி, கனிமயிலோ சிவந்தாள்.

மணித்துளிகள் ஆக ஆக மங்கையரின் களிப்பு
மத்தாப்பைப் பார்த்த மழலையெனச் சிரித்தது.

இவ்வங்கனைகள் ஆனந்தம் அரைநாளாய் பார்த்து
ஆதித்தன் அயர்வுடனே ஓய்வெடுக்கப் போனான்.
-------------

கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,
எட்டிப் பிடிக்கும் ஆமி, புலியும்,
முற்ற வெளியில் எட்டுக் கோடும்,
முகப்புத் திட்டில் பாண்டிக் குண்டும்,

கபடி ஆட்டமும், கொக்கான் வெட்டியும்,
சோகிகள் வீசி தாயவீடும்,
ஒளித்துப் பிடித்துக் கல்லுக் குத்தியும்
அகவைகேற்ற அவரவர் ஆட்டம்.

உடல்வலு சேர்க்கும் உதைபந்தும்,
தோள்திடம் ஊட்டும் கரப்பந்தும்,
மனமகிழ் பெண்களின் பூப்பந்தும்
மாலையில் ஊரவர் மகிழ் விளையாட்டு.

ஒட்டுக் குந்தி ஊர்ப்புதினமும்,
திண்ணையில் கூடி திரண்ட சுற்றமும்,
தட்டிக் கடையின் தனிச்சலசலப்பும்
தழுவத் தழுவ மணித்துளி நகர்ந்தது.

அந்திவானம் செம்மை சிந்திட
அழகு முகில்கள் ஏந்தியது - அந்தி
மந்தாரை குங்குமப் போர்வையை
மாதுளம்பூக்கள் பழித்தன.

மெல்லிசைதந்த புள்ளினம் - புதுப்புது
மெட்டுகள் கட்டி இசைத்திட,
மேய்ச்சல் முடித்த ஆடும், மாடும்
வீடுகள் நோக்கி நடந்தன.

சேவை மாற்றம் சேயிழை இருவரும்
மனை சேரும் வழிகூட்ட - செழும்
பாவை மனஇழை மோனம் பூண்டது.
பாதை நீண்டது.

கூடவந்தவள் குறுநகை புரிய,
விடைதர மறந்து விட்டாள்.
வாயிலா மடந்தை வண்ணப் பூங்கொடி
வன்மொழி தொலைத்து விட்டாள்.

மாயை தன்னை மணந்தது அறியாக்
காதல் கவிந்தமகள். - பெரு நோயை
அணைத்ததில் துளிர்ப்பைக் கண்டாள்.
புதுத் துடிப்பை பெற்றெடுத்தாள்.
------------------

காசினி மெல்ல கங்குலை உடுத்த
அந்திச்சந்திரன் வான் சந்திக்கு வந்தான்.

மெல்லிய கருக்கலில்
மனக்கள்வனைக் கண்டபின்
முல்லையும்,மல்லியும் முக்காடா போடும்?

கன்னிமை துறந்து விரிந்து சிரித்தன.
காமனை உசுப்பிக் கள்வெறி ஊட்டின.

மொட்டுகள் கட்டவிழ்ந்தால் வண்டுகட்குக் கசக்குமா?
மட்டு அருந்திக் கிடந்தன. மதி மயங்கிப் பறந்தன.

மாருதம் முல்லைமணத் தேரிழுத்துக் கொண்டிருக்க,
சேயிழை செல்விக்கு ஊண் பிடிக்கவில்லை
உயிரெனும் வலைக்குள்ளே காதல் மீன் துடித்தது.

விழிமூடும் இமைக்குள்ளே வேங்கையின் சீற்றம்.
அது அர்த்தமேயின்றி வரைந்தது,
அவள் அதரங்களில் புன்னகையோவியம்.

இமைக்குள்ளே சீற்றத்தைச் சிறைப் பிடித்தவள்
சினத்தை இரசிக்கும் கலை எங்கு கற்றாள்?

விடிய மறுக்கும் இரவுப் பொழுது
கடக்கும் கணங்களை மா யுகங்கள் ஆக்கின.

தலைசாய்த்துக் கண்ணயர்தல் கனவாகிப் போக,
பாயும், தலையணையும் பகை பொருட்கள் ஆகின.

அங்கம் 6

அண்டத்தைக் கடந்தவள்

அல்லும், பகலும் நாட்களைக் கடத்தின.
வாரத்தின் நகர்வு திங்களாய் மலர்ந்தது.
திங்கள்கள் அசைந்து, காலாண்டை கடந்து
அரையாண்டை நெருங்கி ஆறாக விழைந்தன.

ஊர் அழிக்கக் கிளம்பும் சீர்கெட்ட படையடக்கி
கூர் ஆயுத முனைக்குள்ளே.....
ஈர்விழிகள் அயராது நிலங்காக்கும் களவீரரின்
யாழ் அணித் தலைவன்,....
முற்றுகையிட்டு எதிரிமுகாம் அழிக்கும்
கெட்டிய பணி பற்றி அண்ணன் இட்ட கட்டளையாய்
பற்பல செயற்பாட்டை எடுத்துரைத்தான்.

அதன் முன்
செருக்கள வீரரிற்கு சில நாட்கள் ஓய்வு தந்து
சுற்றத்தை கண்டு சீராடி வரப் பணித்தான்.

இச்செருக்களத்தில், செங்குருதிக் குளத்தில்,
ஓர்மம் மிகுந்து,......
உயிர் பிரியும் கணத்தை எதிர் நோக்கும்
இந்த இளைய புலி வீரர்கள்!
ஆண்டு, அநுபவித்து உறவுக்குள் முகிழ்த்து
போதுமடா சாமி என பற்றறுத்த துறவிகளா?

இல்லையே! .
ஆளுமையும், அநுபவிப்பும் உறவுகள் சங்கமிப்பும்
உணர்வாலே அறியாத - இருந்தும்
பற்றுகள் நிறைந்த பாசத் துறவிகள்

தாயகப் பற்றினால்
அனைத்தையும் ஒதுக்கிய இளைய ஞானிகள்

யாழ் அணித் தளபதி செப்பிய கூற்றினால் - வீரர்களின்
உள்ளத்து மூலையில் ஒதுங்கிய உறவுகள்
உருப்பெற்று கண்முன்னே உலவத் தொடங்கினர்.

உயிர் கசிய..........
அம்மாவும், அப்பாவும் அன்புடைய சோதரரும்,
அண்டை, அயலோடு, அகம் நிறைத்த நண்பர்களும்
சிந்தைக்குள் மறைந்திருக்கும் சொல்லாத உறவுகளும்,
எத்தனையோ, எத்தனையோ......
வீரர்களின் எண்ணத்தில் விழா எடுக்கத் தொடங்கினர்.

சேது மட்டும் இந்நிலைக்கு விதி விலக்கா?
அவனுக்கு என்ற உலகம்.....
அன்னை எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கம்.

அன்னையைக் கண்டு...
அவள் மடியில் தலைசாய்க்கும் ஆவல் வளர
சேது எனும் ஆண்மகன் செல்லக் குழவியானான்.

அம்மா!... அன்புக்குச் சொர்க்கம்.
அம்மா!.... பண்பெல்லாம் அவள் பக்கம்.
அம்மா!..... அகிலத்தை அடக்கும் தாய்மை.
அம்மா!.... வார்த்தைக்குள் அடங்காப் பாசத்தீ

எண்ணக் கோலங்கள் கொழுந்து விட்டன.
உள்ளத்துள்..... அண்டத்தைக் கடந்து அம்மா கடவுளானாள்.
-----------------




வெள்ளி மீன்கள் ஓய்வெடுக்கும் விடிகாலைப் பொழுது
துள்ளியோடி தாய்மடியிடித்து பால் குடிக்கும் கன்று
கண்கள் உள்ளிட்ட கனவுடனே சேது அன்னை விழித்தாள்.

உறவுகளின் வரவு கூறும் காக்கைச் சத்தம் கேட்டு
உச்சுக் கொட்டி உச்சிமேலே பல்லிகளின் சிரிப்பு!

கூச்சமின்றி விரிந்த மலர்கள்- அதன் சுற்றமெல்லாம் மறைக்க
காய்த்த வாழை மரத்தின் குலையில் கனிகள் மஞ்சள் பூச....



நேற்றிருந்த வனப்பை காட்டில் இன்று சோபை துலங்க,
மாற்றமதை உணர்ந்த பெற்றமனது சிலிர்த்துக் களித்தது.

கண்ணுக்குள் பொத்திக் காத்த கண்மணி
சேது எனும் பெயர் பூண்ட அன்ரனி!

கையிடுக்கில் தூக்கி, கதகதப்பாய் அணைத்து,
சின்ன அதரங்களில் - தாய்மை
பூரித்த கிண்ணத்துப் பாலூட்டி இவள் வளர்த்த பிள்ளை!

உடலில் எண்ணெய் பூசி, உருவி ஊறவிட்டு,
உல்லாசக் களிப்புடனே, உந்தியவன் நீந்தி வர
உளம் களித்து இரசித்தபிள்ளை!

காசினியில் நடைபயில, காலில் கற்கள் குத்துமென்றே
காரிகை தன் இடையிற்சுமந்து கட்டிக் காத்து வளர்த்தபிள்ளை!

நோவு, காய்ச்சல் அவனுக்கெனில் நோயுற்று நலிந்ததிவள்
எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிச் சுழன்று கொண்டிருக்க.....

கைக்குள்ளே இருந்த கறுப்பன் தாவலுடன் வாலாட்டி,
உற்சாகக் குரல் கொடுக்க,
வாசற் கதவோரம் வருபவனை உணர்ந்து விட்டாள்.

அவன்......
வாஞ்சையோடு ஓடிவர, வாரியணைத்து முத்தமிட்டாள்.
கூசக் கூசக் கண்கள் அகற்றி குலமகனைப் பார்த்த தாயின்
விழிமீன்கள் உடைப்பெடுத்த அருவியிலே நீந்தின.

'அம்மா" மட்டுமே வாய்மொழி ஆனாள்.
அன்புக்கு உண்டோ அடைக்குந்தாள்?
அன்னைக்கும் பிள்ளைக்கும் இடையென்ன கேள்வி?
அன்னையின் சீராட்டில் 'அன்ரனி"
இவனைப் பிரிந்த இன்னலினை இயம்பின
அவள் இயக்கம்.

வாய்மூடும் மௌனம் தாய்மைக்குப் பூட்டிடுமா?
அன்னை உள்ளத்தை அறியாத பிள்ளையா?
தாயிற்கு இவனென்ன புரியாத தனயனா?
வாயும், வயிறும் வேறு வேறானாலும்
வலியும், வேதனையும் ஒன்றுதானே!

மௌனத்தின் வலிமை மாபெரும் புத்தகம்
வாசிக்க வாசிக்க நீண்டு வளரும்!

அணைப்பும், விருந்தும் அன்னையின் வருடலும்
இகத்தில் எதுவுமே இதனை மிஞ்சாது.

தலைமுடி கோதி, தன்மடியில் தலைசாய்த்த
சேய்முகம் பார்த்தாள் அன்னை.
பார்வையில் நிம்மதி பரவசத்தின் சன்னதி
வீரத்தில் வாகை சூடி வெற்றிகளை ஆள்பவன்
தாய்மையெனும் களத்தினுள் சரணடைந்து நின்றான்.

தாய்மை..........
உலகை மேவும் தத்துவம்
இவன் அடங்குதல் இயல்புதானே!

அன்னையின் கைகளுக்குள் அன்பு வருடலிற்குள்
இன்னவன் இருப்பது இயற்கைக்கு வியர்த்ததா?
சாளர ஓரத்தில் சடுதியில் இவன் நோக்கை
முல்லை கொடி கொண்டு முழுதாக ஈர்த்தது.

மண்நோக்கும் கொடி காண மறவன் உளம் சிலிர்த்தான்
அந்நேரம் மங்கையொருத்தி மனமறைப்பிலிருந்து வெளித்தாள்.

இன்முறுவல் இதழ் தவழ, இவன் இமைகள் மேவின.
கடிவாளம் இன்றி உள்ளம் காற்றிலேறிப் பறந்தது.

காலடியில் வாலாட்டி கண்ணயர்ந்த கறுப்பன்
தெருவோரச் சரசரப்பில் விறுக்கென்று குரைத்தெழுந்தான்.


நாய் குரைத்த நனவுலகு... கனவதனைக் கலைக்க,
கடமை உயிர்த்து புலிமனதில் கர்ச்சித்து அமர்ந்தது.

கண்மூடித் திறப்பதற்குள், முறுவல் உதட்டில் மறைந்தது
அழுத்தம் உறவு கொண்டது.

விழிமூடி மடியிருந்த மகன் முகத்தில் அழுத்தம்
நொடி தோன்றி மறைந்த எழில் பூத்த முறுவல்
நுண்ணிய மாற்றம்தான்!......
அன்னைக்கு அவனைப் புது அதிசயமாய் காட்டியது.

தன்னை யாரோ உற்றதாய் உணர்ந்தவன்
அன்னையின் நோக்கிலே உண்மையை உணர்ந்தான்.

வெட்கித்த மணித்துளியில்,
கரிய முகம் சிவக்க கண்களை மூடினான்.
இன்னவன் சங்கடம் ஈன்றவளுக்குப் புரியாதா?

அம்மா....
அடுக்களை செல்வதாய் அங்கிருந்து அகன்றாள்.
அன்னைதான் அகன்றாள் நெஞ்சத்துள் புகுந்த
பெண் அஞ்சுகம் அகலவில்லை.

எண்ணத்தை அடக்கினான் மறுபடி எழுந்தது
அடக்க அடக்க வலிமை பெற்றுச் சிலிர்த்தது.

அந்தச் சுந்தரப் பைங்கிளியை சந்தித்தால் என்ன?
கேள்வி வண்டாகி மனதைக் குடைந்தது.

அங்கம் 7

மௌன வலிகள்

விடுமுறை நாட்கள் விரைந்து மறைந்தன.
வீதியில் வெயிலின் கடுமையும் தணிந்தது.

உண்ட களையில் உறங்கி விழிக்கும்
மதியமும் மாலையும் கலந்த மத்திமம்.

பிரிவுப் புயல் மையமிட
மௌனம் வலிகளைச் சுமந்தது.

கண்களின் ஓரத்தில் கனிவை மீறி
கண்ணீர் வரவா? என்றது

தாய்க்கும், சேய்க்கும் இடையினில் பிரிவு
சீனச் சுவராய் எழுந்தது.

மோதிரம் தந்தவன் மேதினி நீத்த பின்
சொந்தம் என்பது அவள் சிந்தைக்கிவனே!
அப்பிள்ளையைத் தவிர எவர் உணர்வார்?

ஊண் ஊட்டினாள்,
உப்பரிகை தேடும் உல்லாசன் அல்லாது
தன் மானத் தேன் ஊட்டி- தமிழ்
மானம் காக்க வளர்த்தாள்.
-------

ஈருந்தி எடுத்து, இயல்பு நிலை சோதித்து
ஈன்றவள் விடைக்காய் இளையவன் நிமிர்ந்தான்.

தாய்மை... .
நெஞ்சுக்குள் தவிப்பு
நஞ்சணிந்த நெஞ்சம்!
காணக் காண கருவறை கலங்கியது.

ஏக்கத்துடன் தாயும்,
நாடு மீட்கும் நோக்கத்துடன் சேயும்!

இனி..

ஈன்றவளைக் காண்பது எப்போது?
தாய் அணைத்து முத்தமிட்டாள்.
தனயன் மெல்ல விடை பெற்றான்.

ஈருருளி மிதியடியை இவன் கால்கள் உந்த
பார் விரித்த பாதை பயணத்திற்கு அழைத்தது.

சீராட்டி வளர்த்தவள் சிறிதாகிச் சிறிதாகி
ஓர் பொட்டாகி ஒழுங்கை முனையில் மறைந்தாள்.

காலுந்தக் காலுந்த காற்றைக் கிழித்து
ஈருருளி அவன் கனத்தை ஏற்றுப் பறந்தது.

அதனையும் விஞ்சி- அந்த
கார்காலத் தென்றல் முகம்
இளையவனை ஈர்த்தது.

கொள்ளை எழில் கொஞ்சும்
கோதை முகம் காண,
எல்லை இல்லாமல் ஏக்கங்கள் நிறைய,
நலன்புரி நிலையருகே
வந்த நிலை புரியவில்லை.

ஆவல் பொங்கி, அகம் ஆள
தேவதையைத் தெரிகிறதா? எனும்
தேடல் விரிந்து, விழி ஆள
தெரு மறந்து போனது.
---------------------------------------------------------

எறிகணைகள் குறிப்பெடுத்து சீரழித்த பாதை
ஆங்காங்கே புண்ணாகிப் புதரானது.

வில்வண்டி பயணிக்கும்,
வீதியோரப் பயணிகளின் ஈருருளி ஏறி இறங்கி
எளிதாகப் பறக்கும் கரணம் அடிக்கும்.
பள்ளமும், மேடும் பழகிய பாதையில்
உழவு இயந்திரங்கள் உறுமி வெடிக்கும்.

அவ்விடருற்ற சாலையில் ஈருருளி தடுமாறி,
இயல்பிழந்து, மேற்கிளம்பிச் சின்னக் கரணமிட,
தன்னை நிலைப்படுத்த, தரணியில் கால் ஊன்ற,
நெஞ்சத்தில் அணியான நஞ்சுக் குப்பியது
கண்டத்தைச் சுற்றி அவன் கவனத்தை ஆண்டது.

சின்னஞ் சிறுபொழுது மின்னலிட்ட சிந்தனை
அன்னவன் அகம் ஒடுக்க அக்கணமே
அவ்விடம் விட்டு அகன்றுவிட நினைத்தான்.

ஈருரளி, இடருற்று சாய்வேற்ற நிலை
திருத்தி, அதை நிறுத்தி,
நெற்றி வேர்வை ஒற்றி நிமிர்ந்தான்
கல்லாகச் சமைந்தான்.

தவிர்த்துவிடத் துணிந்தது,
அகன்று போக நினைத்தது,
இயலாத செயலாக இவன் உறைத்து நின்றான்.

விதி எழுதும் தேவனுக்கு இருகூர் விளையாட்டு!
விடுகதைகள் போட்டாலும் வெளிக்காது அவன் குட்டு!

அங்கம் 8

உரியவன்

உயிரின் தேடல் விசாலமாக
உயரிய இலட்சியம் உளத்தைக் கவரும்.
நாட்கள் தாண்டும். நாளைய பொழுது
நயனம் நிறைக்கும் நாயகன் வருவான்.
தினம் தினம் மனதில் கனமிடும் ஏக்கம்.


காகித மடல்களில் மூடிய இரகசிய கனவுகள்
தேக்கு மரப்பெட்டியின் மூலையில் ஒடுங்கும்.

செயல்களில் மாற்றம். சேவையில் புது நாட்டம்.
சிந்தனையில் செழுமை. வதனத்தில் தனி வசீகரம்.
ஆனால் .
உள்ளம் சிந்தை பறித்தவனின்
சிரித்த முகம் வேண்டும், வேதனை செய்யும்.
அந்த வேங்கை மைந்தனின்
வரவுக்காக -இந்த
மங்கை மைவிழிகள் கரையும்.

ஆவல் பொங்கும். அறிவை மீறும்
குறி பிழைத்திடின் உயிரைக் கசக்கும்.

கருகிடும் நாட்கள் காதலை வளர்க்கும்
காரிகை இவளின் கதை இதுதானே!

பதினை பத்து நாட்கள் ஆனதா?
விதி கனைத்து வினாக் குறி இட்டதா?

காவியக் குமரியின் கைகளைப் பிடித்து
கரைந்திடும் கணங்கள் கவிதை பாடின.

எதிரியைப் பொருதும் புலிவீரர் காண்கையில்
நெஞ்சத்தில் மாபெரும் சோதனை. - இவள் கனவு
மஞ்சத்தை ஆளும் அவனைக் காணாமல்
உருகிடும் இதயத்தில் ஆயிரம் வேதனை.

தெருவில் ஈருந்தி இரதத்தினில் தேவதை
மறுமுனைப் பள்ளத்தில் மானசீக மன்னவன்.
கால்களின் நடுவே உருளியை அழுத்தி
கைப்பிடி இறுக்கும் காரியம் புரிந்தான்.

கருகிய பொழுதுகள் அவள் உயிரிடை இட்ட தீ

அவனைக் கண்டதும்
புனலிட்ட பூக்களாய் உயிர்த்தன.

ஆவலோடு அவடம் வந்த ஆரணங்கு செல்வி
தாவலுடன் ஈருந்திதனை விட்டிறங்கி நின்றாள்.

அரியவன்! .
உயிருக்கும் உறவுக்கும் உரியவன்!

'கண்டேன் செம்மலை" உணர்வுகள் குதித்தன.

ஆவலும் அதை அடக்கும் ஆளுமையும்
சிந்தைக் களத்தில் சண்டைகள் இட்டன.
கை,கால்கள் குளிர்ந்திட,
இரு கன்னங்களும் சூடேறிச் சிவக்கும்
ஒப்பில்லாச் சங்கதி ஒன்றங்கு நிகழ்ந்தது.

அவன் விழிகள் இவளையும்,
இவள் கயல்கள் அவனையும்
ஆளுமையாய் ஈர்த்தன.
புருவங்கள் துடித்துப் புதுக்கதைகள் பேசின

புறச்சூழல்.... .
ஒரு கணம் தான் சுதாகரித்து வென்றனர்.

'பேசலாமா?" .
பிறிதொரு யோசனை
சேதுவின் மனதிலே,
குறுக்கலாய் ஒன்று 'கூடாது" என்றது.

கடமை காத்திருக்க காதலுக்கு என்ன வேலை?
எண்ணமதை எறிந்ததாய் இளையபுலி நினைத்தான்;.

'என்ன பேசலாம்?" செல்வியவள் சிந்தனை.
சிந்திக்க தெரிந்தளவு செயலுக்குத் துணிவில்லை.
வந்தனை செய்யக் கூட முடியாத விந்தை நிலை
இந்தப் பருவப் பாவையிடம் எவர் செய்த மாற்றமிது?

வினாடிப் பொழுதுகளில்
தன் நிலை தேற்றி முறுவல் பூத்தவன்
அகன்று செல்ல அகங்கள் துடித்தன.
சென்றவன் திக்கை நின்று பார்த்தவள்
நெஞ்சம் அவன் பின்னோட
நலன்புரி சங்கம் ஏகினாள்.

இந்த நாடகம்
இருவருக்குள்ளா?
இன்னிரு சோடிக் கண்கள் மறுத்தன.

அங்கம் 9

அகரத்து பாடம்

நன்றி என்பது நாகரீக மேன்மை
பண்பியல் பகரும் அகரத்துப் பாடம்
உரைப்பவராலும், ஏற்பவராலும்
எடுத்துப் போற்றும் சொல்லின் வடிவம்.

இலட்சியம் மனதில் உதித்தவர் முதலில்
பண்பியல் பாடமே கற்கின்றார்.
அலட்சியமாக அதனைத் தவிர்த்தவர் பின்னர்
அவதியுற்றே அரற்றுகிறார்.

நேற்றைய பொழுதின் இப்பூவையர் சேவையை
இன்றுலவும் இவனுயிர் மெய் உரைக்க,
நன்றி செப்ப நலன்புரி வந்தவன்
நங்கை ஒருத்தியே நங்கூரம் இட்டிருக்க
அடுத்தவள் வரவிற்காய் அங்கேயே காத்திருந்தான்.

குழலூதும் இவன் பேச்சு இனியது என்பதால்
குழலிக்கு மணித்துளிகள் மறந்தது உண்மையே.

வீரமூறும் கதைகள்பல விகடமாகப் பேசியவன்
நாவீச்சு ஒலியிழக்க நலங்கெட்டு நலியலானான்
ஒலிதொலைத்த இவன் நிலைக்கு விடை தேடப் பூங்குழலி
அவன் நோக்கும் புறநோக்கில் தன் விழியை ஓடவிட்டாள்.

கண்களில் விழுந்த காட்சி - அதற்கு
இவ்விருவர் மட்டுமே சாட்சி.
குழலி தோழியை அறிந்தவள் தானே!
இனியவன்தான் சற்று விழித்தான்!!

யுகங்கள் தேவையில்லை இந்த யுவரின் நிலையை அறிய
அவர் அகங்கள் பட்ட பாட்டில்
இருவர் மையல் நிலையும் தெரிய...
புரிந்தவர் புரிந்தனர்.

குறும்புடன் சிரித்த இருவர் எண்ணமும்
தீர்வினை ஒன்றாய் தொட்டன.
காலங்காலமாய் காவியக் கதைகள்
சொன்னவை பொய்யாய் ஆகுமா?

ஆடிவரும் தேரழகு அற்புதப் பேரழகு
நிலம் நோக்கி நடை பயின்ற
முகம் சிவந்த தேவதையை
முழுமையாக நோட்டமிட்டான்.

கார்முகிலும், திரிபிறையும்
காண்பவரைக் கவரும் காந்தக் கயல்களும்,
கூரான புருவங்களும், நேரான நாசியும்,
செழுமைமிகு கன்னங்களும், செவ்வண்ண உதடுகளும்,
சின்னக் கழுத்தழகும், செவ்வாழை நிறத்தழகும்,
ஏற்ற வயதுக்குற்றபடி எழில் கொஞ்சும் யௌவனத்தாள்.

இவளைப் பார்த்தொருகால் கவி படைக்க
கம்பன் இங்கு பிறந்திருந்தால்
காவியங்கள் பன்னூறு காற்றாகப் படைத்திருப்பான்.

'சேது மட்டும் விதிவிலக்கா?"
தனக்குள் சிரித்தான் இனியவன்.

அசைந்து வரும் ஆரணங்கை தன்பால் ஈர்ந்திட
தன்னிருப்பைக் காட்டச் செருமினான், இருமினான்.
ஆண் செருமல் கேட்ட அணங்கு அரண்டு நிமிர்ந்தாள்.
அங்கு பேருவகை கொண்ட போரியல் புலி கண்டாள்.

ஈருருளி நிறுத்தி உள் வந்தவளைக் காட்டி
'செல்வி" என்று அவள் சுயம் சொன்னாள் பிரிய சகி.

ஆரோக்கியம் பற்றி அளவளாவல் தொடர்ந்தது.
சீறி பாய்ந்த செல்துகள்கள்
மெய்யுள்ளே சென்று மேலும் மேலும் சிதறியதால்
நெடுநாள் வைத்தியம் இவனுடல் கேட்டது.
அடிக்கடி வைத்தியம் அவனுக்கு என்பதால்
அவையினை முடித்துத் தேறி வந்ததே இவன் நிலை.

சொற்களைப் புடம்போட்டு அவன் செப்பிடச் செப்பிட
செந்தமிழ் மங்கையர் சிந்தை கலங்க
செவிப்புலன் ஏற்றனர்.

-----------

------------------------------------------------------------------------------

இனியவன் விகட கதைகளின் ஊடே
கனிமயில் செல்வியை அளக்க விழைந்தான்.
ஆழியை வெல்லும் ஆழமுடைய
அப்பெண் மனம் முன்னால் தோற்றான்.
அகத்தில் அழுத்தம் முகத்தில் வெகுளி
உள்ளக்குரல் உரத்து உரைத்தது.

நீண்டநேரம் நினைப்பைத் தாக்க
வீரப்புலிமகன் விடைபெற்றான்.

வனப்புக் கோடி பெற்ற இளமயில் நங்கை
வன்மை கோடி கொண்ட தன்னுயிர்த் தோழன்
இணைத்துப் பார்த்தான் நினைப்பே இனித்தது.

செருக்களப் புலியின் தருக்கடக்கும் கிளியிவள் - என
எண்ணத்தில் பலமான கணக்குப் போட்டான்.
இனிக்கும் நினைவுடன் பாசறை வந்தவன்
சுவர் அரன் சுதாவைச் சுகம் கேட்க மறந்தான்.

செல்லும் இடமெங்கும் சேதுவைத் தேடினான்
இன்னவன் ஆவல் இளந்தோழரை ஈர்த்தது.
'உயிர் காத்த கடவுளைப் பூசிக்கப் போகிறான்
வழி காட்டுங்கள்" என
வாய் முட்டும் சிரிப்பொலியும் கேலியும் பிறந்தன.
தோழரின் கேலியைத் தூக்கிப் புறம் வைத்து- போர்த்
தளபாடம் சோதிக்கும் சேதுவிடம் வந்தான்.
'இனியவா" என்று இழுத்தணைத்தான் சேது.

உலைக்களத்தில் காத்தவன்
எமனோடு போராடி உயிர்ப் பறவை மீட்டவன்
நன்றி சொல்கையில் நாத் தழுதழுக்க
இனியவனின் ஓரவிழிகள் கசிந்தன.

'என்னடா இது? ஏனிந்த ஆர்ப்பாட்டம்?"
என்ற சேதுவை மகிழ்வுடன் பார்த்தான்.
மர்மப் புன்னகை பூத்தான்.
பாசறைப் பந்தங்கள் சுற்றியே சூழ்ந்தனர்.
சுகம் கேட்டனர். அகம் திறந்து தம் அன்பினைக் கொட்டினர்.

'பற்று வைத்தனரா என்னிடம்?"
இனியவன் கண்கள் பனித்தன.
இறுகும் உறவுகள் தணித்தன.

அங்கம் 10

காய்க்கும் உறவுகள்

வேவுப் புலிகள் தம் பணி முடிக்கும்
தருணத்தில் ஒளிர்ந்து மிளிர்ந்தனர்.

எதிரி முகாமின் ஏற்றத் தாழ்வுகள்,
ஒலியலை வழங்கும் தொடர்புக் கோபுரம்,
அழிவை பெருக்கும் ஆயுதக் களஞ்சியம்,
படையினர் உறையும் பதிந்த பகுதிகள்,

செல்களை ஏவும் பல்குழல் சுழல்கள்,
குண்டுகள் விதைத்த மண்டலிப் பரப்பு,
மின்சாரம் பாயும் கம்பி வேலிகள்,
அசைவை உணர்த்தும் இரவுச் சூரியர்கள்,

இடிந்து நொறுங்கிய நேற்றைய வீடுகள்,
கற்கள் முட்கள் அடர்ந்த காணிகள்,
நச்சுப் பூச்சிகள் நிறைந்த புதர்கள்,
கட்டுகள் இழந்த சாவுக் கிணறுகள்
என்று பற்பல......

முன்றல் பரப்பில் எதிரி முகாமின்
மாதிரி ஒன்று வடிவம் கொண்டது.

இனியவன் வரவில் கனிந்த உறவுகள்
இனிவரும் பொழுதினை எண்ணிக் காய்த்தன.

தலைவனின் ஆணைக்காய் காத்திருந்த சேனையின்
விழிகளில் ஒளிரும் இலட்சிய நெருப்பு
வலிகளை எரிக்கக் கனன்றது. - அங்கு
தளபதியர் வரவிற்காய் காத்திருந்தர் களப்புலிகள்.

இனியவன் சிந்தை இடரினில் தவித்தது.
நிலைமையை அறிந்து நிலையின்றித் துடித்தது.
தோழனின் மனதினை அறிந்திட விழைந்தது.
துணிந்தொரு கேள்விக் கணையினைத் தொடுத்தது.

'தெளிந்த சிந்தைக்கு தெரியாத விந்தை என்ன?"
புரியாது சேது விழிகளால் வினவினான்.

'தெருவோரப் பள்ளம்"
தூக்கிப் போட சேது அதிர்ந்தான்.
பாக்கியில்லாது பதைப்புற்று விழித்தான்.

'தெருவோடு நடந்தவையை
அருகிருந்து பார்த்தானா?....... எப்படி?"

'என்னடா என் கேள்விக்கு
பதில் இன்னும் இல்லை?"
இனியவன் குரல் ஓங்கி ஒலித்தது.

சேதுவின் நாவோ செயலற்று உலர்ந்தது.
ஆயிரம் எண்ணங்கள் அகத்திற்குள் அலைந்தன.

'அவளைப் பற்றி அறிந்திருப்பானோ?"
கேள்வி கடலாய் கொந்தளித்து எழுந்தது.

செந்தமிழினியவன் செப்பிய கூற்றினால்
சேதுவின் செயலிலே சாது தடுமாற்றம்.

நட்புக்குள் அகப்பட்டால் தப்புதல் இலகா?
வழியின்றி - பேசும் வகையின்றித் தவித்தான்.
தகுந்த காரணம் தேடித் தளர்ந்தான்.

அவ்வேளை .
தப்ப வைக்க வந்ததுபோல் - யாழ்த்
தளபதி வரவு தெரிய,
செப்புக் குண்டுச் சரத்தினை
எண்ணும் விதத்தினால் தன்னை மறைத்தான்.

நாளைய இரவு!!!
பகைவர் முகாமின் பாடைக்கு நாட்குறித்தானது.
மாதிரி வடிவின் முன்- தளபதி
நீட்டிய தடியுடன் திட்டங்கள் செப்பினார்.

குழுக்கள் குழுக்களாய் உழுக்களைப் பிரித்து,
இலக்கு நோக்கி, எளிதாய் நகர்ந்து
முன்னேறித் தகர்க்கும் நெறியினை உரைத்தார்.

மருத்துவக் குழுவும், ஊர்காவற் படையும்
தயார் நிலையில் இருக்கப் பணித்தார்.

கடல் தவிர்த்து முத்திசை வெளிக்கும்
முப்பெரும் தளபதிகள் ஒன்றிலே சேது
என்றது அவர் கூற்று.

திட்டமிடலில் இரவு கரைந்தது.
வட்டச் சூரியன் கிழக்கு நுதலில்
பொட்டுப் போல் எழுந்தான்.

திடலெனத் திரண்ட வயங்களின் மத்தியில்
இனியவன் ஓடித் திரிந்தான்-அவன்
நலத்தினைக் காட்டி, களத்தினை மறுத்த
தோழரை மனதில் சினந்தான்.

பூமியைச் சுற்றும் சந்திர கலைபோல்
சேதுவை இனியவன் சுற்றினான்.

ஆமை போல அகத்தினை ஒடுக்கி,
சேது இனியவனை (ஏ)மாற்றினான்.

அழுத்தமுள்ள அகமது அணையுமா?
உயிர்த்து உயிர்த்து உன்னை (ஏ)மாற்றும்.

இழுத்துப் பூட்டிய இதயம் திறக்கும்
அப்போது பார்க்கிறேன் நண்பா!
வாய்க்குள் வளர்ந்ததை -மனப்
பாய்க்குள் சுருட்டினான்.

அங்கம் 11

வேவு புலிகள்

தாளரவம் கூட உச்சமாய் கேட்கும்
ஆளரவம் தெரியாத அமாவாசை அல்!
வான்வெளி எங்கும் விண்மீன்கள் கண் விழிக்க
காரிருள் போர்த்திக் காசினி அயர்ந்தது.

அரச பயங்கரத்தால்
அரைச் சுவராய் ஆகாயம் பார்த்து
உயிர் மூச்சிழந்த உன்னத மனைகள்.
நோக்கும் இடமெல்லாம் கறுப்புப் பேய்களாக
காண்பவரைப் பயமுறுத்தும் சிறுபற்றைக் காடுகள்.




இவற்றுக்குள்,
நாயகர்களாக நச்சரவங்கள்!
இடிந்த சுவற்றுக்குள்ளும், கறையான் புற்றுக்குள்ளும்
குடி கொண்டு ஆங்காங்கே உலவி
அரசாட்சி செய்யும்!

இந்த மன்னவர்கள் ஆட்சியிலே
இரவு நேர மின்மினிகளும்,
நுணல்களும் தகவலின்றிக் கண் மறையும்.

இவைகளைத் தாண்டினால் அப்பொருது களத்தில்
இராட்சதப் பரிதி வட்டங்கள்
குறுகுறுத்து இருள் அழிக்கும்.

அவ்விடத்தில்
பூமகளின் மேனியெங்கும் வெடிப் பூக்கள் காத்திருக்கும்.
ஆளரவம் அறிந்தால் உயிரைக் காவு கொள்ளப் பூக்கும்

தொடர்ந்தால்.....

காலனின் காதலி போல் மின்காவு கம்பி வேலிகள்.
இன்னும் முன்னேறின் புலி வருமோ? எனக்
கிலி பிடித்த நிலையினில் எலிகளின் காவலரன்!

அக்காவலரன் உள்ளிருக்கும்
கனரகச் சுடுகலன்களும், கைக் குண்டுகளும்,
காயத்தைச் சிதறடிக்கும் மோட்டார் எறிகணைகளும்
காற்றின் சலசலப்பைக் கேட்டாலும் உடன் கனலும்.

வேவு புலிகள் சொல்லச்சொல்ல
வேங்கை மைந்தர் பகிர்ந்து கொண்டர்.

நேரம் வந்தது
வீரர் அணிகள் சீராய் எழுந்தன
தகவல் புலிகளின் பின்னே நகர்ந்தன.

எதிரிக் களத்தைச் சுற்றி வளைத்து
ஏக காலத்தில் சிதைப்பது திட்டம்.

வலிகள் திணிக்கும் காடையர் சுற்றி- பல
வரிவயங்கள் பதுங்கி நகர்ந்தனர்.

ஓரளவு தூரம் நெருங்கி ஆனதும்
நேரம் பார்த்துக் காத்திருந்தனர்.
நள்ளிரவு தாண்டும்வரை நகரக் கூடாது
எள்ளளவேனும் எதிரிக்குத் தெரியக்கூடாது!
சேதுவின் கட்டளை செருக்கள வீரரின்
காதுவழியே கனதியாய் நிலைத்தது.

பற்களில் விசம் வைத்துப் பயமுறுத்தும் நாகங்கள்
நெஞ்சில் நஞ்சணிந்த நாயகர்களைக் கண்டு
நாணிக் கூனி நகர்ந்து ஓடின.

கறுப்புப் பேய்களாய் காட்சி தரு பற்றைகள்
உரம்பெற்ற உழுக்களின் உரசலில்
சிலிர்த்துச் சிலிர்த்துத் தம்சிந்தைகளைத் தொலைத்தன.

முட்களின் ஓட்டத்தில் சில மணிகள் கடந்தன.

நள்ளிரவு சற்று நகர்ந்து கொண்டது.
கால்களால் உந்தி, உந்தி நிலமகள் மீதிலே
உழுக்கள் புழுக்களாய் உடலால் ஊர்ந்தனர்.
பாயத் துடித்திருக்கும் புலிவீரர் பின்னிருந்து
படைத் தளபதி சேது
முன்னேறு உத்திகளை முடுக்கிக் கொண்டிருந்தான்.



முட்களையும், கற்களையும் முகத்தெதிரே மூச்சுவிடும்
விச யந்துக்களையும் தாண்டி...........
ஒளிக்கலங்கள் விழித்திருக்கும ;ஓரத்தை அண்மித்தர்.

'ஒளி வீசிகளை செயலிழக்க வை!"
சேதுவிடம் இருந்து ஆணை பிறந்தது.
செருக்கள வீரர் செயலில் இறங்கினர்.

ஓசையில்லாச் சுடுகலன்கள்
சூரிய விளக்குகள் நோக்கி
கூரிய குண்டுகளை உமிழ்ந்தன.

ஒன்றன் பின் ஒன்றாக, ஈர்பத்து இருள்வலிகள்
இறந்து இருள் வளர்த்தன. தருணம் வாய்த்தது.
தரணி பரவிய மிதிவெடி தாண்டி
எதிரியைக் கதி கலக்குவதே மீதி!....

அங்கம் 12

நஞ்சணிந்த நாயகர்

சேது மூளை கலங்கி விழித்தான்.
கடைசி நேரக் கள நிலைத் திட்டம்
முத்தளபதியர் பிரிவுகள் மாறின.
முக்கியமான சாதனம் சுமந்த சிலர்
நலிந்த திசைக்கு நகர்த்தப் பட்டதால்
மிதிவெடி தாண்டுமுன் மதி வெடித்து அலைந்தது.
கத்தி முனையில் கால் வைத்தாற்போல்
களத்தில் வீரர் நிலைமை!

மிதிவெடி தாண்டுதடைக்கு எங்கே போவது?
சிந்திக்கும் வேளை இதுவல்ல என்றே
சிங்கியைக் கடித்தனர் சீரிய இருபுலிகள்!

பற்களின் இடையே சயனைற் குப்பிகள்
சடசடத்து உடைந்தன- அவை
அப்பாலும், இப்பாலும் அகல முடியாது
இக்கட்டு நிலையிருந்த தோழர்கள் இதயத்தைக்
கசக்கி காயப்படுத்தின.

கண்ணாடித் துகள்கள் காவிய வீரர்களின்
வாய்களில் கீறி தம் கைவரிசை காட்ட
விசமது வேகமாய் அவ்வேங்கையர் மெய்களில்
விரைந்து பரவியது.

கை, கால்கள் குறண்டின.
கழுத்து நரம்புகள் விம்மிப் புடைத்தன,
சுவாசப்பை விரியாது மூச்சுகள் முனகின.
இருப்பினும்......
தாயகத்திற்காக ஆகுதியாகும் பரவசத்தோடு
தோழர்களைப் பார்த்த
அந்த...... வேங்கையர் விழிகள்
வெற்றியைக் கூறி வெறித்து அடங்கின.

இடமும், வலமும் இணைந்தே நகர்ந்த
இளைய புலியரின் இதயங்கள் வெடித்தன.
விம்மி ஒரு கணம் வெதும்பித் துவண்டன.
தும்மி முடிக்கும் ஒரு கண வேளைக்குள்
துயரம் இறுக உள்ளங்கள் உறுதி பூண்டன.
-------


-------

[color="#4169E1"]தலைசாயா தகவல்கோபுரம்[/color]

சூரிய விளக்குகள் சுடர் இழந்திட
எதிரிப் படைகளின் பிடரிகள் கலங்கின.

துயின்றவரோடு- புலி
வந்தாச்சென அரண்டவர் பாதி!
கையில் கிடைத்த ஆயுத பலத்தால்
தம்மைக் காக்க விழைந்தனர் மீதி!

தகவல் கோபுரம் தலை சாயாததனால்
அரச படைகள் தகவல் செப்பின.

பலாலியில் இருந்து கெலிகள் பறந்தன.
வாரணப் படைகளுக்கு வானலை சேதிசெப்ப
உடனடி நடவடிக்கை கடலில் எழுந்தது.

முக்கி, முக்கி குறிகளற்று குண்டுகளைக்
கரைக்குத் துப்பின.

விடமுண்ட தோழர் உடலங்களை
வெடிப்பூக்கள் பரவிய தரையினில் கிடத்தி
வெடிகளின் ஓசை துரிதமிடத் துரிதமிட
வேற்றுவர் தடத்தை வேங்கைகள் தாண்டினர்.

திடீரென ஒளிக்கோலம் சூழ மிளிர்ந்தது.
வௌ;வேறு திக்காக சூரியச் சுடர்கள்
கொழுந்து விட்டன!

கடந்த பகலில்
புதிதாய் முளைத்த இரவுச் சூரியன்கள்
வேவு புலிகளை ஏமாற்றிச் சிரித்தன.
தற்காப்பு எடுக்க முடியாத இக்கட்டுநிலை!
'விளக்கை அடியடா!'
எனும் ஆணை எழுமுன்
வீரியத்தோடு சுடுகலன்கள் சுழன்றன.

ஒளிசிந்திச் சிரித்தவை ஓய்ந்து செத்தன.
ஒரு மூச்சு விட்டு உடல் நிமிருமுன்
விண்ணிருந்து ஒளி பறந்தது.
உக்கிரம் நிறைந்த உலைக்களமதை
பகலாய் மாற்ற
இயந்திரப்பறவை பிரயத்தனம் செய்தது.

தொடர்ந்து....
உலங்கு வானூர்திகள் உறுமி உறுமி
குண்டுகளை உமிழ,
புலிகளுக்கு நிலைமை சாதகம் இல்லையென
மூன்று தளபதியரும் முடிவினை எடுத்தர்.

நிதர்சனம் அறிந்த பெரிய தளபதி
சேதம் தவிர்த்து
உழுக்களின் குழுக்களை வெளிவரப் பணித்தார்.
ஒவ்வொருவராகப் பின்னே நகர்ந்து
தங்களைக் காத்து வெளிவர முனைந்தர்.
உயிர் சேதத்தையும், மெய் காயங்களையும்
தவிர்க்க இயலாது தமக்குள் ஏற்றர்.

நீரிருந்தும், நிலத்திருந்தும்,
நிர்மல வானிருந்தும்
அரச படைகள் அட்டூழியமிட்டன.

சகாக்கள் திரும்பிய சஞ்சல நிலையால்
சேது தனக்குள் மாய்ந்து மருகினான்.

சிந்தை, செயல்
சக தோழர்களைக் காக்க- அவன்
தன்னைக் காக்கும் தன்நிலை மறந்தான்.
அந்நேரம், முன்னரன் எதிரியின்
கனரகத் துப்பாக்கி கனலத் தொடங்கியது.

குண்டுகள் சிதறின. அதிலொன்று
சேதுவின் கன்னத்தருகிருந்த
நாடிப் பரப்பை நறுக்கென்று துளைத்து
அந்தச் செருக்களப் புலியை செகத்தில் வீழ்த்தியது.

அங்கம் 13

உலுக்கும் அத்தாட்சி

வண்டமிழ் மண்ணில் குண்டுமழை பொழிந்தது.
வல்லாளர் ஊரின் மேல் எறிகணைகள் அதிர்ந்தன.
வான் தாக்குதல் வலியது, ஆகையால்
புலிகள் நிலமகள் புதருக்குள் ஒதுங்கினர்.

மக்கள் மனைகள் கற்குவியல் ஆகின.
ஒதுங்கும் உயிர்களைப் பதுங்கும் குழிகள் காத்தன.

படைத்தவன் இடத்தே மன்றாடிக் கிடந்த
பதுமைகளிடையே பைங்கிளி பதைத்தாள்.
நேற்றைய நாள் நகர... நகர..
விட்டு விட்டு அவள் வலது கயல் துடித்தது.

உறக்கம் வராத இரவுப் பொழுதிலே
நுண்ணிய உணர்வு நலிந்து, நலிந்து
சஞ்சலச் சிலுவையைச் சுமந்தது.

ஏன்? என்று அறிய முடியாத
அகத்தில் நிலைத்த அந்த வேதனை!
பார்த்துத் தாய் கூட இவள்
தவிப்பை ஏன்? என்று கேட்டாள்.

தன்நிலை அறியாத தத்தை எதுவென்று சொல்வாள்?
அந்த அதுவே எதுவென்று புரியாத போது!!

நேற்று முன்தினம்
கண் நிறைத்த இவள் கனவு மன்னவன்
ஏற்ற பொறுப்புகள் என்னென்ன என்று- இந்த
எழில்நிலா அறிவாளா?

நள்ளிரவு தாண்டி நகர,
நடப்புகள் என்னவென்று தெரிந்தது.
நங்கைக்கு தன் மனநாயகன் இருப்பும் புரிந்தது.

இரவிரவாக வெடிகளின் ஓசை
இதயத்தைக் கிழித்துவதைத்தது.
உறவை எண்ணி இருந்தவள் உள்ளம்
உவகை இழந்து தவித்தது.

விடிவெள்ளி முளைக்க விடுதலைப் புலிகளின்
பிக்கப் ஓரிரண்டு வீதி வழியே பீறிட்டோடி
பீதியைக் கிளப்பி மறைந்தது.
ஊரே விழித்து வீதியில் நின்றது.
இவள் என்ன விதிவிலக்கா?

இருளும், ஒளியும்
இரண்டற கலந்த இளைய காலை
இவளைக் கடந்தது நாற்சில்லு ஊர்தி
வேகமாய் நகர்ந்த வாகனக் கதவின்
ஓரப்பரப்பெங்கும் இரத்தப் பிசுபிசுப்பு!

கண்கள் கண்ட இக்காட்சி இனி அவள் குலையை
உலுக்கும் அத்தாட்சி ஆகுமென்று அணங்கிவள் அறிவாளா?

ஊர் திகில் கொண்டு வெளிச்ச ஆடைகட்ட
சூழ்ந்த....
போர் மேகம் கொடையில் கர்ணனை வென்றது.
தொடரும் ... கண்ணின் துடிப்பு
கன்னியின் எண்ணத்தில் கலவரக்கதை எழுத,
கரைந்த பொழுதின்
நடப்பியல் கனத்த இன்னல்கள் பகிர,
காயம் பட்டவர் யார்யாரென
விதியோ! கண்ணிகள் வைத்திருக்க,
இந்நிலை விடுவிக்க வருபவர் யாரென..
விலகும் கணங்கள் கேட்டுச் செல்ல.......

நாளில் பாதி பதுங்கும் குழிக்குள்
சாயங்காலம் சத்தம் குறைந்தது.

ஊர் முழுக்க போர் காயங்கள்!
மனிதர்கள், விலங்குகள், மாளிகை, கோபுரம்
விதிவிலக்கின்றி காயம் பட்ட கணக்கு ஏராளம்.

புண்பட்டவரும் சந்திவந்து
புதினம் கேட்கும் அன்றாட வாழ்நிலை!
முதல்முறை என்றால் அல்லவா
அரண்டு ஒதுங்குவதற்கு!....
சேதி கொண்டு தோழி வந்தாள்.

நண்பியைக் கண்டதும் கண்கள் கலங்கின.
சேதியைக் கண்டம் தனக்குள் தடுத்தது.
பாங்கி ஒருத்திக்கு படுகாயம் எனப்
பூரணத்தாய்க்குப் பொய்யை உரைத்தாள்.

குழலி முகத்தைக் காணக் காண
பூரணம் பெரிதாய் கவலை கொண்டாள்.
இந்நிலை உற்ற பெண்மகள் தாயை ஓரங்கட்டினாள்.
ஓர்கை இழுத்துச் சூழ்நிலை மாற்றினாள்
அன்னையைத் தவிர்க்க என்னென்னவோ செய்தாள்.

புதிதான பெண் நடப்பு புதிராக இருப்பினும்
பெரிதாக எண்ணவில்லை பெற்றெடுத்த பெருந்தகை!
ஆதலால்....
போர் புதினம், ஊர் புதினம் அறிய
தந்தையொடு, தாயும் தலை வாசல் ஏகினாள்.

உள்ளே...
சாளர வழியாக உள்ளேகி மாருதம்
மங்கையர் மத்தியில் உலவியது.


ஆளரவம் அணைந்ததும் சகியை அணைத்தாள் குழலி
விசித்திரமாய் இவள் நோக்க விளக்கமின்றி
பேச்சினிலே தெளிவுமின்றி திக்கித்திணறித்
தவித்தாள் சேதி சொல்லும்தோழி
எதற்கென்று தெரியாது எழிற்செல்வி விழித்தாள்.

'என்னவென்று சொல்லேன்டி?'

'என்னவென்று சொல்வேன்?
ஒப்பில்லா உன் காதலுளம் எப்படித் தாங்குமடி?'

பாங்கி வாய் முணுமுணுப்பில் பதறினாள் பைங்கிளி
'என்னவர்க்கு.......'
செல்விக்கு சொற்கள் வெளிவர மறுத்தன.

'காயம் பட்டவர் காலனுக்கு அருகிலாம்!
ஊர் முழுக்க இதுதான் பேச்சு!'
கேட்கக் கேட்க கேவல் எழுந்தது.

காயம் பட்டவர் காலனுக்கு அருகிலா?
எதையும் கேட்கும் புலனதை ஏந்திழை இழந்தாள்.
மெல்ல மெல்ல கண்கள் இருள
மேற்கொண்டு எதனையும் உணராது விறைத்தாள்.

சேதியதனைப் பாதி பகருமுன்
மூர்ச்சையாகும் அப்பேதையை
அருகிருந்தவள் அணைத்தாள், தேற்றினாள்.
தலையை வருடித் தைரியம் சொன்னாள்.

அரற்றிப் பிதற்றி அழ முடியாத
அன்புப் பாங்கியின் அகநிலை அறிந்தவள்- மேலும்
அத்தையலை நோக்கும் தைரியம் இழந்தாள்.

காதோரம் மெல்ல
'கலங்காதே செல்வி கடவுள் இருக்கிறார்."
என்றே கூறி பிரியசகியைப் பிரிய மனமின்றி
மெல்ல அசைந்து மௌனமாக அகன்றாள்.

அங்கம் 14

கள்ளம் புகுந்தது

இரவு படர்ந்தது
அவரவர் உறவுகள் தேடியும் கூடியும்
ஊரதன் காரியம் நடந்தது.
கந்தக நெடியின் மையப் பகுதிக்குள்
வாழ்வியல்..... இன்னும் தொடர்ந்தது.

அறையினில் முடங்கி வெளிவரா மகளினை
அழைத்து பூரணம் நெருங்கினாள்
அருகினில் அம்மா காலடி கேட்டு
பெண்மகள் கண்களைத் துடைத்தாள்,
பஞ்சணைக்குள் முகம் புதைத்தாள்.

தலையை வருடிய தாயவள் சேயிடம்
நலமா? என்றே கேட்க
கண்மணி அவளும் தலையைப் பிடித்து
வலிக்குதென்று இயம்பினாள்.

நேற்றைய இரவின் தூக்கக் கெடுதியும்,
வெடிகள் வீசிய கந்தக நெடியும்,
நீண்ட நேர பங்கர் இருப்பும்
தலைவலி கொடுக்கும் அறிந்தது தானே!

'தூங்கி எழுந்தால் தெளியும்" என்றே
பூரணம் தேநீர் தந்து தைலமிட்டாள்.

பிரிவின் பிடியில் உறவுகள்
இரவிற்கிதுதான் பிடித்ததா?
ஊடல் கூடல் அறியாவிடினும்
உயிரின் தேடல் வதைத்தது.

கண்கள் இரண்டும் இணைந்து நனைந்து
செம்மை ஏறிச் சிவந்தன.

இமைகள் பொங்கி வழிந்து நலிந்து
விழிகளை மேவிட விழைந்தன.

நாசி நீர்மை கோர்த்து நிறைத்து
இவள் இன்னல் நிலையைச் செப்பியது.

அழகுப் பூமுகம் உலர்ந்து தளர்ந்து
துளிர்ப்பை எங்கோ தொலைத்தது.

கண்ணெடுத்து ஒருகால்- அவன்
திருமுகத்தைக் கண்டால் போதும்
இப் பெண்மனம் இன்னல் விட்டிங்கு ஆறும்.

உரிமையோடு காண உறவென்று இல்லை
நலம் கேட்க என்றால் நண்பனும் அல்ல,
பாழும் மனம் கிடந்து பைத்தியமாய் அலைந்தது.

'நாளை சென்றவரைக் காணாது போயின்
நஞ்சேனும் உண்டென்னை மாய்ப்பேன்"
உள்ளுக்குள் எண்ணங்கள் பொல்லாச் சிறகெடுக்க
இரவு நீண்டது நீண்டது நீண்டேயிருந்தது.
இவளின் எண்ணமும்
ஓங்கி ஓங்கி ஓங்கி வளர்ந்தது.

கங்குல் கரைந்தது.
பனிப்புகை அகலாக் கிழக்கு வெளிப்பு
பற்கள் துலக்கப் பொடியும், துவைத்த உடையும்,
கிணற்றடி உறவும் விடயம் உறுத்த
பூரணம்.....வியந்த கண்களால் மகளை அளந்தாள்.

இழுத்துப் போர்த்தி இதமாய் உறங்கும்
பிடித்த காலைப் பொழுது- அதை
விடுத்து எழுந்து விரையும் குளியல்
வியப்பைத் தானே வழங்கும்.

நேற்றைய பொழுதின் தலைவலி!
நேரத்தோடு தூக்கம்!
புலருமுன் விழித்த நிலைக்கு
புதிய காரணங்கள் கூறின.

காதல் என்றொரு காவியம் நுழைந்திட
கன்னி மனதில் கள்ளம் புகுந்தது.
பூமகள் போன்ற பெண் மனம் இங்கே
பொய்மையை ஏற்று மணந்தது.

சோதனை, வேதனை வென்று
மாசாதனை படைக்கும் மனதிடம் எழுந்தது.
போதனை இன்றியே புதியபாடம்
பூரணமாக இவளை ஆண்டது.

உற்றவனைப் பார்க்க உயிர் தவித்தது.
உறையுள் விட்டுச் செல்வது எப்படி?
கற்ற வித்தையைக் கை கொடுக்கும்
காரணமாகக் காட்ட விழைந்தாள்.

'ஊர்முழுக்க சீரழிந்ததால்
தொண்டர் சேவைக்கு ஆட்கள் வேண்டுமாம்."

ஈன்றவள் தன் குரல் கேட்கின்றாளா?
கூர்ந்து பார்த்தாள் பைந்தமிழ்ப் பாவை.
அன்னை விழியில் ஆயிரம் கேள்விகள்.
போரதன் இயல்பு மாறிடா வேளை.....
மகளை அனுப்ப மனம் ஒப்பவில்லை.

அடிமேல் அடித்தால் அம்மி நகராதா?
பொய் மேற் பொய்யும் கற்பனைக் கதையுமாய்
பள்ளித் தோழியைப் பரிதாபம் ஆக்கினாள்
கள்ளம் புகுந்த அருமைப் புதல்வி.

அன்புதானே அன்னை என்பது
அவள் உயிரைப்படைக்கும் உலகமல்லவா!
மனம் கசிந்தது.
மகளுக்கு செல்ல அனுமதி மிகுந்தது.

'யாருடன் செல்வாய்?" என்றொரு வினா
அன்னை வாயிடை பகர
சொல்லக் காத்திருந்தவள் போல்
'குழலியோடு" என்று குரல் கொடுத்தாள்
அவசரம் நிறைந்த அவ்வெழில்க் குமரி.

அரைகுரையான அம்மாவின் தலையாட்டல்
அவளை வரையரை கடந்த வான்மயிலாய் ஆக்கியது.
அடுத்த கணம் அம்மா மறைந்தாள்
வீதியில் ஈருருளி விசைப்படகு ஆனது.

அங்கம் 15

மறவன் உயிர்ப்பூ

குழலிக்கு ஒரு கணம் குவலயம் சுழன்றது.
திகைப்பு எல்லை கடந்தெங்கோ சென்றது.
தோழியின் துணிவு துவட்டிப் போட்டது.

'உறவில்லா உறவுக்கு உறவுமுறை உண்டா?"
உச்சந்தலையில் கேள்வி நச்சென்று குட்டியது.

துயர் சுமந்த தோழி நிலையுணரும் நிலை இல்லை.
உள்ளதினை உள்ளபடி உணர்ந்திருந்தாள் பூங்குழலி.
இருந்தும்.. 'வா" என்று அழைத்தவளுக்கு
மறுக்கும் வைரநெஞ்சம் இருக்கவில்லை.

சாக்குப் போக்குச் சொல்லி
சகி மனதைத் தேற்றிடலாம் என்ற இவள்
நோக்குப் பலிக்கவில்லை

ஊர் இணைந்த காவற்படை ஊரைக் காக்கும் படை
வீட்டுக் கொருவர் இணைந்த புலிகளின் துணைப்படை

சக்கை அடைப்பதிலிருந்து சண்டைகட்கு உரித்தான
சில்லறைத் தேவைகளை தம்தரப்பால் வழங்கும்
தற்காப்புப் படை இவர்கள்
இவர்களை மீறி எவ்விடயமும் இல்லை
இவர்கள் போராளிகள் எனத் தடயமும் இல்லை.

அத்தகைய ஒருவர்தான் அண்டை வீட்டு அன்பரசு
எத்தகைய விடயமும் அவருள்ள அடக்கம்.
அவரை அண்டி குழலி அறிந்தாள்.
புலிகளின் மருத்துவப்பாசறை இருக்குமிடம் தெரிந்தாள்.
மங்கையர் இருவரும் இளையபுலிவீரன்
நலம் காணப் புறப்பட்டனர்.

ஈருருளி உந்த இடையிடையே தடுமாறி
புலிகள்..... வாகன அணி பார்த்து
மனதிடையே படபடத்து,
அறிவொன்று, செயலொன்றாய்
அந்தரித்து அலமலக்கும் சிநேகியிட்டு...
குழலி சிந்தையிலே நொந்தாள்.

மருத்துவப் பாசறையின் வாசலோரம்
பைங்கிளிகள் வந்த பின்னும்
பேச ஒரு வார்த்தையில்லை

வாசலிலே நின்ற உழு
வினாக்கள் கொண்டு விழி நிறைத்தான்.

விடை அறிந்த பிற்பாடு வீரர்களைப் பார்க்க
அனுமதிகள் கிடையாதென
விதந்து உரைத்த விதத்தில் உயர்ந்தான்.

கட்டளைகள் விஞ்சியதால் கெஞ்சுவதில் பயனில்லை
செய்வதேதும் அறியாது குழலியவள் தயங்க
குமுதவிழிக் குளம் நிரம்ப, உதடு அழுத்தி
வரும் விம்மல் அடக்கி வனக்கிளி நிலைத்தாள்.
-----------------------------------

பாசறைக்குள் ஆட்சி செய்யும் பண்ணையார் போல் ஒருவன்
காயமுற்ற வேங்கையரின் கவலைகளைப் போக்கினான்.
பேசிப் பேசி அவரிடத்தே புன்னகைப் பூ எடுக்க
பெரும்பாடு பட்டான்.

ஓர்மமது நிறைந்ததனால்
வேதனை ஓலங்கள் கேட்கவில்லை.
வாதை மிகுந்திடினும்
வன்மையுற்ற மனங்களுக்கு வலிகள் தெரியவில்லை.

வெற்றிச் சேதியது எட்டித்துப் போனதனால்
தோல்விக் கசையடிகள் தோற்றமிட்டு வலித்தன.

அந்த வலிகளுக்கே.. .
இவன் பேச்சு மருந்திட்டு ஆற்றினான், அமர்த்தினான்.

அந்நேரம், வாசலரன் வேவுபுலி
வெளியே யாருடனோ பேசக் கேட்டவன்
எட்டி ஒரு கால்வைத்து எம்பி மண்மூட்டை மீதேற
மதிலரன் வெளிப்பக்கம் இருமங்கையரைக் கண்டான்.

சந்திக்கச் சந்தர்ப்பம்..
இங்கிப்படி அமையுமென்று சிந்தித்தே பார்க்கவில்லை!

அனுமனைக் கண்ட சீதையென
செல்வி செழித்துத் துளிர்த்தாள்.
குழலி கேட்க விழையுமுன்பே
இனியவன் கதவு திறந்தான்.

வாசலில் நின்ற புலியவன் வியக்க,
வாச முல்லைகள் திகைத்து மலைக்க,
தயக்கமின்றியே தாரகை அழைத்து
தனிவழி காட்டியே நடந்தான்.

உளவலி நிறைய தளபதி சேது
தன்நிலை மயங்கக் கிடந்தான் - அவன்
தலை முதல் கால்வரை சிலகளக் காயங்கள்
கதைகள் சொல்லிக் கசிந்தன.

உறக்கம் பாதி, மயக்கம் பாதி
இடையிடை விழிப்பு இயல்பில் இடறி
மண்டலி ஈர்ப்பில் மறவன் உயிர்ப்பூ!

கண்டதும் நடுங்கி, தோழியில் ஒடுங்கி,- உள்ளம்
கொண்டவன் அருகே சென்றது தாமதம்
உதட்டு விளிம்பில் விம்மல் வெடித்தது.

அங்கம் 16

உறுமல் புலிக்கு அழகு

நாடிப் பகுதியில்
துளைத்த குண்டு - உயிர்
நாடியை நாடி நிலைத்தது.
தேடித் தோண்டில் ஆவி பறக்கும்.
மருத்துவர் மரத்து மறுத்தார்.

குண்டோடு இணைத்து கொண்டொரு பத்து
காயம் ஆற்ற இட்டு,
வலியைக் குறைக்கும் வலிமையைப் பெருக்கும்
பதநீர் உடலில் ஏற்றினார்.

ஊசி முனையில் இறங்கும் திரவம்
உயிரைப் பிடித்து நிறுத்த,
நாசி வழியே மூச்சுக் காற்று
நலிவை வென்று நிலைத்தது.

காயக் களைப்பு கண்களை மேவ
இமைகள் கவிந்த வேளை,
விம்மி வெடித்த சின்ன விசும்பல்
விழிக்கச் சொல்லித் தொழுதது.

கண்கள் காண்பது மெய்யா? - இல்லை
மனக் கண்ணில் ஒளிரும் பொய்யா?

உள்ளத்தை அள்ளி எடுத்தவள், -அவன்
உயிர்ப்பூமாலை தொடுத்தவள்,
எண்ணக் கருவில் நிலைத்தவள்,
கண்களில் கனிவைத் தேக்கினாள்.

உற்றது தாமதம்
சட்டென சேது எழுந்திட, - அவன்
சரீரம் சரிந்து தோற்றது.

களத்தில் காயம் பலருக்கு - அவரைக்
கண்டிடவே என் உளவிருப்பு.- அங்கு
பிரியசகியைப் பிரிய சகி
செப்பிய காரணம் செம்மையுறும்.

இங்கிதம் அறிந்த நண்பர்கள்
இணைந்தே அவ்விடம் விட்டகன்றர்.
அங்கொரு தனிமையின் உற்பத்தி
அந்தக் கணங்களை ஆண்டது.

இவளினை இங்கு காண்பதற்கு - இவன்
இதயம் கனவுகள் கண்டதில்லை
இதுவரை பேசிப் பழகவில்லை
இருப்பினும் எங்ஙனம் இவள் வந்தாள்?

சிந்தனைப் புள்ளிகள் கோலமிட
கேள்விகள் எழுந்து குதித்தன.

மூடிக் கட்டிய முகத்திடையே
வேதனைச் சுருக்கம் ரேகையிட
சின்ன விழிகள் இமைக்காத
செல்விப் பெண்ணவள் துடித்தெழுந்தாள்.

கண்மணி இரண்டும் பரபரக்க - அவன்
கரத்தினைப் பற்றி வலி அணைத்தாள்.

துணிவு பிறந்தது எவ்விதமோ?
துயரே திகைக்க விழி விரித்தான்.
உயிரியல் பாடத்தில் புதுப்பக்கம் - இவன்
இதயத்தின் மத்தியில் எழுதியது.
உள்ளத்தில் களிப்பு கொண்டாலும்
உறுமல் புலிக்கு அழகல்லவா?

சினத்தை முகத்தில் பூசிக் கொண்டான்.
செல்வியை அந்நியம் ஆக்கிக் கொண்டான்.
வெறுப்பை விழிகளில் தேக்கிக் கொண்டான்.
விரும்பாப் பார்வையை வீசி வைத்தான்.

பார்வையை உணர்ந்தவள் பதறி விட்டாள்.
பண்பினை நினைத்தவள் கரத்தை விட்டாள்.
வேங்கையின் விழியால் வெந்து விட்டாள்.
வேதனைச் சுவட்டால் நொந்து விட்டாள்.

அன்பே இல்லா அவன் இயல்பா?
அவனை வரித்தது இவள் பிழையா?
ஆயிரம் ஊசிகள் அகம் ஏற
ஏந்திழை இதயக் காயம் பட்டாள்.

களத்தில் ஏற்பட்ட பின்னடைவு
களப்புலி இவனை மாய்த்திடினும்
உளத்தில் ஏற்பட்ட மென்னடைவு - அவன்
உணர்வை மெலிதாய் மேய்ந்தது.

பார்வையில் அந்நியப்படுத்தியவன்
எண்ணக் கோர்வையில்
உறவைப் பகிர்ந்திருந்தான்.

ஏந்திழைக் கெதுவும் புரியவில்லை - அவள்
எழில் முகம் சூம்பிக் கருகியது.

இருமனம் கூடி நேசித்தால்
இதயத்தில் வலிகள் தோன்றாது - இதில்
ஒரு மனம் மட்டும் யாசித்தால்
துயரம் வாழ்வை வாசிக்கும்.

பேசிப் பார்த்தால் என்ன நிலை?
பேதை நெஞ்சம் ஏங்கியது.
கூசிக் குறுகி உணர்வெல்லாம்
கோழைத்தனமாய் ஒடுங்கியது.

வாயைத் திறக்க முடியாத
வரிப்புலி பதில்தான் பகர்வானா?
தூய மனதின் மையல் இதை
மாயத் தோற்றம் என்பானா?

மூளைக்குள்ளே கூச்சலிட்டு
காலக்கிழவி கடந்து சென்றாள்.

மௌனத் தேவதை கோலோச்ச
மாருதப் புரவி பேசியது.
விதிக்கு இந்த மோனநிலை.....
வாடிக்கையா? வேடிக்கையா?

அங்கம் 17

பேசத் தெரியாத பிள்ளை

ஈன்றவள் அணைப்பும், இட்ட முத்தமும்
ஈந்த விடையாய் ஏற்று நகர்ந்தான் தீரப்புலி
அவன் கால்கள் உந்திட,
ஈருந்திப் புரவி மெல்ல மெல்ல
வேகம் எடுத்தது.

உறுதி நிறைந்த உன்னத தேகம்
தெரு முனையில் குறுகி மறைந்தது.

தாயின் ஈரவிழிகள் உலர்ந்தன.
இதயம் சிலுவை சுமந்தது.

தாவி ஓடி அண்ணன் காலொடு
கறுப்பன் போட்டி இட்டது.
'ஆவி துடிக்கும் அன்னை தனியே'
என்றே உணர்ந்ததும் நின்றது.

தாய் மண்ணைக் காக்க
அண்ணன் போக - அவன்
கண்ணைக் காக்கக் கறுப்பன் வந்தது.

தாயின் காலடி உரசும் சேய் போல்
ஒட்டி அருகே அமர்ந்தது.
மேரியின் வேதனை உணர்ந்து, - அதனில்
வாரித் தன்னை இணைத்தது.

இதனை உற்றவள் தன்நிலை தெளிந்தாள்.
கறுப்பன் தலையை மெல்ல வருடினாள்.

உடனே....
கள்ளம் இல்லா வெள்ளைப் பிள்ளை
உச்சியிலிருந்து உருகி வழிந்தது.
தத்துப் பிள்ளையாய் தாவித் தாவி
தன் அன்பினை வள்ளலாய் சொரிந்தது.

தாயைக் காத்தல் தன்பணியென - அது
தன்னுள் நினைத்தது. - தொடரும்...
காவல் பணியில் நாயகனாகத்
தன்னை நிறைத்தது.

மகவைப் பிரிந்த மாதா துயரம்
மாபெரும் கடலாய் ஆனது.
பிரிவுப் படலம் தொடர்கதை எழுதி
உறவு கொண்டாடிச் சிரித்தது.

தனயன் முகத்தில் தோன்றிய உணர்வு,
கரிய முகத்தின் அரிய சிவப்பு...
கடந்த நாட்களின் கலங்கரை போல
அன்னை அகத்தில் நிலைத்தது.

நினைவுச் சுழிகள் திரும்பத் திரும்ப
ஓரிடத்தில் வலயமிட்டன.

பிள்ளை எண்ணம் பொழுதைக் கரைத்தது
இரவு தொடரும் ஆட்சியில் நிலைத்தது.

வீட்டினுள்ளே படுத்திருந்த
கறுப்பன் எழுந்து கதவை பிராண்ட,
வினயத்தோடு பல்லிகள் கொழிக்க,
வீட்டு முகட்டில் கோட்டான் அலறல்.
மனதிடை ஏதோ மருகி எழுந்தது.

கலவரத்தோடு மேரி எழுந்து கதவின் தாளைத்திறக்க
தோட்டக் கிணற்றின் மூலையோரம்
ஓட்டமெடுத்த வீட்டுக் கறுப்பன்
நாட்டு நாய்கள் ஊளை கேட்டு
கூட்டுச் சேர்ந்து மெட்டுப் போட்டது.

அச்சம் என்பது ஆளரவமின்றி
மெல்ல மெல்ல மனக்கூட்டில் புகுந்தது.

கோட்டான் அலறலும்,
கொடும் பல்லிகள் சொல்லும்,
வீட்டு நாய் ஊளையும், அப சகுனமாகி
சேது அன்னையைச் சஞ்சலப் படுத்தின.

அன்னை மனம் அன்ரனியை நினைத்தது.
சிந்தனை விரிய சிரசு விறைத்தது.
'மகனுக்கு இன்னலா?' மனம் தவித்தது.
இரவி வரும்வரை இரக்கமின்றி இன்னல்
அவளை வாட்டி வதைத்தது.

அதிகாலை,.. சாலை பார்த்து
கலிசூழ சேது அன்னை
கடந்து போகும், ஏகும் போர்புலிகள்
முறுவலித்தனர், முகம் மலர
சுகம் கேட்டனர்.

'ஆண்டவரே உமக்குத் தோத்திரம்.
மகவைக் காக்கும் கர்த்தரே உமக்கு நன்றி'
இதயத்துள்ளே இறையைத் துதித்தாள்.
இருப்பினும்...-
அவள் தாய் தனத்தில் வலியொன்று
தவித்துத் தவித்து தனக்குள் விசித்தது.

என்றுமில்லா அமைதியோடு அன்றைய பகல் கடக்க,
சூரியனும் மேற்கு வானை மெருகூட்டி மறைந்தான்.

'ஞாலத்து வான் தன் கருங்கோலத்தைக் காண்' என்றிட
வெள்ளிகள் நிறைந்தன. விதவிதமாய் நிறத்தன.

கீழே........
தன் மனதைத் தொலைத்துத் தொலைத்து
தென்றல் தவழ்ந்தது.
கோள பூமியின் கொள்ளை அழகெல்லாம்
தழுவி முகர்ந்தது.

ஈன்றவள் உள்ளத்தில் இனம் புரியா உணர்வு
நள்ளிரவு தாண்டி நாழிகைகள் நகர
தூரத்தில் எங்கோ வெடிகளின் ஓசை
'அல்' அதன் அமைதியைக் கிழித்து
துல்லியதாய் கேட்டது.

மணித்துளிகள் நகர்ந்தன.
உலங்கு வானூர்திகள் உறுமி உறுமிக்கடந்தன.
வெள்ளி பூக்கும் விடிகாலை பொழுது
குண்டுவீசு விமானங்கள் கூவிக் கொண்டு பறந்தன.

அன்றைய பகல் தூரத்தில் எங்கோ
அரச படைகளின் ஆங்காரம் மிகுந்தது.

பெற்ற மனமோ பித்தாகியது.
அவளைக் கடக்கும்..
புலிமுகங்கள் மௌனித்துக் கொண்டன.
கலவரம் விழிகளில் ஒளிர்ந்தது.

பிள்ளையர்க்கு சாது பின்னடைவு என்பதே!
அன்னையிடம் தஞ்சமான அன்றைய சங்கதி.

அடுத்த நாட்காலை கொடிதாய் எழுந்தது.
கறுப்பன் சோர்ந்து கவலையாய் இருந்தது.


அன்னை அழைக்க நிமிர்ந்து பின்
நீட்டிய காலில் தலையைச் சாய்த்தது
பேசத் தெரியாத அப் பாசப்பிள்ளை.

என்னவாயிற்று இவனுக்கு? என
அன்னையின் உள்ளத்தில்...
முன்னவன் கவலை முழுதாய் இருக்க,
இன்னதன் நிலையும் இடையினில் சேர்ந்தது.

அண்டை வீட்டு பிலோமினாவும், எதிர் வீட்டு மரியதாசும்
கூட்டுச் சேர்ந்தனர் குசுகுசுத்துப் பேசினர்.
வீட்டுக்கு வந்தர், விடயம் செப்பினர்.

வாயிலும், வயிற்றிலும் அடித்து - அந்த
வயத்தை ஈன்ற வனிதை அழுதாள்.

கட்டிய ஆடையை உதறி உடுத்தி
வெள்ளிக் கம்பிகள் ஓடிய குழலை முடித்து
மருத்துவப்......பாசறை நோக்கி
அப்பாசத்தீ புறப்பட்டாள்.

பின்னால் வந்த கறுப்பனை உறுக்கி,
முற்றத்து மரத்தில் முடிந்து கட்டி,
மரியதாசிடம் கவனப்படுத்தி,
மனித மாதா மகனை நாடினாள்.

கால் போன போக்கில் வீதியில் செல்ல
தாண்டி நின்றது ஒரு தமிழ்புலி வண்டி.
இன்னவளின் நிலையை அறிந்த வேங்கையின்
ஈருருளி அன்னையைச் சுமந்து நகர்ந்தது.

அங்கம் 18

விடைபகரா வித்தகன்

வார்த்தைகள் இன்றி அலைந்த மௌனம்
வலிகளை வளர்த்துப் பெருத்தது. - நீர்
கோர்த்த கண்கள் குளங்களாகி
மெல்லியள் நிலையை உரைத்தது.

இருவருக்குள்ளும் இடைவெளி ஓங்க
இனிமை குமுறி அழுதது.
காதல் என்னும் காவியம் அங்கே
கலங்கிக் குழம்பித் தவித்தது.

அழுகைக் குரலது அவ்விடம் மேவ
அம்மா ஓடி வந்தாள்.
தன் மகவை வருடி உச்சி முகர்ந்து
மனதின் உணர்வைப் பகிர்ந்தாள்.

அவன் காயம் பட்ட காயம் தொட்டு
கண்ணீர் உகுத்துக் கரைந்தாள்.
கண்ட கணத்தில் அன்னையென்று- அப்
பெண்ணை உணர்ந்தாள் செல்வி.

தலையில் இருந்து கால்வரை தடவி
தனயன் தேகம் நோக்கி நிமிர்ந்தவள்
உருகும் சிலையென தவிப்புடன் நின்ற
தாரகை கண்டு துணுக்குற்றாள்.

கண்களின் முன்னே நின்றவள் மெல்லக்
கருத்துக்குள் அடர்ந்து நுழைய
இன்னொரு புறத்தில் தாயவள் மனதில் ஓர்
நுண்ணிழை தன்னால் அவிழ்ந்தது.

தாய் கண்மணியில் கேள்வி கோர்த்து
தன் கண்மணியைப் பார்த்தாள்.

மௌனமாய்க் கண்மூடி, மனதிற்குள் போராடி,- சேது
விடை பகராத வித்தகன் போலானான்.

அவ்விடத்தே..
சொல்லுக்குள் அடங்காத சங்கடம் நெளிந்தது.
செல்விக்குத் தன்நிலை சஞ்சலம் மிகுந்தது.

மணித்துளிகள் மௌனத்திலும்,
விழிகள் பேசத் துணியும் விநோதத்திலும் நகர்ந்தன.

காலதேவன் கணக்கில்
கூட்டல், கழித்தல் பிழைக்குமா?

பேசிப் புரிந்திடப் பொழுதைத் தந்து
சந்தர்ப்பம் கொடுத்துச் சறுகிப் போனவள்
சங்கடம் தீர்க்கவும் வந்து சேர்ந்தாள்.

உள்ள நிலையை உணர்ந்து கொண்டவள்
உதவி செய்வதே நட்புக்கு அழகெனும்
இயல்பு நிலைக்கு இலக்கணம் ஆகினாள்.

'நேரம் ஆகிறது போகலாமா?'
சகியை நோக்கி சகியவள் வினவ
சடுதியில் ஏற்று ' தலையைச்
சட்டென ஆட்டினாள் செந்தமிழ் சேயிழை.

தலைதான் ஆடியது
தறிக் கெட்ட மனமோ.. சேதுவை நாடியது.

கண்கள் மூடிய காளை,
'நேரம் ஆகிறது'
எனும் சொல்வலி கேட்டு
அகத்தினில் துடித்துப் புறத்தினில் விழித்தான்.

அந்நேரம் .
சேயிழை அவளும் வாயிலாக் மடந்தையாய்
'ஓம்' அசைவில் அவசரம் காட்ட
இன்னல் இடியாய் இவனுள் விழுந்தது.

வஞ்சியர் இருவரும் வந்த வழி ஏகினர்.
கொஞ்சுதமிழ் கோதையின்
கெஞ்சும் விழிகளில் விஞ்சி நின்றது
ஒரே ஒரு வினா!
மிஞ்சி மேவப் பதிலது இருந்தும் - இவன்
பகர மறுத்தான்.
விரும்பாதவன்போல் விறைப்பாய் இருந்தான்.

சின்னவன் நடப்பை
பார்த்த தாயின் இதழ்களில் மென்னகை!

எத்தனை நாடகம் பார்த்தவள் இத்தாய்!
தந்தையை விஞ்சியா... தனயன் இருப்பான்?

பெற்றவள் உணர்ந்தாள் - பெரும்
கனம் கொண்டாள்.
இன்னொரு பக்கம் இன்னலுள் மாண்டாள்.

ஒவ்வாத உறவுகள் பிரிவிலே விலகும்.
ஒருமித்த உறவுகள் பிரிவிலே இறுகும்
புரியாத அன்னையா இவள்?

புத்திரச் செல்வனைப் புரிந்தவள் அணைத்தாள்.
தாய்மையின் அன்பிலே தனயனும் கரைந்தான்.

அங்கம் 19

ஊர்த்தாய் கூற்று

நெஞ்சில் இருப்பவன் நெருப்பெனச் சுட்டால்
கஞ்சமலர் கருகியா போகும்?

கொஞ்சிக் குலவும் காமம் தவிர்த்து
விஞ்சி விறைக்கும் அவனாளுமை பிடித்தது.
கெஞ்சுதல் என்பதை அறியா அவனின்
நெஞ்சு நிறைத்த கர்வம் பிடித்தது.
சிந்தையில் ஒளிரும் காதலை மறைக்கும் - அச்
சிந்தனைச் சிற்பியைச் செல்விக்குப் பிடித்தது.

கடந்த நாட்கள்
காவியக் கோதையின் கண்களை நனைத்திடினும்,
படர்ந்த மனதில் இன்னும் அவனே
பலமாய் பதியமிட்டான்.

நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் வளர்ந்தன. - பின்
மாதம் ஆகி ஆண்டிலும்பாதி அவதியாய் தாண்டியது.

ஏக்கம் நிறைந்த எண்ணக் குமரியின்
கனவுகள் எல்லை கடந்தன.
அவள்
கண்ணுக்கினியவன் - இக்காவிய நாயகன்
காயம் பட்ட காயம்தேறி
மீண்டும் காவலரன் நிறைத்தான்.

காணும் தருணம்
(அவன்) இறுகியும், (இவள்) உருகியும்
இளநெஞ்சங்கள் துடித்தன.

அதே சமயம்.......
அந்நியப்படை முகாம்களுக்குள்
ஆயுதக் கிடங்குகள் நிறைந்தன.
அடுத்த தொடராய் மாபெரும் அழிப்பிற்கு
ஆயத்தமாகி வளர்ந்தன.

அமைதியைக் கிழி;க்கும் உலங்கு வானூர்திகள்,
ஆகாயம் தமதென்று ஆர்ப்பரிக்கும் அவ்ரோக்கள்,
நீரில், நிலத்தில், நீலவானில்
சாகசம் புரியும் இயந்திரக் கழுகுகள்,
குத்துக் கரணத்தில் குண்டுகள் ஈனும்
சூப்பர் சொனிக்குகள்,
வேவு காவும் வீரியக் குருவிகள் என
பறந்து பறந்து யாழ் குடாநாட்டைக்
குறிப்புகள் எடுத்தன.

பேரினவாதப் புல்லர்களோடு
அமெரிக்காவின் செல்லர்கள் பறந்தனர்,
பயிற்சி பல வழங்கினர்.
கெரில்லாப் போரதை அடக்கி ஒடுக்க
வேண்டிய அனைத்தும் வல்லரசுகள்
மாபெரும் பாரியாய் வாரி வழங்கின.

பாக்கு நீரினைப் பரப்பு வெளிகளில்
நீண்ட பெருத்த பீரங்கிக் கப்பல்கள்,
சாத்தான் போல சாகரம் மீதில்
வீரிய, சூரிய சண்டியக் கப்பல்கள்,
அவற்றைச் சுற்றிச்சுற்றி விசைந்து திரியும்
வீரியம் மிகுந்த ஆயுதப் படகுகள்,
இவை வலிமை குறைந்த மக்களை அழிக்க
வாரணம் வந்த வல்லசுரர்கள்
இவைகள் நடாத்தும் ஊழிக் கூத்தை
ஆயிரம் ஆயிரம் பாயிரம் எழுதலாம்.

புலிகளின் கையிருந்த
யாழ் குடாவை குதறிப் பிய்க்க
காடையர் கூட்டம் ஆயிரக்கணக்கில்
ஆழிக்கப்பல்களில் காத்துக் கிடந்தனர்.

கரைகளில்
ஆற்றுவாய், ஆலடி, மதவடி, பாலம்,
முனைகடல், மணல்வெளியென எங்கெங்கு எதிரிக்கு
இறங்குதளம், ஒதுங்குமுகம் இடரின்றி இருக்கிறதோ
அங்கெல்லாம் புலியணியின் துணைப்படைகள்
எக்கணமும் எதுவுமென்று ஏற்பும், எதிர்பார்ப்புமாக
சின்னச் சின்னக் கைக்குண்டுகளோடு காத்திருந்தர்.
போரிட்டு செயிக்க அல்ல, இவ்விழிப்புக் குழு
ஊர்த் தூக்கம் கலைக்க.

வீதிகள், பொதுவிடங்கள், நாற்சந்தி நிலைகள்
நன்நூல் அகங்களருகென
பொதுமக்கள் காப்பிற்கு பதுங்கும் குழிகள்
புலிகளின் பார்வையில் புதிதாய் முளைத்தன.
அதற்காக....
கர்ணனை விஞ்சிய கற்பகத் தருக்கள்
உயிரைக் கொடுத்து தங்களை ஈந்தன.

போரை எதிர்நோக்கும் கூரிய வாழ்விலும்
விழாக்களும், கடவுளர் உலாக்களும் நிகழ்ந்தன.
பாரம்பரிய விழுமியங்களோடு பைந்தமிழ் கலைகளும்
வளர்ந்தன.

அன்றும்...
மெய்யாய் நிறைந்திருக்கும் முத்துமாரியம்மனுக்கு
ஊர் கூடித் தேரிழுக்கும் ஒய்யாரத் திருவிழா
காலத்திற்கு ஒவ்வாத கார்முகிலி வான் நிறைக்க
போரிற்குப் புறப்பட்டாள் முத்துமாரியம்மை.
தேர்ச் சில்லு நகரவில்லை
ஊர்கூடி இழுத்தது.
சாது சாய்ந்து தேர் நிலத்தில் பதிந்தது.

காண்டீபனைக் காக்க கண்ணன் பதித்த தேர்போல்
அங்கொரு அறிகுறி ஊருக்குத் தெரிந்தது.

ஊர் கலங்கித் தவித்தது. கேடு வரப் போகிறதோ?
பதற்றமுற்ற இச்சேதி வாய்ப் பந்தயத்தில் குதித்தது.
இதனை உற்றவரும், கேட்டவரும்
ஊர்த் தாயின் கூற்றாக ஏற்றுக் கலியடைந்தர்.
ஆதலால் ஊருக்குள் எப்போதும் இல்லாத
அச்சம் ஒன்று நுழைந்தது. - அது
எல்லோர் உள்ளத்திலும் உச்சம் பெற்று நிலைத்தது.

அங்கம் 20

அந்தரவான் கந்தக முட்டை


சிங்கள இனவாதம் பெரும் சினம் கொண்ட ஒருபாகம்
யாழ் குடாவின் வடகரையோரம்.

மனவலிமை மிகுபுலியர் அணித் தலைவனோடு
செயலாற்று வீரர் பலர் செகம் கண்டதும்,
முப்படைகள் கக்கு குண்டில் முகம் கொடுக்கையில்
உப்புடைக் காற்றுரசி உரம் பெற்றதும்,
வடமராட்சிக் கரைகளுக்கே உரித்தானது - இது
வரலாற்றுச் சுவட்டுள்ளும் குறிப்பானது.

கடலோடு விளையாடிக் காயத்தில் உரமேறி
மிடுக்காக வாழும் இம்மக்கள்
விடுதலை வேங்கையரின் அத்திவாரக் கற்கள்.
ஆதலால்;
வடமராட்சி என்பது ஆளும் வர்க்கம்
வெறுக்கும் வைரியாகி வளர்ந்தது.

இவ்வுரம் ஊறும் ஊர்கள் அழிக்க, உலகெலாம் கையேந்தி
ஆளும் வர்க்கம் அருந்திட்டங்கள் வகுத்தது.

ஓரிரு வாரங்களில்..
இராணுவ ஒத்திகைகள் முன்னேறு முனைப்புகள்
கரையோரம் எங்கெங்கும் அரங்கேறின.

பயங்கர வாதம் அழிப்பதாய் பகல் வேசம் போட்டு
பாரெங்கும் அரசு பல்லிளித்து நடித்தது.

ஓர்மம் மிக்க ஒப்பில்லா மக்களை
ஒழித்துக் கட்ட அரச பயங்கரத்தின்
ஆயுதமுனைகள் கூர்மை மிகுந்தன.

இராட்சத அவ்ரோக்களில் பெற்றோல் பீப்பாக்கள்
அத்தோடு அமிலங்கள் கலந்த அழுக்குத் திராவகம்.
குறியின்றி ஏகும் கனரகக் குண்டுகள்,
உறுமி உறுமி உருக்குப் பறவைகள் எறியும்
கந்தகக் கணைகளும் தத்தம் பலம் காட்ட,
எங்கே எதுவென்று குறிக்க முடியாது
நாற்புறமும் கந்தகப் புகையோடு
கட்டிடப் புழுதியும் எழுந்து விரிந்தது.

தரைப்படை , கடற்படை, மேவிய வான்படை
மூர்க்கர் ஆணைக்குள் முழுமூச்சானது.

போரியல் என்பது தமிழர் வாழ்வியல் பாடம்.
பின் வாங்கல் என்பது
அவதந்திரத்தை வெல்லும் போரின் உபாயம்.

மக்களை மனதிடை சுமந்த மறவர்
அழிவகள் தவிர்க்க விழைந்தனர்.
தமிழ் உயிர்களை நினைத்து எதிரியைப் பொருதும்
உலைக்கள நிலையைத் துறந்தனர்.
பல் உயிர்களைக் காக்கும் உன்னத பணிக்கு
தங்களை மாற்றிக் கொண்டனர்.

எதிர்ப்புகள் இன்றி காவலரன் கடந்து
இராணுவம் ஊருக்குள் நுழைய
இராட்சதப் பறவைகள் அந்தர வானில்
கந்தக முட்டைகள் இட்டன.
அங்குல நகர்விற்கும் ஆயிரம் எறிகணைகள்
வாரணமிருந்து ஏகின.

மனவலு இழந்த மோடையக் கிலியரால்
பல்குழல் சுழல்கள் சிவந்தன.
அதை உறுதிப் படுத்திச் செல்லக் கெலிகள்
உயரிய கலிபரை முடுக்கின.

இதன்பால் எழுந்த கந்தகப் புயலொடும்,
இரும்புத் துகளொடும்
அந்தரித்துத் தமிழினம் அவதியுற்றது.

குண்டுகள் வீழ்ந்து குதறிப் பிய்த்தது
குவலயப் பரப்பை மட்டுமா?
அன்னை வயிற்றுச் சின்ன உயிரிருந்து
அந்திமகால சருகுகள் வரைக்கும்
தேடித்தின்று செங்களப் பேயானது.
பதுங்கு குழிகள்
மிஞ்சிய மக்களைக் காத்தன.

அதே நேரம்
தென்மேற்குத் திசையிருந்து உள்ளிட்ட ஊனப்படை
அங்குலம் அங்குலமாய் ஊருக்குள் நுழைந்தனர்;.

ஊருக்குள் நிலைத்திருந்த இன்னொரு பிரிவினர்
ஊரின் மத்திக்குள் தம்பலத்தைப் பரப்பினர்.

மக்கள்
அங்கங்கள் தெறித்தும், குடல்கள் சிதைந்தும்,
மண்டைகள் சிதறியும்,
மாகோரச் சாக்களம் அம்மண்ணிலே நிகழ்ந்தது.

எதிர்ப்பில்லா நகர்வுக்கே இந்நிலை என்றால்?.......

எங்கிருந்து எமன் வரவு?
எத்திசையால் அவன் நகர்வு?
செங்கடல்கள் கொப்பழிக்க செந்தமிழர் இடம் பெயர்ந்தர்.

தேக்கிய ஆவனமும், தூக்கிய தோள்பையும்
நோக்கிய திசையறியாது அகதியாக நகர்ந்தனர்.

தீங்கிழைக்க என்றே பிறந்த ஆங்கார வல்லூறுகள்
ஆகாயத்திலிருந்து எரிதழல்கள் உமிழ, உமிழ
மனையிழந்த மக்களெல்லாம் கோ உறையும் இல்லிலும்,
நாமகள் அகத்திலும் கூடிக் கூடி முகாமிட்டர்.

பூங்குழலி குடும்பமும், செல்வியின் சுற்றமும்
அண்டை, அயலென சூழ்ந்த உறவுகளும்
மிரட்சியோடு, உயிரைக் கையில் பிடித்தபடி
உமைபாகன் காலடியில் உறைத்துப் போயிருந்தர்.

அங்கம் 21

இருதலைக் கொள்ளி


எழில் மிகு கரைமகள் கலிகளைச் சுமந்தாள்.
அங்கு இங்கென உடல் நலமிழந்தாள்.
பொழில்கள் பொசுங்கின. அலைகள் அழுதன.
கந்தகம் சுமந்து காற்று நொந்தது.
பட்சிகள் சிதறின, வீட்டுநாய்களெல்லாம்
வேட்டோசை கேட்டு வீதிவழி ஓடின.

ஆரியத்தால் உட்புகுந்த கூரிய இழிவுகள்
குலை தெறிக்க ஓடின. சாதியம் மறைந்தது.
உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதங்கள் ஒழிந்தது.
தமிழர் மட்டும் தனித்து நின்றனர்.
மதங்கள் ஆண்ட மனங்கள் அழிந்தன.
மனிதம் பூண்ட சிந்தைகள் நிறைந்தன.

முன்னே வீழும் எறிகணைகள்
பின்னே விரட்டும் வேட்டொலிகள்
இதற்குள்
காயம் பட்டும், கதறித் துடித்தும்
உயிரைக் காக்க மக்கள் விரைந்தனர்
கோயில்கள், பள்ளிகள் முகாம்களாகி
அகதிகள் கதைக்கு கருக்களம் கொடுத்தன.

இராணுவ அணிகள் தரைவழி நகர்ந்தன.
அகப்பட்ட உயிர்களை தத்தம் கவசமாய் ஆக்கின.

உலைக்கள வீரர்கள் உண்மையை அறிந்ததால்
தங்களை மறைத்தர்.
எதிர்ப்பின்றி நகர்ந்த எதிரிப் படையதால்
எல்லா இடத்திலும் இழவுகள் நிறைந்தன.

காவிய நாயகியும் அவள் கவினுறு தோழியும்
மூலையில் ஒடுங்கிய முகாமினை வளைத்து
பாரிய இராணுவம் ஆளணி நிறைத்தது.

எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாமென - தமிழ்
சிந்தைகள் எல்லாம் கந்தையாகிக் கசங்கின.

ஆலய அருகே
இராணுவர் கண்டதும் சிறுவர்கள் கதறினர்
அன்னையைத் , தந்தையை இறுக்கிக் கட்டி
பெருங்குரல் எடுத்து வீரிட்டு அலறினர்.

அந்நேரம்
இன்னலை விதைக்கும் இனவாதக் காடையர்
அகதிகள் அனைவரையும்
ஆலயம் விட்டு வெளிவரப் பணித்தர்.

தமிழர் கோழையர் அல்ல
எனினும்
மார்தட்டி நேர் நடக்கும் மல்யுத்தமா இது?
கூர் விழி அசைக்குமுன் உருக்குக் குண்டுகள்
உடலெங்கும் குதறும் இயந்திர களமல்லவா!
உற்றவர் வருவரா? பெற்றவர் வருவரா?
தத்தம் பிள்ளையரை தம் கையால் கொடுப்பரா?
கோயிலின் உட்புறம் உறுதியாய் உறைந்திருந்தர்.

மங்கல நாதம் முழங்கு திருக்கோயில்
மயான அமைதியை மண்டியிட்டு ஏற்றது.

சிங்கள இராணுவர் சினத்திற்கு உள்ளாகினர்.
சுடுகலன் விசையழுத்திக் கர்வம் காட்டி நின்றர்.

மக்கள் மசிய மறுத்தர். மகேசனடி தொக்கினர்
பொறுமை மீறிய
காடைக் கும்பல் கடவுளை மிதித்தது.
ஆண்டவன் சந்நிதியை அழுக்குப் படுத்தியது.

ஆயுத முனையில் ஆண்களை இழுத்து
வீதியில் உதைத்தது.
கணவனும், பிள்ளையும் ஆயுத முனையில்
தாய்மையும், பெண்மையும் தவித்தன.
தலையில் அடித்து அழுதன.

வீரம் இல்லா வேற்றுவர் படையணி
யுவர்களை எல்லாம்
மாபெரும் கயிற்றில் பிணைத்து
தங்களைக் காக்கும்
மனித... கேடயங்கள் ஆக்கின.

பிறிதொரு காடையர் ஆலய உட்புறம்
பெண்களைச் சீண்டி இரசித்தனர். -அதில்
உள்ளத்தை அள்ளிய
கொள்ளை எழில்களை கைதென்ற பெயரால்
வதைத்தனர்.

ஆண்பிள்ளை, பெண்பிள்ளை அல்லாடி அல்லாடி
தாய் மனங்கள் கெஞ்சின, கொதித்தன, தவித்தன.

பெற்றவர் உற்றவர் பெரிதாய் குரலெழுப்ப
எண்ணிரு கன்னியர் காடையர் கரங்களில்
கைதாகிக் கலங்கினர்.
அதில்
காவியக் கோதையும் கலங்கரைத் தோழியும்
கவலை மிகுந்து நலிந்து சோர்ந்தனர்.
கைதுக்கு மறுத்துக் கதறிடும் கோதையரை
கொடும் கரங்களால் அறைந்து
காடையர் மூடிய ட்ரக்கினுள்
திக்கு முக்காடித் தூக்கிப் போட்டர்.

யுவர்களைக் கிழக்கு முகம் நோக்கியும்,
யுவதியரை மேற்கே நோக்கியும் இழுத்து
எதிரெதிர் புறமாய் இராணுவம் நகர்ந்தது.

கணவனின் கைதா? பெண்மகள் கதறலா?
பூரணத்தாய் புலம்பித் தவித்தாள்
குழலியின் அன்னையும் கூடவே அரற்றினாள்

எவரிடம் அறிவது? எங்குதான் செல்வது?
யாரை மீட்பது? யாரை விடுவது?
இருதலைக் கொள்ளியாய் அங்கிருந்து அழுதவளை
ஆதரவாக தொட்டது ஒருகரம்!

அங்கம் 22

கலைமான்

திருட்டும், கொலையும், பலாத்காரமும்
பொருட்டே இன்றிப் புரிந்த ...
கணக்கில் அடங்காக் காடையர் எல்லாம்
தமிழரை வதைக்கும் படைகளில் நிறைந்தர்.
பெண்களை இழுத்து உரசிப் பார்ப்பதும்,
கன்னி மலர்களைக் கசக்கி முகர்வதும்
காமுகர் வாழ்வில் களியாட்டம் தான்.

தட்டி கேட்க எவருமே இல்லை -அரசு
ஊட்டி வளர்த்து உப்பரிகை போட்டது.
மதுவோடு மாதாய் காடையர் மகிழ - தமிழ்
கன்னியர் வாழ்வு களங்களுக்கு ஏகியது.

எண்ணிரு பெண்களும் அரண்டு மருண்டனர்.
பீதியில் விழிகள் பிதுங்கி வழிந்தனர்.
காடைகளுக்குள் கலங்கித் தவித்தர்.
ஒருவரை ஒருவர் இறுகப் பிடித்து
நூலக மூலையில் நடுங்கிக் கிடந்தனர்.

செல்வி, குழலி இருவரை விட்டும்
துடிப்பும், துணிவும் தூர ஓடின.

வெறி பிடித்த ஓநாய்கள் விருந்துக்கு விரைந்தன.
காயமெங்கும் காமமுற்று கண்களால் ஒளிர்ந்தன.
தறுதலைத் தலைவனாய் நின்றவன் கண்கள்
செல்வியின் மேனியை மேய்ந்தது. - கண்டு
அவள் உள்ளம் அச்சத்தால் உறைந்தது.
குழலியை இறுக்கிப் பிடித்துக் குலமகள்
அதில் தன்நிலை நிமிர்த்தித் தேறினாள்.

தலைமை வெறியனின் 'கலைமான்" இவளென
காடையர் குறிப்பாய் உணர்ந்ததும்
எண்ணிரு கன்னியர் நாடியே - அவளைத்
தனியே இழுத்துப் போட்டர்.

ஓவெனக் கோதையர் கதறிடக் கதறிட
தாவித் தாவியே அறைந்தனர், அடக்கினர்.

தனியே பிரிந்த சேயிழை நோக்கி
'கனியே!" என்று காமுகன் நெருங்கினான் - அவள்
விலகி விலகி நூலகம் எங்கும்
நுழைந்து நுழைந்து ஓடினாள்.
வேட்டைக்கு வந்தவன்
ஒருவனா? இருவரா?
மாட்டிக் கொண்டது புள்ளிமான்.

பார்த்து நின்ற மற்றைய மங்கையர் பீதியால் அலறினர்.
பெருங்குரல் எடுத்துக் கூக்குரலிட்டனர்.

கயவர் பிடியில் செந்தமிழ் செல்வி
கடித்து சுவைக்க காமுகன் நெருங்கினான்.

சேதுவின் காதலி சீறி உலுப்பினாள்
கனலிட்ட விழியுடன் காறி உமிழ்ந்தாள்.

காறி உமிழ்ந்தது கயவனைச் சீண்டிட
காவியச் செல்வியின் கன்னங்கள் பழுத்தன.

அடியே அறியா அவ்விள நங்கையின்
அவயங்கள் புண்பட்டன.
இடிபோல் விழுந்த அரக்கன் பலத்தால்
பெண்மை அதிர்ந்தது.

இகத்தில் இதுநாள் அறியா உணர்வு
அவளுள் மிகுந்தது.
முகத்தில் அறைந்த பேயைப் பார்த்து
மலங்க விழித்தது - அவளுடல்
மயங்கிச் சரிந்தது.

அதே வேளை
நூலக அண்மையில் வேட்டுகள் ஒலிக்க
வெருண்ட காடையர் வெளியே விழுந்து
உருண்டு உயிர் காத்தர்.

மயங்கிய பெண்மையை முகரத் துடித்தவன்
உயிரது அலற உடன் விட்டகன்றான்.

காமக் கூத்துக்கு நூலகம் பிரிந்த
படையினர் ஈர்பத்தே!
ஆதலால்
தனியே இருப்பது தம்முயிர் போக்கும்
எனும் நிலை உணர்ந்திட
எழில் மங்கையர் விடுத்து
அங்கிருந்து அகன்று - தம்
படையணி நாடிச் சென்றர்.

மருண்ட மங்கையர் விரைந்து எழுந்தர்.
நங்கையர் மானம் நலமே காக்க
இவ்விடம் விட்டு நகர்தல் நன்றென
சுந்தரியர் தம் சிந்தனை செப்பினர்.

அங்கம் 23

வேங்கையன் பூங்கொடி


சிறிது நேரம் பெரிதாய் கழிய,
வாசிகசாலை வாசற்புறத்திலே
ஓசையில்லா அசைவுகள் தெரிந்தன.

வெளியே செல்ல விரைந்த மங்கையர்
விழிகளில் வியப்பு விரிந்தது.
அவர் மனதிடை மகிழ்ச்சி மலர்ந்தது.
காத்திட வந்த அக்காவலர் கூட்டம்
களப் புலி அணியெனத் தெரிந்ததும்
பேதமையின்றி அவ்வயங்களை நோக்கி
வாமையர் துள்ளி ஓடினர்.
வேட்டுகள் ஒலிக்கும், வீரர்கள் வழிக்கும்
பூட்டுகள் போட்டுப் பார்த்தால்
புரியாத கதையும் புரியும்.

மங்கையர் அனைவரும் மகிழ்ச்சியில்;
துளிர்க்கக் குழலி மட்டும் குமைந்தாள்.
மென்மகள் செல்வியின் புன்னகை உதட்டிலும்,
பொன்னிறக் கழுத்திலும் செவ்வரி கண்டு விசித்தாள்.

அக்கணம்
நோட்டமிட்டிட நூலகம் நுழைந்தான் ஓர் காளை - அங்கு
பாட்டம் கிடந்த பசுங்கிளி பார்த்து -அவனது
நுண்ணிய இழைகளும் அதிர்ந்தன.

அந்த மயங்கிய மலர்க்கொடியின் சுருங்கிய கோலம்
இம்மறவன் உயிரை கிழிக்க
அனலிடை வீழ்ந்ததாய்த் துடித்தான்.
காடையர் கையில் கன்னி மலரா?
கண்களில் கோபம் கொழித்தது.

அவள் கன்னத்தில் பதிந்த கைத்தடங்கள் - இவன்
எண்ணத்தில் வீழ்ந்து வதைத்தன.
செவ்விள மேனியின் நகமுனைக் கீறல்கள்
பெருஞ்சீற்றத்தைப் புலிக்குள் வார்த்தது.
அந்த மெல்லியள் மயக்கமும், மனதிடை உருக்கமும்
மறமன்னவன் மனதை அசைத்தது.

தோழரை அழைத்துத் தண்ணீர் கேட்ட
தளபதி சேதுவை நோக்கி
கொள்கலன் ஒன்றைக் கொடுக்க வந்த
இனியவன் இதயம் பதைத்தான்.
முகத்தில் செவ்வரி ஓடிய
சின்னவள் பார்த்து
சிந்தை நொந்து கசிந்தான்.

மயங்கிய நிலவின் அருகே மறவன்
தயங்கித் தயங்கி வந்தே
கொள்கலன் கவிழ்த்து, குவளை நீரை
அவ்வெழில் நிலா முகத்தில் தெளித்தான்.

நீரது பட்டுத் தெளிந்த குலமகள்
வேல்விழி திறக்கா வாமையாய் நலிந்தாள்.
ஆவி துடித்திட, அழுகை உள்ளிட -அவள்
மூடிய இமைக்குள் கயல்கள் நீந்தின.
ஓரவிழிகளில் ஈர அருவிகள்
இருபுறமாய் தம்மைக் கசித்தன.

செல்வியை அழைத்துத் தேற்ற நினைத்தாள்
சுந்தரப் பூங்குழலி.
பாங்கியைத் தேடிப் பயத்தில் நலிந்தாள்
இக்காவியப் பொன்னலரி.
வீணரை நினைத்துப் பதைத்தாள்
அவள் விழிகளைத் திறக்கப் பயந்தாள்.

கோர நினைவினில் நடுங்கும்
கொள்ளை எழில்மகளிவளின்
மெல்லிய கைகளைப் பற்றி
இந்த வீரத்திருமகன் சிரித்தான்.

ஆண் கரம் பட்டதும் அணங்கவள் கனன்றாள்.
ஆவேசத்தில் ஆர்த்து விழித்தாள்.
கூரியவிழியில் வீரியம் வெளிக்க
பாரைப் பிளக்கும் பூகம்பம் ஆனாள்.

சுற்றிலும் நின்ற விடுதலைத் தோழர்கள்
விழிகளினாலே வியந்து நகைத்தர்.
உற்ற மறுகணம் ஓர்மம் ஒடுங்கிட,
வேங்கையன் பூங்கொடி வெட்கத்தில் சிவந்தாள்.
காண்பது கனவா? சுந்தர நனவா?

கரமதைப் பற்றிய காளையைப் பார்த்தாள்.
கடமையால் அவன் முகம் இறுகவுமில்லை
நாணத்தால் இவள் தலை சாயவுமில்லை.

ஒருவர் விழியில் ஒருவரைப் பார்த்து
இருமனம் கூடி ஒரு கணம் களித்து
உள்ளங்கள் அங்கே உரையாடின.

பார்த்த தோழி பரவசத்தோடு
பார்வையை நகர்த்தி சங்கடம் கொண்டாள்.

'உறுதியும், அறிவும் வாராத வரைக்கும்
உன்நிலை செல்லரிக்கும்"

உழு உரைத்த உலைக்கள மொழியில்
உரம் மிகப்பெற்றாள் அவன் உள்ளக்காவேரி.
பெண்களை மீட்கும் உன்னத பணியது
வெற்றியைத் தந்திடவே இனி அவ்விடம் நிற்பது
ஆபத்தை தருமென இனியவன் செப்பி நின்றான்.
காத்த நங்கைகள் எண்ணிரு மங்கையரை
கண்ணாய் நகர்த்திக் காப்பிடம் சேர்த்தபின்னர்
சேது தோளில் துவக்குடன், தோழர் அணியுடன்
செல்வியைப் பிரிந்து சென்றான்.

எழில்மகள் விழிகளில் ஈரருவிகள் அரும்பின.
வலிகளைச் சுமந்தும் வதனங்கள் மலர்ந்தன.
மண்மீட்பு நோக்கிய பயணங்கள் தொடர்ந்தன.
ஈழமண் மீதிலே இக்காவியகதையின் அங்கங்கள் வளர்ந்தன.

பாகம் 1
முற்றும்.