சூரியனுக்கு அழைப்பு விடுத்து
சேவல்கள் கூவும்.
காலை மலர்ந்தது என்று
காகங்கள் கரையும்.
மண்டலியை விழிக்கச் சொல்லி
மயில்கள் அகவும்.
இத்தனையும் கேட்டபடி
மந்தமாருதம் உலவும்.
மெல்லிய புகையாய் பனியின் மூட்டம்.
புல்லினின் மீதே அதன் தனி நாட்டம்.
மெல்ல வளைந்தே நிலத்தினை நோக்கும் - புல்
நுனியினில் தொக்கிடும் பனிநீர்த் தேக்கம்.
பொன்னலரி மொட்டுகள்
மென்மையாக முடிச்சவிழ்க்கும்.
போதை கொள்ளும் வண்டு வரச்
செவ்விரத்தம் பூச்சிரிக்கும்.
கண் குளிர வெண்மை தரும்
கல்யாணி நிதம் பூக்க - தன்
கணுக்குகள் எங்கெங்கும்
கலகலப்பாய் முகை கட்டும்.
ரோசா மொட்டுகள் இதழ் விரிக்க,
கண்டு ரோசங் கொண்ட
நந்தியாவட்டைகளின் நகை வெடிக்கும்.
கஞ்ச மொட்டுகள் கட்டவிழ்க்கப் பார்த்து
தாழை முகைகள் தமைத் திறக்கும்.
கமுகுகள் உதிர்த்த ஆடையின் இடத்தில்
புதிதாய் பிறந்த பாளைகள் மிளிரும்.
பாரம் தாக்கிய கூந்தலில் விரிந்த
தென்னம் பூக்களை அணில்கள் மேயும்.
மாவில், பலாவில் குயில்கள் கூடி
கூவிக் கூவித் தம் துணை அழைக்கும்.

பூத்த மரத்தில் சிட்டுக் குருவிகள்
தாவித் தாவித் தேனினை உறிஞ்சும்.
பட்ட மரத்துப் பொந்தில் இருந்து - எழில்
பச்சைக் கிளிகள் கொஞ்சிக் குலவும்.
எட்ட இடத்தில் ஆழிச் செவிலி
ஏக்கக் கரையில் மோதி நுரைவாள்.

காலைப் பொழுது காசினி நோக்கப்
பொழில்களைத் தேடிப் பொன்னெழில் சிந்திக்
கீழைத் திசையில் கதிரினை விரித்துக்
காதல் கதிரவன் கண் திறந்தான்.
சோம்பல் முறித்துச் சுந்தரப் பைங்கிளி
சோபை நெளிப்புடன் வெளி வந்தாள்.
ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ
அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்.
கற்றைக் குழலது காற்றிடை நெளிய
காவியப் பூங்கொடி கலகலக்க - அவள்
இற்றைத் தோழர்கள் இறக்கைகள் சிலுப்பி
இவளின் வரவை நாடின.
விடியலின் முகப்பில் வீரியம் பிறக்க
கூவலும், குதிப்பும் கூட்டுப் பரபரப்பும்
உலோக வலையை உலுக்கிப் பார்க்கும்
செந்நிறம் ஏறிய செல்ல அலகுகளும்
குறுகுறுவென சிறு குண்டுமணிகளாய்
பெருநகை காட்டும் பண்ணிசைக் கூட்டமாய்
கூட்டைப் பிரிக்கும் பேராரவாரம்.
உவகை பொங்க உள்ளகம் சிரித்தவள்
உலோக வலையைத் திறந்திட
மகிழ்முகம் ஏந்திய மண்நிறப் பஞ்சுகள்
செட்டைகள் விரித்துச் சிலிர்த்தன.
அவை
கூட்டுத்தாவல், குழுமச்சூழ்வென
கொக்கரிப்புக்களை நிறைத்தபடி
ஊட்டம் சேர்க்கும் உணவிற்காக
அவளைச் சுற்றிச் சூழ்ந்தன.

அவள்... .
இக்காவியத்தின் அவல்
கொறித்துப் பார்க்கவும், கொள்கை ஏற்றவும்,
இரசித்து நோக்கவும், இராச்சியம் காக்கவும்
மேதினி எழுந்த மேதை!
அவள் .
எழில் கொஞ்சும் குஞ்சுகளை - தன்
மொழி கொண்டு கொஞ்சுவாள்.
நல்பொழில் நோக்கில்
புலன் மயங்கித் தன்
மொழி மறந்து போவாள்.
செழிப்பான அவள் நாமம்
“செல்வி” எனச் செப்பிடுவோம்.
சலிக்காமல் அவள் கதைக்கு
சிந்தைகளைத் திறந்து வைப்போம்.
பருவகால இடப்பெயர்வால்
பட்டாம் பூச்சிப்படைகள்
பாவையிவளின் மனதை ஈர்த்து
பரபரத்துப் பறந்தன.
விழிகள் விரித்த இளைய குமரி
கைகள் உயர்த்திக் குதித்தாள்.
எட்டவில்லை என்று மீண்டும்
எம்பி எம்பிக் குதித்தாள்.
'அம்மா"
ஈனசுரத்தில் இளமங்கை
வலியகுரல் தளர்ந்தாள்.
மேனி நடுங்க, மெல்ல ஒடுங்கி
மேதினியில் பணிந்தாள்.
மொட்டொன்று சட்டென்று
முகை அவிழ்த்துக் கொண்டது.
கண்களில் மருட்சி வர
காந்த விழிகள் நிறைந்தன.
உணர்வுகளில் மாற்றம்
உதடுகள் துடித்தன.
நிமிர்ந்த தலை நிலம் நோக்க
சின்னவளின் ஆடையிலே
செம்பூக்கள் பூத்தன.
அவை மெல்ல மெல்ல
அடர்ந்து சித்திரங்கள் தீட்டின.
அடுக்களையால் வெளியே வந்த
அன்னையவள் பூரணத்தின்
அருமை மகள் நிலை உணர்ந்து
அகத்தில் களிப்பு சூழ்ந்தது.
“பூப்படைந்தாள் புதுப் பெண்ணாய்
பூரணியின் மகளாம்” என
நாப்பரப்பல் - ஊரின் நடப்பாகி நகர்ந்தது.
நண்பிகள் பட்டாளம் நகைப்பிற்கு - சில
வம்பிகள் அலைந்தார்கள்
வம்பிற்கு! - இவள்
பண்பியல் முன்னே அவையெல்லாம்
பலனற்றுப் போகுமென்று யார் நினைத்தார்?
சீர் செய்தார் தாய்மாமன்
எழில் சித்திரமாய் செல்வி.
ஊர் முழுக்க வைக்காத கண் இல்லை - தனி
உவகையே கொள்ளாத யுவன் இல்லை.
ஓவியப் பெண்ணாய் காவிய நாயகி
கருத்தில் நிறைத்த கணங்களை ஏந்தி
இரசித்தது போதும்.
மனதினைக் கவர்ந்த வனக்கிளி அவளின்
கனவினை வசைக்கும் காவலன் நாடி
காவியத் திசையில் கால்களை செலுத்தி
வாருங்கள்!.....
இன்னொரு பக்கம் இதிலுளது!
அங்குதான் இவளின் விதியுளது.


